பா. ராகவனின் புதிய நாவல் - பூனைக்கதை

சுல்தான் தமிழகத்துக்குப் படையெடுத்து வந்துவிட்டால் அனைத்து கலைகளும் அழிந்து மண்ணோடு மண்ணாகிவிடும்...
பா. ராகவனின் புதிய நாவல் - பூனைக்கதை

திரைப்பட உலகத்தைக் குறித்துத் தமிழில் நிறைய நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களின் உலகம் இதுவரை பதிவானதில்லை. ‘பூனைக்கதை’ அதைச் செய்கிறது. 

திரைப்படம் – தொலைக்காட்சித் தொடர்கள் இரண்டுமே பொதுவாகக் கலைத்துறை என்று அழைக்கப்பட்டாலும் இரண்டின் நடைமுறைகள் வேறு. செயல்பாட்டு விதம் வேறு. பொருளாதாரம் வேறு. புழங்குவோர் மனநிலை முற்றிலும் வேறு. தொலைக்காட்சித் தொடர்களின் உலகில் வாழும் மனிதர்களின் வாழ்வின் ஊடாக, இக்கலை உலகின் கண்ணுக்குத் தென்படாத இடுக்குகளை வெளிச்சமிடுகிறது இந்நாவல். 

இந்தக் கதையை ஒரு பூனை சொல்கிறது. அது இன்று வாழும் பூனையல்ல. என்றும் வாழும் பூனை.

ஔரங்கசீப்பின் கோல்கொண்டா படையெடுப்பின் சமயம், தென் தமிழகத்தில் ஒரு சமஸ்தானத்துக்குள் வசிக்கும் ஆறு கலைஞர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு நிலவறைக்குள் அனுப்பிவைக்கிறார் ஒரு ஜமீந்தார். சுல்தான் தமிழகத்துக்குப் படையெடுத்து வந்துவிட்டால் அனைத்து கலைகளும் அழிந்து மண்ணோடு மண்ணாகிவிடும் என்கிற அச்சம். பிந்தைய தலைமுறைகளுக்காவது கலைகளின் மிச்சத்தை விட்டுச் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் அந்த ஆறு கலைஞர்களும் இணைந்து ஒரு பெரும் புத்தகத்தை எழுதத் தொடங்குகிறார்கள். எந்தக் காலத்தில் யார் எடுத்து வாசித்தாலும் இம்மண்ணில் உருவாகி, வேர்விட்டு, வளர்ந்த பெரும் கலைகளின் இலக்கணம் விளங்கும்படியான புத்தகம். 

இந்தக் கதையைச் சொல்லும் பூனையின் மூலம் அந்தப் பெரும் புத்தகம் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கு எடுத்து வரப்படுகிறது. மாய யதார்த்த எழுத்தின் வசீகரச் சாத்தியங்களை முற்றிலும் பயன்படுத்திக்கொள்ளும் இந்நாவல் விவரிக்கும் கலையுலகம் அசலானது. அரிதாரங்கள் அற்றது. இருண்மையின் அடியாழங்களில் பூனையின் கண் பாய்ச்சும் வெளிச்சம் உக்கிரமானது. 

மதிப்பீடுகளின் தடமாற்றத்துக்கு எதிராக யுத்தத்துக்கு நிற்கும் பூனை ஒரு கட்டத்தில் நீங்களாகத் தெரிவீர்கள். 

ஆனால் அது நீங்களல்ல. நீங்கள் மட்டுமல்ல.

பூனைக்கதை - பா. ராகவன்
பதிப்பகம் - கிழக்கு
விலை ரூ. 350. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com