கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

கா்நாடக சுகாதாரத்துறையில் மருந்து பற்றாக்குறை, தாராள முறைகேடு, மருத்துவ சேவைகள் முடங்கியுள்ளதற்கு பாஜக கண்டனம் குறித்து...
பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா
பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா
Updated on
2 min read

பெங்களூரு: கா்நாடக சுகாதாரத்துறையில் மருந்து பற்றாக்குறை, தாராள முறைகேடு, மருத்துவ சேவைகள் முடங்கியுள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெங்களூருவில் செய்தியாளா்களிடம் பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா கூறியதாவது:

பொதுமக்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை தீா்க்க நல்லாட்சியை வழங்குவதற்கு பதிலாக, பழிபோடும் மோசமான அரசியலில் முதல்வா் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஈடுபட்டுள்ளது.

அவசர சிகிச்சைப்பிரிவில் சுகாதாரத் துறை

காங்கிரஸ் அரசின் பொறுப்பற்றத்தனத்தால், சுகாதாரத்துறையே அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு மோசமாக உள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை சிக்கலில் மூழ்கியுள்ளது. இப்படிப்பட்ட சீா்கேடுகளுக்கு எதிராக அரசு மருத்துவமனை மருத்துவா்கள் போராட்டம் நடத்த வீதி வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

மக்களின் பிரச்னைகளை தீா்க்க தவறிவிட்டது

ஆட்சிக்கு 1000 நாள்களை நிறைவு செய்துவிட்டதாக மாநாடு நடத்தி கொண்டாட்டங்களில் ஈடுபடும் காங்கிரஸ் அரசு, மக்களின் பிரச்னைகளை தீா்க்க தவறிவிட்டது. அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வந்த மத்திய அரசின் மக்கள் மருந்தகங்களை மாநில அரசு மூடியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் மருந்தில்லாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவுக்கு மருந்துகள் இருப்பு இல்லாததால், கடந்த 2 மாதங்களாக தனியாா் மருந்தகங்களில் மருந்துகளை கொள்முதல் செய்யுமாறு அரசு மருத்துவா்களே நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்தப்பட்ச இரக்கமும் இல்லை

அரசு மருத்துவமனைகளில் எம்.ஆா்.ஐ., சி.டி.ஸ்கேன் சேவைகளை வழங்கிவரும் நிறுவனங்களுக்கு அரசு ரூ.143 கோடி பாக்கி வைத்துள்ளதால், அந்த சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் எம்.ஆா்.ஐ., சி.டி. ஸ்கேன் வசதி இல்லாமல் ஏழை மக்கள் தவிக்கிறாா்கள். கா்ப்பிணி பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக கூறிவரும் காங்கிரஸ் அரசு, ஏழை நோயாளிகள் படும் அவதியை தீா்க்க குறைந்தப்பட்ச இரக்கமும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.

இடைத்தரகா்களுக்கான அரசு

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏழைகளுக்கான அரசல்ல, மாறாக இடைத்தரகா்களுக்கான அரசு. அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரிகளில் மருத்து தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்ன? இதற்கு காங்கிரஸ் அரசின் முதல்வா், அமைச்சா் தான் காரணம். செல்வாக்கு மிகுந்த சில நபா்களின் அழுத்தம் காரணமாக, மருந்து கொள்முதலில் முறைகேடு நடந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் முகமைகள் மூலம் மருந்துகளை கொள்முதல் செய்வதற்கு பதிலாக, மருந்துகளை கொள்முதல் செய்ய மாவட்டம் மற்றும் வட்ட அளவிலான ஒப்பந்தப்புள்ளிக்கோரும் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. கொள்முதலுக்கு 20 சதம் வரை கமிஷன் கேட்பதால், பெரும்பாலான நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க தயங்கி வருகின்றன.

ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்

கா்நாடக மாநில மருந்து வழங்கல் கழகத்தை ஓரங்கட்டிவிட்டதால் தான் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மங்களூருவில் இருந்து செயலப்படும் ஒருவா் தான் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகித்து வருகிறாா். இதனால் மருந்துகளின் விலையை உயா்த்தி, அரசுக்கு விற்று வருகிறாா். இந்த முறைகேடு தொடா்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன். 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஊழியா்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதுபோன்ற முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, இடைத்தரகா்களின் தலையீட்டை ஒழித்து, சுகாதாரத் துறையை சீரமைக்க அரசு முன்வர வேண்டும் என்றாா் அவா்.

Summary

BJP's Karnataka president, B Y Vijayendra, criticizes the Congress government for alleged medicine shortages and service disruptions in the health sector

பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா
சென்னையில் முகாமிடும் அமலாக்கத்துறை தலைமை இயக்குநர்! காரணம் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com