இந்தியப் பெண்களும் சொத்துரிமையும்! நீதியும் நியாயமும்-15
பல நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில் இந்தியப் பெண்கள் பெற்ற சொத்துரிமை பற்றி...

பெண்களுக்கு சொத்துரிமை - AI - Dinamani
‘சட்டம் செய்யாததை சப்தம் செய்யும்’ என்ற வழக்கு மொழி ஒன்று கிராமப்புறங்களில் இன்றைக்கும் புழக்கத்தில் இருக்கின்றது. சட்டத்தை மீற வேண்டும் என்பது அதன் பொருள் அல்ல. தேவையானதைக் கோரிப் பெற வேண்டும் என்பதுதான் இதன் பொருள். அதில் எவ்வளவு பெரிய உண்மை இருக்கின்றது என்பதை சமகாலத்தில் பல்வேறு பொருண்மைகளோடு நாம் பொருத்திப் பார்க்க முடியும். ஒரு குரல் பல குரலாக மாறும்போதுதான் அதன் வலிமைக்கு ஏற்ப புதிய சட்டங்கள் பிறக்கின்றன. “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள்” என்ற இயேசு பெருமான் போதனையின் மறுவடிவம்தான் அந்த வழக்குமொழி. இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பெண்களுக்கான பல்வேறு உரிமைகள் எளிதில் கிடைத்தவை அல்ல; சப்தம்போட்டு போராடிப் பெற்றவைதான்.
பெண்களுக்கான சொத்துரிமை மறுப்பு என்பது பெண்ணடிமைத்தனத்தின் மறுபக்கம். அது ஒரு நீண்ட துயர வரலாற்றைக் கொண்டது. சொத்து இல்லாதவர்களின் வாழ்வு ஏளனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம், பார்சி என ஒவ்வொரு மதமும் பெண்களின் சொத்துரிமைக்கான வரையறையைத் தனித்தனியே வைத்திருக்கின்றன. இந்துக்களுக்கான சொத்துரிமை மற்றும் வாரிசுரிமையானது மதம் சார்ந்த சட்டங்களான ‘மிதாக்சரா’ (Mitakshara) மற்றும் ‘தாயபாக’ (Dayabhaga) முறையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. நீண்ட காலம் அதுதான் நடைமுறையில் இருந்து வந்தது.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலம் தவிர இதர மாநிலங்களில் ‘மிதாக்சரா’ வழக்கம் நடைமுறையில் இருந்தது. ‘மிதாக்சரா’ முறைப்படி ஒரு கூட்டுக்குடும்பத்தில் பிறக்கும் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பிறப்பின் அடிப்படையில் பூர்விகச் சொத்தில் (Ancestral Property) பங்கு கிடைத்தது. பெண்கள் அந்தக் குடும்பத்தில் ஒருவராக மட்டுமே கருதப்படுவார்கள்; கூட்டுக் குடும்பச் சொத்தின் பங்குதாரராகக் (Coparceners) கருதப்படுவதில்லை.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் ‘தாயபாக’ நடைமுறை வழக்கத்தில் இருந்தது. ‘தாயபாக’ நடைமுறையில் வாரிசுகளுக்கு பிறப்பால் சொத்துரிமை கிடையாது. தந்தை இறந்த பிறகுதான் வாரிசுகளுக்குச் சொத்துரிமை கிடைக்கின்றது. இதுபோன்ற மதம் சார்ந்த சட்ட நடைமுறைகளால், மனித இனத்தில் சரிபாதியாக வாழ்ந்து வரும் பெண்களுக்கான சொத்துரிமை நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. பெண்களுக்கான சொத்துரிமைக் கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தபோதிலும், ‘இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956’, பெண்களுக்கான பொருளாதாரச் சமநிலையை உருவாக்கவில்லை. அதில் உள்ள கூறுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானவையாகவே இருந்து வந்தன. இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-இன்படி சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். பிரிவு 15-இன்படி பாலின பாகுபாடு காட்டக் கூடாது. ஆனால், இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் பெண்களுக்கான பாலினப் பாகுபாடு நீடித்திருந்தது. அதற்கெதிரான அறக்குரல் தமிழ்நாட்டில் இருந்துதான் முதலில் ஒலித்தது.
