மார்கழி நீராடல் மகாத்மியங்கள்!

மார்கழி மாதம் தேவர்களுக்கு "விடியற்காலம்' ஆகும். எனவே, இம்மாதத்தில் விடியற்காலை வேளையில் நீராடுவதும் இறைவழிபாடு செய்வதும் மிகவும் போற்றப்படுகிறது.
மார்கழி நீராடல் மகாத்மியங்கள்!

பொதுவாக, மார்கழி மாதத்தில் குளிர் அதிகமாக இருக்கும். இருந்தாலும் இம்மாதம் முழுக்க, விடியற்காலை வேளையில் நீராடுவது போற்றப்படுகிறது. பொழுது விடிவதற்கு முந்தைய அதிகாலை நேரத்தை "பிரம்ம முகூர்த்தம்' என்றும் "உஷத்காலம்' என்றும் சொல்லப்படுகிறது. இந்த நேரத்தில் நீராடுவது உடல் நலத்திற்கு நல்லது என்று சாஸ்திரம் கூறுகிறது. 

மேலும் இம்மாதம், முழுக்க விடியற்காலை வேளையில் ஓசோன் என்னும் அற்புதமான பிராணவாயு இயற்கையாகவே தோன்றுகிறது என்று அறிவியல் கூறுகிறது. பிரம்ம முகூர்த்தமாகிய இந்த தெய்வீக மாதமான மார்கழியில் வைகறை வேளையில் தெய்வங்கள் வான் வெளியில் உலா வருவதாக ஐதீகம். அதனால்தான் இந்நாள்களில் அதிகாலையில் எழுந்து வாசலில் சாணம் கரைத்த நீரினைத் தெளித்து சுத்தம் செய்தபின் வாசலில் கோலமிட்டு அலங்கரித்து அந்தக் கோலத்தின் நடுவில் பரங்கிப்பூவினை வைப்பதால் குளிர் காலமான மார்கழியில் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் அழிக்கப்படுகின்றன என்று சாஸ்திரம் கூறுவதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.

இந்த மார்கழி நீராடலை நினைவுப் படுத்தும் விதமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் கோதை நாச்சியாரான ஸ்ரீ ஆண்டாளுக்கு "தைலக்காப்பு வைபவம்' நடைபெறுகிறது. இந்த விழாவினை "தண்டியல் சேவை' என்று போற்றுவர்.

தேவர்களுக்கு "தட்சிணாயன கால'மான ஆடி முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகும். அதுபோன்று "உத்திராயண கால'மான தை முதல் ஆனி மாதம் வரை பகல் பொழுதாகும். அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு "விடியற்காலம்' ஆகும். எனவே, இம்மாதத்தில் விடியற்காலை வேளையில் நீராடுவதும் இறைவழிபாடு செய்வதும் மிகவும் போற்றப்படுகிறது.

இம்மாதத்தில்தான் தில்லை ஸ்ரீ நடராஜப் பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய ஐந்தொழில்களையும் புரிகிறார் என்று வேதநூல்கள் கூறுகின்றன. இம்மாதத்தில் தில்லையில் நடைபெறும் "ஆருத்ரா தரிசன'மும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் நடைபெறும் "வைகுண்ட ஏகாதசி' விழாவும் இம்மாதத்திற்கு சிறப்பினைக் கூட்டுகிறது. மேலும் சபரிமலையில் அருள்புரியும் ஸ்ரீ ஐயப்பன் அவதரித்ததும் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்ததும் மார்கழி மாதத்தில்தான். பாற்கடலிலிருந்து தோன்றிய மகாலட்சுமியை மகாவிஷ்ணு மணந்ததும் மார்கழியில்தான் என்று புராணம் கூறுகிறது. 

பல சிறப்புகள் பெற்ற மார்கழியில் விடியற்காலை வேளையில் நீராடி இறைவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் சுகம் காணலாம் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com