12 மணி நேரம் வேலை செய்ய நாங்கள் அடிமைகளோ, ரோபோக்களோ அல்ல!

தேச பக்திக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் நேரம், காலமின்றி அலுவலகத்தில் வேலை செய்டு விட்டு குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விட முடியாது
12 மணி நேரம் வேலை செய்ய நாங்கள் அடிமைகளோ, ரோபோக்களோ அல்ல!

உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மோடி அறிவித்ததை அடுத்து மற்ற எல்லாத் துறை அலுவலர்களைக் காட்டிலும் வங்கி ஊழியர்களே மிக மோசமான பணிச் சுமையில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறார்கள். . ரூபாய் நோட்டு விவகாரத்தில் நாள் முழுதும் ஏ.டி.எம் மையங்களிலும், வங்கிகளிலும் கடும் சலிப்புடன் காத்திருக்கும் மக்களை சமாதானப் படுத்தும் முயற்சியாக அறிவிப்பு வெளியான 50 நாட்களுக்குள் புது ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் வேலை துரிதப் படுத்தப் பட்டிருக்கிறதாம். இதனால் ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்புக் கூடங்களில் பணி புரியும் ஊழியர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் உழைக்க வேண்டியதாக இருக்கிறது. புது ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பது அவசியம் தான். ஆனால் தேச பக்திக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் நேரம், காலமின்றி அலுவலகத்தில் வேலை செய்டு விட்டு குடும்பத்தை கவனிக்காமல் விட்டு விட முடியாது இல்லையா? தொடர்ந்து நிலவும் வேலைப் பளுவால் எங்களது ஊழியர்களில் பலர் உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மேலும் எங்களால் 12 மணி நேரத்திற்கு அதிகமாக உழைக்க முடியாது. எனவே வேலை நேரம் 9 மணி நேரமாக குறைக்கப்பட வேண்டும். என மேற்கு வங்காளத்தில் உள்ள ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு அச்சடிப்புக் கூடத்தின் அலுவலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

ரிசர்வ் வங்கி சார்பில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் கூடங்கள் இந்தியாவெங்கும் சில இடங்களில் இயங்குகின்றன. அவற்றில் கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கான ரூபாய் நோட்டுகள் மேற்கு வங்கத்தின் சல்போனி எனும் இடத்தில் அச்சடிக்கப் படுகிறது. மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் ஆளுகைக்குட்பட்ட 'பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடட்' ஊழியர்கள் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் வங்கி ஊழியர்களின் மனக்குமுறல் தான் இது!. இவர்களின் மனக்குமுறலுக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கவிருக்கிறது என்பதை மோடி சொன்னது போல மேலும், மேலும் பொறுத்திருந்து பார்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com