Enable Javscript for better performance
JEYAMOHAN'S KANYAKUMARI BOOK REVIEW|ஜெயமோகனின் ‘கன்யாகுமரி’ நாவல் விமர்சனம்!- Dinamani

சுடச்சுட

  ஜெயமோகனின் ‘கன்யாகுமரி’ நாவல் விமர்சனம்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 30th October 2017 04:35 PM  |   அ+அ அ-   |    |  

  kanyakumari_novel_review

   

  ஒரு வேலை அதீதமாய் தன்னில் மூழ்கிப் போனவர்களுக்கு மட்டுமேனும் இந்தநாவலை வாசித்து முடித்ததும் காதோரமாய் கடலின் இரைச்சலைக் காட்டிலும் அதிகமாய் மனதின் இரைச்சல் கேட்கத் துவங்கலாம். இந்த நாவலுக்குரிய வெற்றியெனக் கூறலாம் அதை.

  சதா தன்னியல்பற்று தனக்குள் பேசிக் கொண்டே இருக்கும் ஒரு மனிதன் (ரவி) கதையை நகர்த்திக் கொண்டு போகிறான். இங்கு கதை என்பதை விட அவன் தனக்குள் பேசிக்கொண்டே கடக்க முடியாமல் கனத்துச் சுமக்கும் சம்பவங்களின் கோர்வை என்பது பொருந்திப் போகலாம்.

  விமலாவை, பிரவீனாவை, ரமணியை, ஷைலஜாவைப் புரிந்து கொள்ள முடிவதை வாசிப்பின் ஆழம் என்று சப்பைக் கட்டு கட்டினாலும் இந்தப் பெண்கள் புனிதம், தெய்வீகம், செண்டிமெண்ட் etc ..etc கான்செப்டில் சிக்கிக் கொள்ளாமல் நழுவிச் செல்வதை எந்த ஆட்சேபமுமின்றி நீடித்த புன்னகையுடன் கடக்கமுடிகிறது.

  இவர்களில் கன்யாகுமாரி யார்?

  கன்யாகுமரியின் ஐதீகக் கதையை பின்புலமாக வைத்துக் கொண்டு இந்தக் கதையை எழுதியதாக ஜெயமோகன் தன் குறிப்பில் கூறி இருந்தாலும் கூட, இது ஒட்டுமொத்தமாய் பெண்களின் அக மனதை எப்படியேனும் வென்று விட எத்தனிக்கும் ஒருமனிதனின் தனிப்பட்ட துக்கமாகவே மனதில் பதிகிறது.

  பெண் சதை தாண்டி யோசிக்கப் பட்டிருக்கிறாள் இங்கு.

  ஆனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை, அவளை வெல்ல முடியாத ஆணின் இயலாமை, அவனை தன்னியல்பாய் சுழலுக்குள் தள்ளி சுளித்து மறையுமிடத்தில் முடிகிறது கதை.

  கன்யாகுமாரி அவள் ஒரு போதும் எந்த ஆணாலும் வெற்றி கொள்ளப்படப் போவதும் இல்லை, அவளது தடைகள், மறுப்புகள் ஏதுமின்றியே படைப்பின் மாயாஜாலம் ஆடும் கண்ணாமூச்சு இது.

  ஒரு ஆண் வெறுமே ஆணாக மட்டுமே இருக்கும் போது பெண் குறித்த அவனது கண்ணோட்டம் படு இழிவானதாகவும் இருக்க முடிந்திருக்கிறது, அவனே தந்தை எனும் நிலையில் பெண்ணைக் குறித்து யோசிக்கையில் அவர்களைப் பாதுகாக்கும் கடமையினால் சதா பருந்திடம் இருந்து குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழி நிலைக்கு துரத்தப்பட்டு விடுகிறான். தலைகீழ் மாற்றம் தான், ஆனாலும் இதுசில கால இடைவெளிகளில் நிகழ்ந்து விடுகிறது என்பதே நிஜம். இதற்கொருஉதாரணம் இந்த நாவலில் வரும் பெத்தேல்புரம் ஸ்டீபன் .

  ரவியை ஒரு சாதாரண மனிதனாக மதிக்கத் தோன்றவில்லை, படு ஆபத்தான சூழ்நிலைப்பிராணியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறான். எந்நேரமும் அதென்ன மனஉளைச்சலோ?! அறிவு ஜீவியாகவும் இருக்க வேண்டும், அழகாகவும் இருக்கவேண்டும் மனைவி என்ற எதிர்பார்ப்பு பொதுப் புத்தி என்று தவிர்த்துவிட்டாலும் கூட; கதைப் படி என்ன தான் சாதனையாள இயக்குனராக இருந்தாலும் இத்தனை துஷ்ட சிந்தனை தேவை இல்லை என்றே எண்ண முடிகிறது. அடுத்தொரு இமாலய வெற்றியைக் கொடுத்தே ஆக வேண்டிய நிர்பந்தம் என்று அவனது சலனங்களை சமாளிக்கத் தேவை இல்லை. இந்த நாவல் முழுக்கவுமே அவன் தன்னைப் பெரிய இவனாகத்தான் நினைத்துக் கொண்டு உலவிக் கொண்டிருக்கிறான்.

