பள்ளிமாணவர்களுக்குள் சாதிச் சண்டையா?!

மாணவர்கள் இப்படி சாதியை காரணம் காட்டி மோதலில் ஈடுபட்டது மிக மோசமான முன்னுதாரணம். 
பள்ளிமாணவர்களுக்குள் சாதிச் சண்டையா?!
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டம் புழுதிவாக்கம் கிராமத்தின் அரசுப் பள்ளியொன்றில் சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களின் போது மாணவர்களிடையே சாதிமோதல் ஏற்பட்டு விஷயம் காவல்துறை வரை சென்று பள்ளிக்கு அவப்பெயரை உண்டாக்கியிருக்கிறது.

குறிப்பிட்ட தினத்தன்று பள்ளியில் நடைபெற்ற  சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் பங்குபெற மூன்று தலித் மாணவர்களுக்கு மட்டும் ஜாதி இந்து பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் தடை விதித்திருக்கின்றனர். தலித் மாணவர்களுக்கு தனியாகவும், ஜாதி இந்து மாணவர்களுக்கு தனியாகவும் போட்டிகளை நடத்துமாறு அவர்கள் வற்புறுத்தியாக கூறப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற வாக்குவாதத்தில் மாணவர்களிடையே தகராறு முற்றி கைகலப்பு வரை சென்று இரு தரப்பு பெற்றோர்களின் தலையீடால் மாணவர்களின் பிரச்சினை ஊர் பிரச்சினை ஆகி கடைசியில் சாதிக்கலவரம் அளவுக்கு சென்றிருக்கிறது. 

சம்பவம் குறித்த காவல்துறை விசாரணையில் தலித் மாணவர்கள் 'வீரமணி என்பவர் தான் வழக்கமாக பள்ளி விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துபவர் என்றும் அவர் தான் தலித் மாணவர்களுக்கும், சாதி இந்து மாணவர்களுக்கும் தனித் தனியாக விழா நிகழ்ச்சிகளை நடத்துமாறு மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினார் என்றும் தெரிவித்தனர்.

புழுதிவாக்கம் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷங்கர் இவ்விசயம் குறித்து பேசுகையில் ’வீரமணி எனும் நபரைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டதில்லை என்றும் தான் இப்பள்ளிக்கு தலைமையாசிரியராக பொறுப்பேற்று ஒரு வாரம் தான் ஆகிறது ஆனால் பள்ளி விழாக்களில் பிரிவினையைத் தூண்டுமாறு பள்ளியுடன் தொடர்பில்லாத ஒருவர் எப்படி செயல்பட முடியும் ஆகவே அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் சம்பவம் குறித்து பேசிய ஊர்பஞ்சாயத்து தலைவர் சியாமளப் பெருமாள்’ பள்ளியில் நடந்த மாணவர் மோதல் குறித்து தனக்கோ கிராமத்திலிருக்கும் பிற முக்கியஸ்தர்களுக்கோ உடனடியாக தகவல் தெரியாமல் போனதால் வெறும் மாணவர் மோதல் கடைசியில் சாதிக் கலவரம் அளவுக்கு பெரிதாகி விட்டது என்று கூறினார்.

தலித் மாணவர்களும், சாதி இந்து மாணவர்களும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம்சாட்டிக் கொண்டிருக்க தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் பிரச்சினையைச் சுமூகமாக தீர்க்க  மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுக்க  வேண்டிய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இப்படி சாதியை காரணம் காட்டி மோதலில் ஈடுபட்டது மிக மோசமான முன்னுதாரணம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com