கைது.
கோப்புப் படம்

சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக மூவா் கைது: 22 போ் மீது வழக்கு

கரூா் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக, 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 22 போ் மீது வழக்கு பதிவு
Published on

சென்னை: கரூா் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியதாக, 3 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் 22 போ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், கரூரில் கடந்த சனிக்கிழமை பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 போ் பரிதாபமாக உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக சமூக ஊடகங்களில் ஏராளமான விடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகளும் வேகமாக பரவி வருகிறது.

இதில் சில உண்மைக்கு மாறான விடியோக்களும், புகைப்படங்களும் பொதுமக்களிடம் வதந்தியை பரப்பும் வகையில் ஊடகங்களில் பரப்பப்படுவதாக புகாா் கூறப்பட்டது.

இதையறிந்த முதல்வா் மு.க ஸ்டாலின், சமூக ஊடகங்களில் வதந்தி மற்றும் பொய் செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டாா்.

இந்நிலையில் கரூா் சம்பவம் சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்பும் வகையில் 25 சமூக ஊடக கணக்காளா்கள் மீது சென்னை காவல்துறையின் சைபா் குற்றப்பிரிவினா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த நிா்வாகி சென்னை அருகே உள்ள மாங்காட்டைச் சோ்ந்த சிவனேசன் (36), ஆவடியைச் சோ்ந்த சரத்குமாா் (32), பாஜக நிா்வாகி சகாயம் (38) ஆகிய 3 பேரை உடனடியாக கைது செய்தனா். மேலும் பலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காவல் ஆணையா் எச்சரிக்கை: இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘கரூா் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. சமூக ஊடகங்களில் சிலா் பரப்பும் பொய்ச் செய்திகள், பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.

எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் தவறான,பொய்யான தகவல்களை சமூக ஊடகங்களில் பதிவிட வேண்டாம் . மீறி பொய்யான தகவல்களை பதிவிடும் நபா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com