Enable Javscript for better performance
மனோஜ் குரூர் எழுதியுள்ள 'நிலம் பூத்து மலர்ந்த  நாள்’நாவல் அறிமுகம்- Dinamani

சுடச்சுட

  

  மனோஜ் குரூர் எழுதியுள்ள 'நிலம் பூத்து மலர்ந்த  நாள்’நாவல் அறிமுகம் 

  By ராம் முரளி  |   Published on : 26th January 2018 06:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nilam-pooththu-malarntha-naal_820

   

  வறுமை தளைத்திருக்கும் நிலமொன்றிலிருந்து, பொருள் தேடி நிலத்தில் இறங்கி பயணிக்கும் பண்ணிசைக்கும் பாணர்களும், உடன் வருகின்ற நடனக் கலை புரியும் கூத்தர்களும் எதிர்கொள்கின்ற சம்பவங்களை பின் தொடர்ந்து செல்லும், மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதியுள்ள நாவலான ’நிலம் பூத்து மலர்ந்த நாள்’ தமிழக சங்க கால வாழ்க்கை சூழலுக்குள் குறுக்குவெட்டாக ஊடுருவி பயணம் செய்கிறது. தமது கலைத்திறனை அரங்கேற்றி பொன்னும் பொருளும் சேகரம் செய்துக்கொள்ளும் இக்கூட்டதாருக்கு, முன்காலத்தில் தொலைந்துப் போயிருக்கிற, பாணர் கூட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கின்ற 'கொலும்பன்’ மகனான மயிலனை தேடி அடைய வேண்டுமென்கின்ற நோக்கமும் உடன் சேர்ந்துக்கொள்கிறது. நாவலின் முதல் பகுதியே கொலும்பன் கண்ணோட்டத்தில், அவனது வாய்வழி கதையாக நமக்கு சொல்லப்படுவதுதான்.

  அடர் மழை நாளொன்றில், ஆறுகளில் வெள்ளம் பெருகியோடும் தருணத்தில் இருட்டும் எதிர் திசையும் துலங்காத பொழுதொன்றில் துவங்குகின்ற அவர்களது பயணமானது முதலில் நன்னனின் நிலத்தை அடைவதாகவே இருக்கிறது. சினத்தில் மூத்தோனான நன்னன் கலைஞர்களை உபசரிப்பதில் வள்ளலென பாடப்பட்டிருப்பதாலும், மயிலனை அவனது நாட்டில் காண நேர்ந்ததாக, கூட்டத்தில் ஒருத்தன் சொல்லக் கேட்டதாலும், இவ்வாறாக நன்னனின் நிலம் தேடி அவர்கள் பயணிக்கும் தீர்மானத்தை எடுக்கிறார்கள். வறண்ட பல நிலங்களை கடந்து நீளும் அவர்களது பயணத்தில் குறவர்களும், வேடரும் குறுக்கிடுகிறார்கள். ஆடல் பாடல் நிகழ்த்தும் கூட்டமென்றதும், காட்டிலிருந்து கிடைக்கும் உடும்பு கறியையும், முயல்கறியை சமைத்துக்கொடுத்து பரிமாறுகிறார்கள். சிறுவர்கள் நாக்கு ஊற உணவினை அரக்கப்பரக்க விழுங்குவதை கடிந்துக்கொள்ளும் பெரியவர்களிடத்தில் சுய கெளரவம் மிளிர்கிறது.

  பிறிதொரு சந்தர்ப்பத்தில் உழவன் ஒருவன் கேலி செய்யும்போது, அதனால் பாணர்கள் மிகுந்த வருத்தமடைவதிலும், கலை சார்ந்து அவர்கள் நகர்த்துகின்ற வாழ்க்கையின் மீதான பற்றுதலும், கெளரவம் காக்கப்பட வேண்டுமென்கிற அவர்களது எண்ணத்தையும் நம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால், மலைக்குகை ஒன்றில் கையில் தீப்பந்தத்துடன் எதிர்படும் பாணரால் அவர்களது பயண திசை மாற்றியமைக்கப்படுகிறது.