17.2.1929 அன்று செங்கல்பட்டில் முதலாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கத்தில் சென்னை தியாகராய நகர் சதுக்கத்தில் இருந்து செங்கல்பட்டு வரை சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஊர்வலம் நடைபெற்றது. டபிள்யு.பி.ஏ. சௌந்தரபாண்டியன் நாடார் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டை, அப்போதைய முதல்வர் டாக்டர் பி. சுப்பராயன் தொடங்கி வைத்துள்ளார். ராவ் பகதூர் எம்.கே.ரெட்டி, பி.டி. ராஜன், எஸ். முத்தையா முதலியார், திவான் பகதூர் எம். கிருஷ்ண நாயர், முகமது உஸ்மான் சாகிப் பகதூர், ராகவேந்திரா ராவ், ஏ. ராமசாமி முதலியார், ஈ.வே. ராமசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில்தான் ‘பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய அளவில் இந்தத் தீர்மானம் கவனம் பெற்றது; முதல் தீர்மானமும் இதுதான்.
‘‘This Conference declares its conviction that women should be given the same rights to property and inheritance as men’ என்ற இந்தத் தீர்மானத்தை மாநாட்டின் முதலாவது தீர்மானமாக முன்மொழிந்தவர் சபாபதி முதலியார். இந்தத் தீர்மானம் இந்தியாவில் பெண்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை விதைத்தது; புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. நாடு முழுவதும் விவாதமானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 1986-இல் ஆந்திரப் பிரதேசம் பெண்களுக்கான சொத்துரிமையை சட்டமாக்கியது. தமிழ்நாட்டில் அதுவரை சட்டமாகவில்லை. தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டது. செங்கல்பட்டு மாநாட்டிற்குப் பின்னர் 60 ஆண்டுகள் கடந்துவிட்டது.
1989 மே 6, தமிழ்நாடு 9 ஆவது சட்டப்பேரவையின் 100ஆவது நாள். அப்போது முதலமைச்சராக இருந்தவர் மு. கருணாநிதி. பேரவைத் தலைவராக இருந்தவர் டாக்டர் சாத்தையா என்ற தமிழ்க்குடிமகன். சட்ட அமைச்சராக இருந்த எஸ்.ஜே. சாதிக்பாட்சா, ‘இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989’ முன்வடிவைப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பல்வேறு உறுப்பினர்கள் பேசி உள்ளனர். விவாதத்தின் இறுதியில் சட்ட அமைச்சர் எஸ்.ஜே. சாதிக் பாட்சா பதில் அளித்துப் பேசும்போது,
(சட்டப்பேரவைக் குறிப்பில் உள்ளவாறு) “ 1956ஆம் ஆண்டு ‘இந்து சக்சஷன் ஆக்ட்’ கொண்டுவரப்பட்டது. அந்த 1956ஆம் ஆண்டு சட்டத்திற்கு முன் நிலைமை என்னவென்றால், ஒரு குடும்பத்தில் தகப்பனார், முதல் மகன், இரண்டாம் மகன், மூன்றாம் மகன் ஆகியோரும் ஒரு மகளும் இருப்பார்களானால் - ‘1956 இந்து சக்சஷன் ஆக்ட்’ வருவதற்கு முன்னால் - சொத்தை பங்கிட்டுக் கொள்ளும்போது, தகப்பனார், 3 மகன்கள், இந்த நான்கு பேர் மாத்திரம்தான் பங்கிட்டுக்கொள்ள முடியும். அதனால் ஒவ்வொருவருக்கும் கால் பங்கு கிடைக்கும்.
தகப்பனாருக்கு ¼ பங்கு. மூன்று மகன்களுக்கும் மொத்தமாக ¾ பங்கு - அதாவது ஒவ்வொருவருக்கும் ¼ பங்கு. அப்படித்தான் பிரித்துக்கொள்ள முடியும். மகளைப் பொறுத்தவரை எவ்விதமான உரிமையும் கிடையாது. சொத்தில் பாத்தியதை இல்லை. ஏனென்றால், இந்து கோ-பார்ஸனரியில் பெண்களை உறுப்பினராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் 1956 -இல் ‘இந்து சக்சஷன் ஆக்ட்’ அமலுக்கு வந்த பிறகு நிலைமை என்னவென்றால் - அதே உதாரணத்தை எடுத்துக்கொண்டால், அதாவது ஒரு தகப்பனார், 3 மகன்கள், ஒரு மகள் என்று வைத்துக்கொண்டால் - ‘ஜாயிண்ட்பேமிலி பிராப்பர்ட்டி’யில் - தகப்பனார் எந்த உயில் சாசனமும் எழுதி வைக்காமல் இறந்து விட்டால் - தகப்பனாருக்கு வருகின்ற ¼ பங்கில் எல்லோருக்கும் சம பங்கு - அதாவது மூன்று மகன்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ¼ பங்கு - அதாவது மொத்தம் ¾ பங்கு, தகப்பனாருக்குக் கிடைக்கின்ற ¼ பங்கில் மகளுக்கு நான்கில் ஒரு பங்கு அதாவது 16-ல் 1 பங்கு மகளுக்குக் கிடைக்கிறது. இது 1956 ஆம் ஆண்டு ‘இந்து சக்சஷன் ஆக்ட்’டுக்குப் பிறகு ஏற்பட்ட நிலைமை.
