

எவையெல்லாம் குற்றங்களாகக் கருதப்படுகின்றன? அந்தக் குற்றங்களுக்கான தண்டனைகளும், சட்டங்களும் என்னென்ன? மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் பற்றி இந்த தொடரில் விளக்கத்துடன் வெளியாகவிருக்கிறது.
சாலையில் சென்று கொண்டிருக்கிறோம் திடீரென நம்மைக் கடக்கும் பேருந்திலிருக்கும் பொறுப்பற்ற பயணி ஒருவர் போகிற போக்கில் காறி உமிழ்ந்து விட்டுப் போகிறார். இது குற்றமாகுமா? இதைப் பற்றிப் புகார் செய்வதென்றால் எங்கே செல்ல வேண்டும்? யாரை அணுக வேண்டும்? அணுகினாலும் இம்மாதிரியான தவறுகளுக்கு சட்டப்புத்தகங்களில் என்ன விதமான தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன? என்பதெல்லாம் மிஸ்டர் பொதுஜனத்துக்கு தெரிந்திருக்க வாய்ப்புக் குறைவுதான்.
ஒருவர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறார்... திடீரென சாலையின் இருமருங்கும் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட டிஜிட்டல் பேனரிலிருந்து நழுவி வரும் இரும்புச் சட்டமொன்று அவரைப் பதம் பார்க்கிறது. உயிருக்கு ஆபத்து இல்லை ஆனாலும் அதனால் உண்டான மிரட்சியால் அவருக்கு சிறு விபத்து நேர்ந்து ஓரிரு நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள நேர்கிறது. இது குற்றமா? குற்றமென்றால் யார் மீது புகாரளிப்பது? அப்படியே புகார் அளித்தாலும் தண்டனை பெற்றுத்தர சட்டத்தில் இடமுண்டா? மேலும் பாதிக்கப்பட்டவருக்கான நிவாரணங்கள் என்ன? என்பதைக் குறித்தெல்லாம் பெரும்பாலான மக்களுக்குத் தெரிந்திருப்பதில்லை.
மேலே சொன்ன சம்பவங்கள் எல்லாம் உதாரணங்களே. இது மாதிரியான பல சம்பவங்களைப் பட்டியலிடலாம்; முதலில் குற்றங்களையும் அவற்றைத் தடுப்பதற்கான சட்டங்களையும் பற்றி நாம் தெளிவாக அறிய வேண்டுமென்றால் குற்றம் என்றால் என்ன என்பது குறித்தான தெளிவும் நமக்கு இருக்க வேண்டும்.
குற்றம் என்றால் சட்ட நூல்படி அது பொது தவறு (பப்ளிக் ராங்) ஆகும். அப்படியான பொதுத் தவறுகள் இழைக்கப்படும் போது மக்களைப் பொறுத்தவரை பல சமயங்களில் அச்சத்தினாலோ, காவல்நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைய முடியாது என்ற அலுப்பினாலோ அல்லது இயல்பான கோழைத்தனம் அல்லது சோம்பேறித்தனத்தினாலோ பொது மக்கள் தங்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றிப் புகார் அளிக்காது கண்டு கொள்ளாமல் விடுவார்கள் எனில் அப்போது சட்டம் மதிப்பிழந்ததாக ஆகி விடாது.
அதே வேளை, அத்தகைய குற்றங்களுக்கெல்லாம் சட்டத்தில் தண்டனை இல்லை என்பதாகவும் ஆகி விடாது. எப்போதெல்லாம் சமுதாயத்தின் அல்லது தனி மனிதனின் அடிப்படை உரிமைகளுக்கோ, பாதுகாப்பு அம்சங்களுக்கோ குந்தகம் ஏற்படுத்தக்கூடிய செயல்கள் நிகழ்கின்றனவோ அவையெல்லாம் குற்றம் என்ற வகைப்பாட்டில்தான் அடங்குகின்றன. மக்களுக்கு அதைக் குறித்த தெளிவை ஏற்படுத்துவது தான் சட்டமும் விளக்கமும் எனும் தலைப்பிலமைந்த இந்தத் தொடரின் நோக்கம்.
எவையெல்லாம் குற்றங்களாகக் கருதப்படுகின்றன? அந்தக் குற்றங்களுக்கான தண்டனைகளும், சட்டங்களும் என்னென்ன? எனும் அடிப்படையில் முதல் பகுதியாக தமிழ்நாடு சூதாட்டச் சட்டம் குறித்துத் தெளிவாகப் பார்க்கலாம்.
இனி ஒவ்வொரு வாரமும் தினமணி இணையதளத்தின் ‘சட்டமும் விளக்கமும்’ என்ற தொடரில், நமது இந்தியச் சட்டங்களைப் பற்றி ஒரு அலசு அலசலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.