  “இது கன்யாகுமரி தானா? கன்யாகுமரி தான்; ஆனால் அவனுடன் சேர்ந்து அந்நகரையே கை விட்டு விட்டு மற்ற அத்தனை பெரும் சென்றுவிட்டிருந்தார்கள், வெளியேறிவிட வேண்டும் என்ற வேகம் எழுந்த போது தான்... பாதைகளோ, வண்டிகளோ இல்லாமல் அங்கு அகப்பட்டுக் கொண்டு விட்டதை அறிந்தான்”

  இப்படி அவன் அகப்பட்டுக் கொண்டு திணறுவதாகக் கதை முடிகையில் எதிர்பார்த்தது போலவே சந்தோசம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

  நாவலில் ஜெயமோகனின் சில வார்த்தைப் பிரயோகங்களும், அவற்றின் பயன்பாடுகளும் மிக்க ஆழமானவை. தன் கல்லூரிக் கால தோழியும், காதலியுமான விமலாவின் பாதங்களைப் பற்றி ரவி நினைத்துப் பார்க்கையில் இப்படி ஒருவாக்கியம் ;

  “ஆழத்து வேர் போன்ற அசாதாரமான வெண்ணிறம்”

  அவளைப் பற்றிய கற்பனைகளில் எல்லாம் நர்கீஸ் போல அவளை எண்ணிக் கொள்வது. அப்படியானால் ஆரம்பத்தில் இருந்தே ரவி, விமலாவின் தோற்றத்தில் நர்கீஸை தான் காதலித்திருக்கிறான். என்ன ஒரு ஏமாற்றுத் தனம்! தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதின் உச்சம் இது. ஆனால் எல்லோருக்கும் அப்படித்தான் வாய்க்கிறது. இது உலகநியதி.

  நாவல் சொல்ல விரும்பியது பெண்ணின் களங்கமற்ற தன்மையாக இருக்குமென்று நினைக்கிறேன். ஒரு சிறுமியாக, சகோதரியாக, காதலியாக, மகளாக காலத்திற்குதக பெண்கள் கொள்ளும் வேஷங்களில் ஏதோ ஒரு பொழுதில் அவளது நிஷ்களங்கம் தரிசிக்கப்படுகிறது, அந்த மகா தரிசனத்தை ஆண்... அவன் எந்த உறவுமுறை கொண்டவனாக இருந்த போதிலும் அவனால் அந்த நிஷ்களங்கத்தின் பரிசுத்தத்தின் முன் இயல்பாய் இருக்க முடிவதில்லை, அந்தப் பெண்ணை அவன் வெற்றி கொள்ள நினைக்கிறான். முடியாத பட்சத்தில் அவளின்பால் அதீத வெறுப்பை அடைகிறான். மீண்டும் அன்பைத் தேக்கி குழந்தையாகி அவளிடமே சரணாகதி ஆகிறான், இந்தச் சக்கரத்தின் சுழற்சியில் சிக்கிக் கொண்டு வெளிவரத் தெரியாமல் பைத்தியமாகிறான்.

  இந்து புராணங்களில் இதனால் தான் சிவனை "பித்தா பிறை சூடி " என்றெல்லாம் பாடி வைத்தார்களோ என்னவோ?!

  தேவியை மணந்து கொள்ள தாணுமாலயன் வந்து கொண்டிருக்கிறார்! யுகம் யுகமாய் நீண்டு கொண்டிருக்கும் பயணம் அது... இன்னும் முடியக்காணோம்... தேவி தாணுமாலயனை எதிர் நோக்கி ஒற்றைக் கல் மூக்குத்தி மினுங்க கடற்கரை மொட்டைப் பாறையில் அர்த்த ராத்திரிகள் தோறும் தவமிருக்கிறாளாம்.

  தாணுமாலயன் சிவன், விஷ்ணு, பிரம்மா மூன்றும் கலந்த திரிசக்தி ரூபம். ஆக்கல், அழித்தல், காத்தல் மூன்றையும் உள்ளடக்கிக் கொண்ட க்ரியா சக்தி அவன்... என்கிறார் ஜெயமோகன். எத்தனை திறமைகள் இருந்தும் பாவம் இன்னும் தேவியை ஆட்கொள்ளக் காணோம்.