  நன்னன் போரில் உயிர் துறந்துவிட்டதாகவும், அதனால் வேள்பாரியின் நிலம் நோக்கி செல்லும்படியும் அவர் உபதேசம் செய்கிறார்கள். அரசனை நெருங்க, அறிவிற் சிறந்த கபிலரை முதலில் சந்திக்கும்படியும் அவர் யோசனை கூறுகிறார். அதோடு, நன்னனால் படுகொலை செய்யப்பட்ட சிறுமியொருத்திக்கு அமைக்கப்பட்டிருக்கும் கோவிலையும் வணங்கிச் செல்லச் சொல்கிறார். நன்னனின் மாந்தோப்பில் உதிர்ந்து விழுந்த மாங்கனி ஒன்றை கொறித்ததற்காக அவளுக்கு வழங்கப்பட்ட தண்டனை அது. வெறித்து பார்த்தபடியிருக்கும் அப்பெண் சிலையை வணங்கியவாறே மீண்டும் தமது பயணத்தை தொடர்கிறார்கள். வழியில், செழிப்புற வளமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் உழவர்களிடத்திலும் பண் இசைக்கப்பட்டு, கூத்தர்களால் நடனமும் நிகழ்ந்தேறுகிறது.

  வேள்பாரியின் நிலத்தில், குழப்பமும், புதிய மனிதர்களின் நடமாட்டமும் திடீரென உருவாகியிருப்பதால், பாணர்களுக்கு முதலில் அங்கு அசெளகர்யமே நிலவுகிறது. கபிலரும்கூட இரண்டொரு நாள் கடந்தே அவர்களிடம் சிறிது நேரம் செலவிட்டு பேசுகிறார். அவ்வப்போது மூவேந்தர்கள் என வர்ணிக்கப்படுகின்ற சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு கட்டுபடாமல் எதிர்த்து நிற்கும் பாரியின் போர் திறமைகளும், அவனது கருணை உணர்வும் ஒருசேர விவரிக்கப்படுகிறது. கதைச்சொல்லியான 'கொலும்பன்’ அரசவையில் மேன்மையும், கலா ரசனையும் நிரம்ப வலம்வரும் மன்னன் பிறிதொரு நிலத்தில் அசூரத்தனமாகவும், உயிரறுப்பை பெருமிதத்துடன் செய்து முடிக்கின்ற இரட்டைத்தன்மை விளங்காமல் குழப்பமுறுகிறான்.

  மன்னனின் நடவடிக்கைகளில் பலவீனங்கள் இருக்கும்போதும், அதனை மறைத்து பொருளாசையில் போற்றி பாடிடும் பிழைப்பு நடத்தும் புலவர்களின் கயமைத்தனத்தையும் நொந்து கொள்கிறான். கபிலரின் வாயிலாக, பாரியின் அரசவைக்குள் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தும் நேரம் கிட்டுகிறது. அரசனை தலை நிமிர்ந்து பார்க்கவே கூச்சம் கொள்கின்றனர் பாணர்கள். இதற்கு முன்பு அவர்கள் அத்தனை பிரமாண்டமான அரசவையில் தங்களது திறனை வெளிக்காட்டியதில்லை. நெளிவும் சுழிவும் உண்டாக, தங்களது இசை கருவிகள் தரையில் அடுக்கி, நிகழ்ச்சியை துவங்குகின்றனர்.

  அரசன் அவர்களது இசையிலும் நடனத்திலும் களிப்புகிறான். ’எது வேண்டுமானாலும் எடுத்துச் செல்லுங்கள்’ என கேட்க, கூட்டத்தில் ஒருவன் 'நாட்டினை தாருங்கள்’ என கர்ஜனையுடன் சொல்ல, பாரி அவ்வாறு தமது நிலங்களை பல்வேறு குழுக்களுக்கு தாரைவார்த்தவன் தான் என்றாலும், திமிருடன் அவன் முன்னால் உச்சரிக்கப்பட்ட அச்சொல்லில் கோபமடைந்து வாளுடன் முன்னால் பாய்கிறான். அப்போது எவரும் எதிர்பார்த்திராத நிகழ்வொன்று அங்கு அரங்கேறுகிறது. அதுவரையிலும் ஓரமாக சாய்ந்து நின்றிருந்த 'சுவாமி’ என்று அழைக்கப்படும் இளைஞன் ஒருவன் தன் வாளால் பாரியின் தலையை கொய்து அவனது உயிரை அறுக்கிறான்.

