பூக்களை வைத்து இத்தனை அழகான குறிப்புக்களா!

கொதிநீரில் சாமந்திப்பூவின் இதழ்களை உதிர்த்துப் போட்டு   மூடி   இரவு முழுவதும்
பூக்களை வைத்து இத்தனை அழகான குறிப்புக்களா!
Published on
Updated on
3 min read

சாமந்திப்பூ

கொதிநீரில் சாமந்திப்பூவின் இதழ்களை உதிர்த்துப் போட்டு   மூடி   இரவு முழுவதும்  அப்படியே வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும். இந்தத் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். 

குளிர்ந்த இந்த நீரில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு அடியில் உள்ள கருமை நீங்கும்.  பஞ்சில் தொட்டு முகம் முழுக்கத் தடவி, சிறிது நேரம் கழித்து கடலைமாவினால் கழுவினால் வெயிலினால் கருத்துப் போன சருமம் நிறம் மாறும். 

ரோஜாப்பூ: பன்னீர் ரோஜாவின் இதழ்களை அரைத்து அத்துடன் சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.  ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் பளபளப்பாகும். 

மல்லிகைப்பூ:  ஒரு கைப்பிடியளவு  மல்லிகைப் பூ,  4 லவங்கம் சேர்த்து அரைத்து அத்துடன் சந்தனம் சேர்த்து குழைத்து , முகம், நெற்றி, கழுத்துப் பகுதிகளில் தடவி, அரைமணி நேரம் ஊறவிட்டு பின்பு  குளிர்ந்த தண்ணீரால் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை, சின்னச் சின்ன கட்டிகள் சரியாகி, சருமம் ஒரே சீரான நிறத்துக்குத் திரும்பும். 

மரிக்கொழுந்து:  மரிக்கொழுந்து  சாறு 2 தேக்கரண்டி, சந்தனத் தூள் 2 தேக்கரண்டி  இரண்டையும் கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்துக் கழுவினால், வியர்வை கட்டுப்படும். சரும நிறம் கூடும்.  

செம்பருத்தி: 5 செம்பருத்திப் பூவுடன்,  2 பாதாம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அரைத்து வெயில் படும் சருமப் பகுதிகளில் தடவி  அரை மணி நேரம் ஊறவிட்டு பின்னர்  பயத்தம் மாவுக் கொண்டு  கழுவிவிட வேண்டும். வாரம் இரண்டுமுறை   இப்படிச் செய்வதனால்  சரும வறட்சி நீங்கி, தோல் மென்மையாகும்.

தாமரை:  தாமரை இதழ்களை சிறிது பால் விட்டு அரைத்து,  முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிடவும். இது சருமத்துக்கு  மென்மையைக் கொடுக்கும். 
 - ரிஷி

மகிழம்பூ

மகிழ மரத்தின் பட்டை, மலர்கள் கனிகள், விதைகள் மருத்துவப் பயனுடையவை. மலர்களைக் காயவைத்துப் பொடியாக்கி மூக்குப் பொடி போல் பயன்படுத்த அதிக அளவு நீர் வெளியேறி தலைப்பாரம் மற்றும் தலைவலி நீங்கும்.

மந்தாரை

மந்தாரை பூ மொக்குகள் ஐம்பது கிராம் எடுத்து 500 மி.லி நீரில் இட்டு காய்ச்சி 200 மி.லி. ஆனவுடன் காலை, மாலை இருவேளை அருந்தி வர ரத்தமூலம், சிறுநீரில் ரத்தப்போக்கு, மூக்கில் ரத்தம் வடிதல், சீதபேதி ஆகிய நோய்கள் குணமாகும். மந்தாரைப் பூவை உலர்த்திப் பொடி செய்து இரண்டு சிட்டிகை எடுத்து தேனுடன் உட்கொள்ள மலச்சிக்கல் குணமாகும்.
- கே.பிரபாவதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com