இப்போது நாம் கொண்டு வந்திருக்கின்ற சட்டத்திற்குப் பிறகு என்ன நிலைமை என்னவென்றால் - பெண் கூட்டுக் குடும்பத்தில் ஓர் உறுப்பினர் ஆகிறார். எப்படி மகன்களுக்குக் கிடைக்கிறதோ அப்படி ஓர் உரிமை பெண்ணுக்கும் கிடைக்கிறது. அதன் மூலமாக ஒரு தந்தை, 3 மகன்கள், ஒரு மகள் என்று ஒரு குடும்பத்தில் இருந்தால், இப்போது 5 பேருக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. அதனால் தகப்பனாருக்கு ஐந்தில் ஒரு பங்கு - மகன்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஐந்தில் ஒரு பங்கு - பெண்ணுக்கும் ஐந்தில் ஒரு பங்கு என்ற முறையில் இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலமாக அளிக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று விளக்கம் அளித்துப் பேசியிருக்கின்றார்.
விவாதத்திற்குப் பிறகு ‘இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம், 1989’ தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேறியது. இந்தச் சட்டத்தை கொண்டுவருவோம் என்று பேரவையில் அறிவித்த நாளான 25.03.1989 முதல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ‘இந்து வாரிசு உரிமைச் சட்டம், 1956’ என்பது, மத்திய சட்டமாக இருந்தபோதிலும் அது பொதுப்பட்டியலில் இருந்ததால் மாநில அரசால் திருத்தம் கொண்டுவர முடிந்தது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டத்தின் மூலம் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் பிரிவுகள் 29A, 29B, 29C ஆகிய பிரிவுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன.
தமிழக அரசு புதிதாக சேர்த்த பிரிவுகள் வாயிலாக, கூட்டுக் குடும்பத்தில் பிறக்கும் மகளுக்கு, மகனைப் போலவே பிறப்பிலேயே பூர்விகச் சொத்தில் (Coparcener by birth) சம பங்கு கிடைக்கத்தக்கது ஆகும். சொத்தில் சம உரிமை கிடைப்பதால் குடும்பத்தின் நியாயமான கடன்களிலும் மகளுக்குச் சம பங்கு பொறுப்பு உண்டு. மேலும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே (25.03.1989) திருமணமான பெண்களுக்குப் பூர்விகச் சொத்தில் பங்கு இல்லை. 25.03.1989-க்கு முன்னர் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவினை நடைபெற்றிருந்தால் அதனை மாற்ற முடியாது. இந்தச் சட்டத்திருத்தம் தமிழக அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்தது.
“பெண்களுக்கான சொத்துரிமை நாடு முழுவதும் ஒரே மாதிரி நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று, பல்வேறு மகளிர் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிவந்தனர். ஆண்களைப் போல பெண்களுக்கும் சம அளவில் பாகம் கொடுக்க வேண்டும் என்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட மத்திய அரசு, ‘இந்து வாரிசுரிமை (திருத்தச்) சட்டம், 2005’ கொண்டு வந்தது. இந்தச் சட்டம் 09.09.2005 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் மட்டுமே பூர்விகச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை என்று இருந்து வந்த நிலை மாறியது.
தமிழ்நாடு அரசு கொண்டுவந்த திருத்தச் சட்டத்தைவிட, மத்திய அரசின் திருத்தச் சட்டம் மேம்பட்டதாகவும் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் முழுச் சொத்துரிமை வழங்குவதாகவும் அமைந்திருந்தது. இந்தியாவில் எந்தப் பகுதியில் வசிக்கும் இந்துப் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கும் பூர்விகச் சொத்தில் சமபங்கு கிடைப்பதற்கு மத்திய அரசின் ‘இந்து வாரிசுரிமை (திருத்தச்) சட்டம், 2005’ வழிவகை செய்கிறது.
