அனுஷ்கா  உடுத்தும் பனாரஸ் சில்க் புடவைகளின் பின்னிருக்கும் சமூக அக்கறை!

விழாவின் ஹைலைட் அனுஷ்கா விருது பெறுவது அல்ல. விருது பெற்றுக் கொள்வதற்காக அவர் அணிந்து வந்த புடவை தான். அன்றைய தினம் அடர் பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவையில் அசத்தினார் அனுஷ்கா.
அனுஷ்கா  உடுத்தும் பனாரஸ் சில்க் புடவைகளின் பின்னிருக்கும் சமூக அக்கறை!
Published on
Updated on
2 min read

பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவையில் அசத்தும் அனுஷ்கா ஷர்மா!

பாலிவுட் பிரபல நடிகையும், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா சமீபத்தில் ப்ரியதர்ஷினி குளோபல் அகாதெமி விருது விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அனுஷ்கா ஷர்மாவிற்கு ஸ்மிதா பட்டீல் விருது வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் அமைச்சர் பியூஷ் கோயலிடமிருந்து விருதைப் பெற்றுக் கொண்டார் அனுஷ்கா.

விழாவின் ஹைலைட் அனுஷ்கா விருது பெறுவது அல்ல. விருது பெற்றுக் கொள்வதற்காக அவர் அணிந்து வந்த புடவை தான். அன்றைய தினம் அடர் பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவையில் அசத்தினார் அனுஷ்கா. பச்சை நிற பனாரஸில் உடல் முழுவதும் தங்கப் பொட்டு சரிகை வேலைப்பாடுகள் அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தன. பனாரஸ் நெசவே கொள்ளை அழகென்றால் இதில் பனாரஸ் நெசவுடன் சந்தேரி ஸ்டைலையும் கலந்திருந்தார்கள் நெசவாளர்கள். எனவே புடவை லைட் வெயிட்டுடன் கண்களுக்கு விருந்தானது. அழகான ராயல் பச்சை நிற பனாரஸ் சந்தேரி சில்க் புடவைக்குத் தோதாக கிளாஸிக் ஸ்டைலில் தலைமுடியை வகிடெடுத்துப் படிய வாரிக் கொண்டையிட்டு  பொருத்தமான ஒப்பனைகளும் பச்சை நிற பிந்தியுமாக அனுஷ்கா உள்ளம் கவர்ந்தார். அன்று அவரது ஒப்பனை மொத்தமும் புடவையின் அழகுக்கு மேலும் மெருகூட்டுவதாகவே இருந்தது. அழகான பச்சை நிற குந்தன் கற்கள் பதிக்கப்பட்ட கைவளைகள், கழுத்தை ஒட்டினாற் போல பச்சை நிறக் கற்கள் பதித்த சோக்கர் (நெக்லஸ்), புடவை கிராண்டாக இருப்பதால் காதுகளுக்கு ஒற்றை மரகதக்கல் தோடு என்று ஆடம்பரத்தில் எளிமை என அசத்தினர் அனுஷ்கா ஷர்மா.

விருது விழாவிற்கு மட்டுமில்லை. அனுஷ்கா, விராட் தம்பதியினர் இத்தாலியில் திருமணம் முடிந்து இந்தியாவில் தங்கள் மும்பை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அளித்த ரிஷப்சனிலும் கூட அனுஷ்கா அழகான சிவப்பு நிற பனாரஸ் கைத்தறி சில்க் புடவையே உடுத்தி வந்து பாந்தமாக தரிசனம் தந்தார். முன்பெல்லாம் வட இந்திய ஸ்டைலில் வெஸ்டர்ன் உடைகளிலும், காக்ரா சோளி, லெஹங்காவிலும் மட்டுமே பார்க்க வாய்த்த அனுஷ்கா ஷர்மா தற்போது இந்தியப் பாரம்பரிய உடையான புடவைகளில் வலம் வருவது அவரது ரசிகர்களுக்கு இனிய சர்ப்ரைஸ். அதற்கேற்றார் போல அடுத்து வரவிருக்கும் அவரது புதிய திரைப்படமான ‘சுய் தாஹியின்’ தீம் மேட் இன் இந்தியா என்பதாகவே இருப்பதால் அதற்குப் பொருத்தமாக இப்போதெல்லாம் அடிக்கடி இந்திய கைத்தறிப் பட்டுப் புடவைகளை உடுத்திக் கொண்டு வலம் வரத் தொடங்கி இருக்கிறார் அனுஷ்கா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com