  காமம்... 

  யாமம் நாவலின் ஓரிடத்தில் எஸ்ரா இப்படி எழுதி இருக்கிறார், முசாபர் அலி அத்தர் யாமம் தயாரிக்கும் கலையை தனக்கடுத்த சந்ததிக்கும் கடத்தும் நோக்கத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெறுவதற்காக தன்னிலும் மிக இளைய சுரையா என்ற பெண்ணை மூன்றாம் தாரமாக மணந்து அழைத்து வருமிடத்தில்... அவளோடான கூடலில் சுரையா அந்த நிகழ்வை கணவனுடனான காமம் தனக்கு மூக்கை சீந்திப் போடுவதைப் போல தான் என்று நினைத்துக் கொள்வதாக ஒரு வரி. சுரையாவுக்கு வயிற்றுப் பாடே பிரதானமாக இருத்தலைப் போல இங்கு கன்யாகுமரியில் பிரவீனாவுக்கு தான் விருது வாங்கும் நடிகையாவதே பிரதானம். அதற்காக ரவியைப் புறம் தள்ளி வேணு கோபாலனுடன் சென்று விடுகிறாள் அவள்.

  காமம் பெண்களின் கன்னிமையை பாதிப்பதில்லை, அவள் எதற்காகவோ நீண்ட காத்திருப்பில் தன்னைக் கரைத்துக் கொண்டிருக்கிறாள். இதை மிக அந்தரங்கமான ஓரிடத்தில் அவள் பாதுகாத்து வைத்திருக்க கூடும், அந்த அந்தரங்கத்தை அறிந்து கொள்ள முடியாமல் சதா தோற்றுப் போகும் நிலையில் தான் ஆண் மிக்க குழப்பத்திற்கு ஆளாகிறான். பெண்ணின் மீதான அவனின் வெறுப்பும் விருப்பும் மாறி மாறி இங்கிருந்து தொடங்கி சதா இளைப்பாறுதல் இன்றி சுழன்றடிக்க ஆரம்பிக்கிறது.

  இந்த நாவலை கி.ரா வின் கன்னிமை சிறுகதையின் பாதிப்பில் எழுதியதாக ஜெயமோகன் தன் முன்னுரையில் கூறி இருக்கிறார். ஒப்பிட்டுப் பார்த்து ஏற்றுக் கொள்ள முடிகிறது. கி.ரா வின் நாச்சியாருக்கும் ஜெயமோகனின் விமலாவுக்கும்... .ஏன் பிரவீணாவுக்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசங்கள் இல்லை... மனதளவில் அவர்கள் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்களின் அடிப்படையில்.

  இந்த நாவலில் ஆட்சேபிக்கத் தகுந்த ஒரே ஒரு இடமென்றால் அது இது தான்.

  “அழகில்லாத பெண்கள், ஆண்களை குரூரமானவர்களாக, அற்பமானவர்களாக, நீதியுணர்வே இல்லாதவர்களாக ஆக்கும் விதத்திற்கு இணையான ஒன்றைக் கூற வேண்டுமெனில்; மான் குட்டியை அடித்துக் கிழித்துத் தின்னும் சிங்கத்தின் இயற்கையான குரூரத்தை தான்."

  கூடவே கன்யாகுமரியின் ஐதீகம் தேவி தாணுமாலயனுக்காக கடற்கரையில் காத்திருப்பதாகச் சொல்லப் பட்டிருப்பது சரி தான், ஆனால் தாணுமாலயன் ஏன் அவளைக் காக்க வைத்தார்? இன்னும் வராமல் போனதற்கு காரணக் கதைகள் ஏதுமில்லையா? அது சொல்லப் படவில்லை இங்கே. அதனால் ஒரு முற்றுப் பெறாத தன்மை. ஒரு வேளை எனக்கு மட்டும் தான் அந்த ஐதீகக் கதை முழுமையாகத் தெரியாமலிருக்கிறதோ என்னவோ! கதை தெரிந்தவர்கள் யாரேனும் ஜெயமோகன் இந்தநாவலில் சொல்லாமல் விட்டதை வந்து சொல்லி முடிக்கலாம்

  நாவல் - கன்யாகுமாரி
  ஆசிரியர் - ஜெயமோகன்
  பதிப்பகம் - கவிதா பப்ளிகேசன் வெளியீடு
  விலை - ரூ 90
  முகவரி: நம்பர் 8, மாசிலாமணி தெரு, டி.நகர், சென்னை- 600017, பாண்டி பஜார் பிரில்லியண்ட் டுடோரியல் அருகில்.
  தொடர்புக்கு: www.kavithapublication.in


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp