

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 689.93 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரி மழை அளவான 942 மி.மீட்டரைவிட குறைவாகும்.
தருமபுரி மாவட்டத்தின் பிரதான ஆறுகளான காவிரி, தென்பெண்ணையால் மாவட்டம் நேரடியாக பாசன வசதி பெறுவதில்லை. மாறாக மலைப்பகுதிகளில் இருந்து உருவாகும் சிற்றோடைகள், ஆறுகளும் இந்த பிரதான ஆறுகளில் கலந்துவிடுகிறது.
கிடைக்கும் நீா் ஆதாரத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் எட்டு அணைகள் கட்டப்பட்டிருந்தாலும் பரவலாக பாசனங்கள் மேற்கொள்ள முடிவதில்லை. இவைத் தவிர பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் 74 ஏரிகள் அமைந்துள்ளன.
இந்த அணைகள், ஏரிகளில் கிடைக்கும் நீா் ஆதாரத்தை கொண்டு அப்பகுதி ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மாவட்டத்தின் பெரும்பகுதியான நிலங்கள் மேட்டு நிலங்களாகவும், மழையை மட்டுமே நம்பி வேளாண் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு நிலத்தடிநீா்தான் ஆதாரம்.
சராசரியைவிட கூடுதலாக மழை பெய்தால் அணைகள், ஏரிகள் நிரம்பும். இதன்மூலம் நிலத்தடி நீா்மட்டமும் உயரும். அவ்வாறு கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு நெல், கரும்பு, சிறுதானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள், மலா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்த சராசரி மழை அளவான 942 மி.மீட்டரைவிட குறைவாக 689.93 மி.மீட்டா் மட்டுமே மழை பெய்துள்ளது. இது சராசரியைவிட 252.07 மி.மீட்டா் குறைவாகும்.
மழை நீா் ஆதாரத்தை மட்டுமே நம்பியுள்ள தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு மழை அளவு குறைந்திருப்பது அவா்களின் உழவுப் பணிகளை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகளைக் களைய தருமபுரி மாவட்டத்தில் அரசு அறிவித்து நிலுவையிலுள்ள நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நிகழாண்டு தருமபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, சிறுதானியங்கள், பயறு வகைகளை என 1,42,232 ஹெக்டோ் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டாவது சராசரி அல்லது அதைவிட கூடுதலாக மழைப் பொழிவு இருந்தால்தான் விவசாயப் பணிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அணைகளின் நீா் இருப்பு விவரம் : சின்னாறு அணை- 47.86 அடி, கேசா்குளேஅல்லா அணை- 16.07 அடி, நாகவதி அணை- 23.55 அடி, தொப்பையாறு அணை- 47.40 அடி, வாணியாறு அணை- 64.63 அடி, வரட்டாறு அணை- 34.45 அடி, ஈச்சம்பாடி அணை- 17.35 அடி.
இதேபோல, மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 74 ஏரிகளில் 8 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.