முகப்பு லைஃப்ஸ்டைல் அழகே அழகு
வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?
By IANS | Published On : 27th January 2022 04:23 PM | Last Updated : 27th January 2022 04:23 PM | அ+அ அ- |

வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?
புது தில்லி: நாம் நம்மை எப்படி இருக்கிறோம் என்று கருதுகிறோமோ, நமது உடலமைப்பைப் பற்றிய நமது எண்ணம் எவ்வாறு உள்ளது என்பதுவும் மிகவும் முக்கியம்.
எப்போதுமே, நமது உடலமைப்பைப் பற்றி நமக்கு ஒரு எண்ணம் இருக்கும். அது நமது உடலின் எடை, அமைப்பு, வடிவம் போன்றவற்றின் அடிப்படையிலானது. ஆனால், எப்போதுமே ஒருவர் அவரது உடலமைப்பைப் பற்றி நேர்மறையான சிந்தனையைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம் என்கறிர்கள். அது நமது வாழ்முறையை மட்டுமல்ல, நமது நன்னடத்தைக்கும் காரணமாக அமையுமாம்.
சில சிறார்கள், பள்ளியிலோ குடும்ப உறுப்பினர்களாலோ உருவக் கேலிக்கு ஆளாகியிருப்பார்கள். இதனால், அவர்களுக்கு தங்களது உடலமைப்பின் மீது ஒரு வெறுப்பு உருவாகும். இதனால், ஒரு நபரின் மன நலன் மற்றும் உடல் நலன் பாதிக்கப்பட்டு, அது மீண்டும் அவர்களது உடலமைப்பின்மீதே எதிரொலிக்கும். சிலருக்கு இதனால் மன அழுத்தம், உணவருந்துவதில் சிக்கல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்பட வழிகோலும்.
அது மட்டுமல்ல, ஒருவர் தன் உடலமைப்பின் மீது கொண்டிருக்கும் தாழ்வுமனப்பான்மை காரணமாக, அடிக்கடி மனநிலை மாற்றம், சமுதாயத்திலிருந்து தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுதல், நட்பு பாராட்டாமை போன்றவை ஏற்படும். இதனை கண்டுகொள்ளாமல் விடும்போது, மற்றவர்களை புறக்கணிப்பது, தங்களது உடலமைப்பை ஏற்றுக் கொள்ளாமல் அதனை மாற்ற தவறான வழிகளைக் கடைப்பிடிப்பது அவ்வளவு ஏன் தங்களையே துன்புறுத்திக் கொள்ளும் நிலைக்கும் ஆள்படலாம்.
எனவே, பெற்றோரோ.. உங்கள் வீட்டிலிருக்கும் சிறார்களுக்கு இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் அவர்களை வெளியே கொண்டு வர வேண்டியது உங்கள் கடமைதான்.
அதற்கு சில வழிகள்..
உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மனம்விட்டுப் பேச அனுமதியுங்கள். எதைச் சொன்னாலும் அதற்கு ஆலோசனை வழங்குகிறேன் என்று களத்தில் குதிக்க வேண்டாம். அவர்கள் பேசும்போது குறுக்கிடாதீர்கள். இதைச் சொல்லலாமா, வேண்டாமா என்று சிந்தித்துப் பேசாமல், நினைத்ததை சொல்வதற்கு உங்களிடம் அவர்களுக்கு இடம்கொடுங்கள்.
ஒரு சில ஆடைகளை அவர்கள் அணியும் போது, அது நன்றாக இல்லை என்று நேரடியாகக் கூறாமல், மிகச் சிறந்த ஆடை அவர்களுக்கு எந்த அளவுக்கு தோற்றப் பொலிவைக் கொடுக்கிறது என்று எடுத்துச் சொல்லுங்கள்.
எந்த ஆடையை அணியும் போது அவர்களது நண்பர்கள் அதிகம் கேலி செய்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப அவர்களது ஆடை அலங்காரத்தை மாற்ற உதவலாம்.
என் மகள்/மகன் குள்ளமாக இருக்கிறார், ஒல்லியாக இருக்கிறார் என்றெல்லாம் மற்றவர்களிடம் கூறாதீர்கள். அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா, நல்ல பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கிறார்களா என்பதைப் பற்றி கூறுங்கள்.
உங்களுக்கு ஒன்று மிகச் சரியானதாகத் தோன்றும், ஆனால், அதுவே உங்கள் பிள்ளைகளுக்கும் சரியாக இருக்கும் என்று நினைக்கக் கூடாது, அவர்கள் அதற்கு நேர்மாறாக நினைக்கவும் வழி இருக்கிறது. அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்.
உடலமைப்பு எப்படியிருந்தாலும், உங்கள் பிள்ளைகள் சரியாக உடற்பயிற்சி செய்வதை சத்தான உணவு போன்றவற்றை உறுதி செய்யுங்கள். அதில் சமரசம் வேண்டாம் என்பதை அவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை உருவக்கேலி செய்யக் கூடாது. மற்ற நண்பர்களோடு ஒப்பிடக் கூடாது. இந்த ஆடை உனக்கு நன்றாக இல்லை என்று சொல்லக் கூடாது. இதெல்லாம் சாதாரண விஷயம்தானே என்று நினைக்கலாம். ஆனால், ஏற்கனவே உடலமைப்பு குறித்து தாழ்வுமனப்பான்மையில் இருப்பவர்களுக்கு இது பெரும் துன்புறுத்தலாக அமையலாம் எச்சரிக்கை.