மத்திய அரசின் ‘இந்து வாரிசுரிமை (திருத்தச்) சட்டம், 2005’ இன்படி, தமிழ்நாடு சட்டத்தில் இருந்த ‘1989-க்கு முன் திருமணமானவர்களுக்குப் பொருந்தாது’ என்ற தடை நீக்கப்பட்டது. ஓர் இந்துக் கூட்டுக்குடும்பத்தின் மகள் எப்போது திருமணம் செய்துகொண்டிருந்தாலும் அவர் பிறப்பிலேயே கூட்டுக்குடும்பத்தின் பங்குதாரர் (Coparcener) ஆகிவிடுகின்றார். இதன் மூலம் குடியிருப்பு வீடு மற்றும் விவசாய நிலத்திலும் பெண்கள் பாகம் கோர முடியும். பூர்விகச் சொத்தில் உள்ள தங்களது பாகத்தை விருப்பமானவர்களுக்கு விருப்புறுதி ஆவணம் எழுதி வைக்க முடியும்.
‘இந்து வாரிசுரிமை (திருத்தச்) சட்டம், 2005’ நடைமுறைக்கு வந்த பிறகு பல்வேறு வழக்குகளில் ஏற்பட்ட நடைமுறைக் குழப்பங்கள் அனைத்தையும் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் தீர்த்துவைத்துள்ளது. குறிப்பாக, Vineeta Sharma Vs Rakesh Sharama - 2020 என்ற வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பு, இந்தியப் பெண்கள் வரலாற்றில் சொத்துரிமைக்கான மைல் கல்லாக அமைந்துள்ளது.
9.9.2005-க்குப் பிறகு, இந்து கூட்டுக்குடும்பத்தின் மகள் பிறப்பிலேயே கூட்டுப் பங்குதாரர் ஆகிவிடுகின்றார். அவர் எப்போது திருமணம் செய்தார், அவரது தந்தை எப்போது மறைந்தார் என்ற கேள்விக்கே இடமில்லை. பிறந்தவுடன் கூட்டுப் பங்குதாரர் (Coparcener) ஆகிவிடுகின்றார்; ஆண்களைப் போலவே பெண்களும் பிறப்பால் சொத்துரிமை பெற்றுவிடுகின்றனர் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திவிட்டது. இந்தச் சட்டத்திற்கு முன்மேவு அதிகாரம் (Retrospective) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, 9.9.2005 க்கு முன்னர் பிறந்தவர்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
குடும்ப வாழ்க்கையில் பெண்களுக்கு எதிரான பல்வேறு குற்றங்கள் குறையவும், பெண்கள் தன்னம்பிக்கை பெறுவதற்கும் சொத்துரிமைச் சட்டம் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. இந்துப் பெண்கள் அல்லாத கிறிஸ்துவ மற்றும் பார்சி மதத்தைச் சேர்ந்த பெண்கள் இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி (Indian Succession Act, 1925) சொத்துரிமை பெறுகின்றனர். கணவன் இறந்தால் மனைவிக்கு மூன்றில் ஒரு பங்கு சொத்தும், மீதமுள்ள சொத்துகள் பிள்ளைகளுக்குச் சம அளவிலும் கிடைக்கும்.
இஸ்லாமியச் சட்டத்தில் கூட்டுக் குடும்பச் சொத்து என்ற முறை இல்லை. சுயமாகச் சம்பாதித்த சொத்து, பரம்பரைச் சொத்து என அனைத்தும் ஒரேவிதமாக வேறுபாடு இன்றி பிரிக்கப்படும். மகனுக்குக் கிடைக்கும் பங்கில் மகளுக்குப் பகுதியாகக் கிடைக்கும்.
இந்தியாவில் பெண்களுக்கான சொத்துரிமை என்பது வெறும் பணம் பொருள் சார்ந்த ஒன்றாக முடிந்துவிடுவதில்லை. அதில்தான், அவர்களின் நிலையான வாழ்க்கையும் நம்பிக்கையான எதிர்காலமும் அடங்கியிருக்கின்றது. அந்த இடத்தை அடைவதற்கு இந்தியப் பெண்கள் கடந்து வந்த பாதை சுமைகள் நிறைந்தது; வலிகள் நிறைந்தது. பல நூறு ஆண்டுகளைக் கடந்த நிலையில்தான் இந்தியப் பெண்கள் சொத்துரிமை என்னும் நம்பிக்கை ஒளியைக் கைக்கொண்டிருக்கின்றார்கள்.
நீதிக்கான குரல் ஒலிக்கும்...
நியாயத்திற்கான பயணம் தொடரும்...
கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்
Tamilmani Arumugam, Advocate.
advocatetamilmani@gmail.com
Summary
It is only after the passage of many centuries that the women of our country have come to embrace the hopeful prospect of property rights.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