  கூட்டத்தார் அதிர்ச்சியில் சிதைந்து ஆளுக்கொரு திசையாக தெறித்து ஓடுகிறார்கள். நிகழ்ந்த துர்சம்பவத்தின் காரணமாக அதுவரையிலும் நம்மிடம் கதைச் சொல்லிக்கொண்டிருக்கும் கொலும்பனும் அவ்விடத்திலேயே கொல்லப்படுகிறான். பாணர்களும், கூத்தர்களும் தமது உயிரை கையில் பிடித்துக்கொண்டு பாரியின் நிலம் குடிகொண்டிருக்கும் மலையிலிருந்து கீழிறங்கி ஓடுகிறார்கள் என்பதாக, கதையின் முதல் பகுதி நிறைவடைகிறது.

  நாவலின் பரபரப்பான இச்சம்பத்திற்கு பின்னார் பாணர் புதிய நிலம் தேடி பயணிக்க முடிவு செய்கிறார்கள். 'கதைச்சொல்லி’ ஸ்தானத்தை கொலும்பனிடமிருந்து அவரது மகள் 'சித்திரை’ எடுத்துக்கொள்கிறாகள். மற்றொரு சிறிய இனக்குழுவினருடன் சேர்ந்து அவர்கள் தமது தினங்களை கடத்துகின்றனர். அங்கு சித்திரைக்கு படைவீரன் ஒருவனின் தொடர்பேற்படுகிறது. காதலின் சுவை அவளை தீண்டுகிறது.

  மகீரன் என்றழைக்கப்படும் அவ்வீரன் மூவேந்தர்களின் வேள்பாரியின் நிலம் அபகரிக்கும் திட்டத்தில் முக்கிய பங்காற்றியவன். அவனது நெருக்கமும், சித்திரையின் மீது அவன் கொட்டுகின்ற அதீத பிரியமும் அவளை அவன் புறமாக சாயச் செய்கிறது. சித்திரை அவனை பின்தொடர்ந்து செல்கிறாள். நிகழும் சிலபல சம்பவங்களினால் மெல்ல மெல்ல அவனது செல்வாக்கினை முழுவதுமாக புரிந்துக்கொள்கிறாள். ஒளவை மூதாட்டி  நாவலில் ஒரு பாத்திரமாக வருகிறாள். அதியமான் நெடுமான் அஞ்சியை புகழ்ந்து பாட்டுரைக்கும் ஒளவை மகீரனையும் புகழ்கிறாள். இது சித்திரைக்கு மேலும் அதிசயத்தை கூட்டுகிறது.

  இதுகுறித்து மகீரனிடம் அவள் வினவும்போது, அவளுக்கு செவி சாய்க்காமல், முக்கியத்துவமின்றி அமர்ந்திருக்கும் அவன் 'தன் பாட்டனாரின் வீரத்திற்கு கிடைத்த புகழது. நான் அதனில் குளிர் காய முடியாது’ என வெடுக்கென சொல்லிவிட்டு அவ்விடம் நீங்குகிறான். இதன்பிறகு, ஒளவையிடம் நெருங்கி பழகத் துவங்கும் சித்திரை வெகு சீக்கிரத்திலேயே, அவர்கள் தேடிவந்த அவளது சகோதரனான மயிலனும், மகீரனும் சிநேகிதர்கள் என்பதோடு மகீரனுக்கு வேறொரு நிலத்தில் வேறொரு மனையாள் இருக்கிறாள் என்பதையும் அறிந்து உள்ளம் ஒடுங்கி அழுகிறாள். ஒளவையைப்போலவே தானும் இனி தனித்திருப்பதான முடிவுக்கு அவள் நகர்வதுடன் இரண்டாம் பகுதி முடிவுகிறது.

  மயிலனின் குரலில் சொல்லப்படும் மூன்றாம் பகுதியில் முதலிரண்டு பகுதிகளில் போடப்பட்ட சிடுக்குகள் கலைக்கப்படுகின்றன. பசியின் கோரத்தால் பாணர்களின் கூட்டத்திலிருந்து விலகியோடிய அவன் சந்தித்த மனிதர்களையும், இனக்குழுக்களையும், பாணருடன் அவனுக்குண்டான நெருக்கமும், தனது அதிகாரத்தை மேல்படி உயர்த்திக் கொள்வதறாக மாங்கனி உண்ட சிறுமியை கொலை செய்ய நன்னனை தூண்டியதையும், பின்னர் நன்னனின் தோல்விக்கு பிறகு அங்கிருந்து தப்பித்து மூவேந்தர்களின் சதிச்செயலில் பங்கேற்று வேள்பாரி கொலை செய்ய 'சுவாமி’ வேடம் தரித்ததையும் அடுக்கடுக்காக விவரிக்கிறான்.

  ஒற்றனாக பணிப்புரிய நேர்ந்த துர்லபத்தையும் அவன் இறுதியில் நொந்து கொள்கிறான். தகப்பனின் உயிரிழப்புக்கு தானே காரணமென்கிற தவிப்பும், தங்கையின் வாழ்க்கை சிதைவுற்றதும் தன்னாலேயே என்கின்ற குற்ற உணர்ச்சியும், அனைத்தையும் மேலாக, மாங்கனி உண்ட சிறுமியை கொலை செய்ய தூண்டிய தனது அருவருக்கத்தக்க முன்கதையையும் எண்ணி உள்ளம் வெதும்புகிறான். தான் செய்த பாவங்களுக்கு பொறுப்பேற்று கூட்டத்தாரிடமிருந்து விலகி கடல் நோக்கி நடந்துச் செல்லும் அவனை மாங்கனிக்காக கொலைச் செய்யப்பட்ட சிறுமியின் ஆவியுரு நெருங்கி வருவதாக இந்த நாவல் நிறைவடைகிறது.

  தமிழ் நிலம் பல்வேறு பேரரசுகளாலும், சிற்றரசர்களாலும் கூறு போடப்பட்டு ஆளப்பட்டு வந்த காலத்தைப் பிண்ணனியாக கொண்டுள்ள இந்த நாவல் அன்றைய தினங்களில் பேரரசுகளை கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சதித்திட்டங்களை நம்முன் விவரிக்கிறது. துரோகமும், கயமையும், இயலாமையும், வன்மமும் சூழ வாழ்ந்த அரசர்களையும், அவர்களை அண்டி வாழ்ந்துக்கொண்டிருந்த பாணர்கள், கூத்தர்கள், புலவர்கள், அறிவிற் சிறந்த சான்றோர்கள் போன்றோரை நம்முன் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது இந்நாவல். அரசர்களின் கதையறிவும் ஆவல் இன்றைய காலக்கட்டத்தில் இல்லாமல் இருக்கிறது. ஆனால், அக்காலங்களில் புலவர் பெருமக்களை கொண்டு எழுதி பதிவுசெய்யப்பட்ட பல நூல்கள் நமது வரலாற்றின் பெருமையையும், மொழியின் செழுமையையும் கொண்டிருக்கின்றன.

  'சங்க வளர்த்த தமிழ்’ என பெருமிதத்தோடு சொல்லித் திரியும் நாம் உண்மையில், அவ்வெழுத்துக்களை சீந்துவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கான முறையான பயிற்சியும் நமக்கு வழங்கப்படவில்லை. இந்த நாவல், தமிழ் நிலத்தில் இசைத்து திரிந்த பாணர்களையும், கூத்தர்களையும் பின்தொடர்ந்து அரசர்களின் நிலங்களுக்குள் ஊடுருவுகிறது. ஒளவையும், கபிலரும், பாணரும் நாவலில் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள். ஆங்காங்கே அவர்களால் எழுதப்பட்ட பாடல்களும் நாவலில் இடம்பெறுகின்றன.

  நம்மிடமிருந்து வெகு தொலைவுக்கு சென்றவிட்ட காலக்கட்டமொன்றின் வரலாற்றை ஊடறுத்து, வேயப்பட்டுள்ள இந்த நாவல், தமிழ் நிலத்தில் பாய்ந்தோடிய குருதியின் வாடையை உணரச் செய்கிறது. மலையாள எழுத்தாளரான மனோஜ் குரூருக்கு சங்க தமிழ் வாழ்வியலின் மீது ஏற்பட்டிருக்கும் ஆர்வம் வியப்பளிக்கிறது. ஆழ்ந்த ஆய்வும், சங்கப் பாடல்களில் தேர்ச்சியும் இல்லாமல் இத்தகைய நாவலை எழுதுவது சாத்தியமில்லாதது. தமிழில் வாசிக்க உகந்த வகையில் கே.வி.ஜெயஸ்ரீ மூலத்தின் இயல்பு குறையாமல்  மொழியாக்கம் செய்துள்ளார். வம்சி பதிப்பகம் இந்நுலை வெளியிட்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai