‘டங்கல்’ திரைப்படத்தின் நிஜ ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது: தாய்மாமன் சீர் கொடுத்தார் அமீர்கான்!

திருமணத்துக்கு அமிர்கானின் பரிசு என்ன தெரியுமா? அமீர் சொன்ன பதில் ‘டங்கல்’ திரைப்படம் தான் கீதாவுக்கு நான் தரும் மிகச் சிறந்த கல்யாணப் பரிசாக இருக்க முடியும் எனினும் கீதா சார்ந்த சமூகத்தின் பாரம்பரிய
‘டங்கல்’ திரைப்படத்தின் நிஜ ஹீரோயினுக்கு திருமணம் முடிந்தது: தாய்மாமன் சீர் கொடுத்தார் அமீர்கான்!
Published on
Updated on
2 min read

அமீர்கானின் ‘டங்கல்’ திரைப்படக் கதையின் மையக் கருத்து, மல்யுத்த வீரரான ஒரு அப்பா தனது 4 மகள்களுக்கும் சமூகத்தின் முகச் சுளிப்பையும், எதிர்ப்புகளையும் மீறி மல்யுத்தம் கற்றுத் தந்து அவர்களை சர்வ தேச சாம்பியன்களாக ஆக்குவது தான். ஆண்களின் விளையாட்டென அதுவரை நம்பப் பட்ட ஒன்றை இல்லாமலாக்கி தனக்கு ஆண்குழந்தை இல்லையே என்று அது வரையிலிருந்த ஏக்கத்துக்கு சிறந்த பதிலடி தருகிறார் இந்த அப்பா. ‘டங்கல்’ வெளியாகி சில நாட்கள் தான் ஆகின்றது. படத்துக்கு இந்தியா முழுதும் நல்ல வரவேற்பு. படம் தத்ரூபமாக அமைய நிஜ வாழ்க்கைக் கதையைத் தேர்வு செய்ததால் படத்தின் 50 % வெற்றியை இந்த நிஜத் தன்மையே சாதித்து விட்டது. மிச்ச 50 % துக்கு அமீர் இருந்தார், நல்ல திரைக்கதை இருந்தது, உடன் நடித்த நடிகர்களின் திறமையையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. படத்தில் அமீரின் கதாபாத்திரம் தான் மகாவீர் சிங் போகத், அவரது மகள் கீதா போகத்தாக வேறொரு இந்தி நடிகை நடித்திருந்தார். ஆனால் கீதாவின் புகைப்படங்களைக் காணும் போது இவரையே நடிக்க வைத்திருக்கலாமே என்று தான் தோன்றுகிறது. 

கீதாவின் தந்தை மகாவீர் சிங் போகத் இந்தியாவின் மதிப்பிற்கும், பெருமைக்கும் உரிய விருதுகளில் ஒன்றான ‘துரோணாச்சார்யா’ விருது பெற்ற மல்யுத்த வீரர் மற்றும் பயிற்சி ஆசிரியர். மகள் கீதா போகத் சர்வ தேச அளவில் இந்தியாவுக்குப் பதக்கங்களையும், பெருமைகளையும் தேடித் தந்த நிஜ மல்யுத்த வீரங்கனை. இவர்களது வாழ்க்கையை ‘டங்கல்’ மூலம் உலகறியச் செய்ததில் அமீர்கானை எத்தனை பாராட்டினாலும் தகும். தமிழில் ஏன் இத்தகைய முயற்சிகள் பரவலாக இல்லை எனத் தெரியவில்லை. விளையாட்டையும், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து வெளியான, வெற்றி பெற்ற தமிழ்த் திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அது போகட்டும் நிஜ கீதாவின் சாதனைகளைப் பாருங்கள்;

கீதாவின் மல்யுத்த சாதனைகள்:

  • 2009 ல் பஞ்சாபின் ஜலந்தரில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கீதா தங்க மெடல் வென்றிருக்கிறார்.
  • 2010 ல் பெண்களுக்காக மட்டுமே நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன் போட்டியிலும் ஆஸ்திரேலிய மல்யுத்த வீரங்கனை எமில் பென்ஸ்டெடை தோற்கடித்து மீண்டும் தங்கம் வென்றார்.
  • 2012 சர்வ தேச காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றார்.
  • 2013 தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார்.
  • 2015 தோகாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தப் பிரிவில் வெண்கலம் வென்றார். 

இப்படி தான் பங்கேற்கும் போட்டிகளில் எல்லாம் ஏதாவது ஒரு பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தான் பிறந்த மாநிலத்துக்கும், தனது தகப்பனாருக்கும் பெருமைகளைத் தேடித் தந்த கீதா போகத் ஒரு சிறந்த விளையாட்டு வீரங்கனை மட்டுமல்ல, சிறந்த மகளும் கூடத்தான். கீதாவின் தந்தை மகாவீர் போகத்தும் ஒரு சிறந்த மல்யுத்த வீரரே. தன் தந்தையின் விடாமுயற்சியும், போராட்டங்களுமே தன்னையும் தனது சகோதரிகளையும் மிகச் சிறந்த மல்யுத்த வீரர்களாக சோபிக்கச் செய்தன என்று கீதா இப்போது சொல்கிறார். நாம் நம்பத் தான் வேண்டும், ஏனெனில் அதற்கான வலுவான சாட்சி தான் ‘டங்கல்’ திரைப்படம். இந்தத் திரைப்படம் கீதா மற்றும் அவரது குடும்பத்தினரின் நிஜமான வாழ்க்கைச் சம்பவங்களால் பின்னப்பட்ட கதையம்சம் கொண்டது. அடுத்தடுத்து பெண்குழந்தைகள் பிறந்தால், பெண் சிசுக் கொலை புரியத் தயங்காத ஒரு சமூகத்தில் தனக்குப் பிறந்த நான்கு பெண் குழந்தைகளும் இந்த சமூகத்தில் ஒரு கெளரவமிக்க அடையாளத்தைப் பெற உதவும் ஒரு தந்தையின் பாசப் போராட்டமே ‘டங்கல்’ திரைப்படம்.

கீதா தனது நண்பரும் சக மல்யுத்த வீரருமான பவன் குமாரை மணந்தார்! 
 
படத்தில் அமிர்கானின் பெண்ணாகவும், மல்யுத்த வீரங்கனையாகவும் நடித்த கீதா போகத்துக்கு நேற்று ஹரியானாவில் அவரது சொந்தக் கிராமத்தில் திருமணம் நடைபெற்றது. தனது நெடுநாள் நண்பரும், சக மல்யுத்த வீரருமான ‘பவன் குமாரை’ கீதா மணந்து கொண்டார். திருமணத்துக்கு அமிர்கானின் பரிசு என்ன தெரியுமா? அமீர் சொன்ன பதில் ‘டங்கல்’ திரைப்படம் தான் கீதாவுக்கு நான் தரும் மிகச் சிறந்த கல்யாணப் பரிசாக இருக்க முடியும் எனினும் கீதா சார்ந்த சமூகத்தின் பாரம்பரிய வழக்கப்படி நான் கீதாவுக்கு அவரது தாய்மாமன் ஸ்தானத்தில் இருந்து மணப் பெண்ணுக்கான நீளமான கவுன் போன்ற கல்யாண உடையையும் பரிசளித்திருக்கிறேன் என்று கூறினார். ஞாயிறு அன்று கீதாவின் கிராமத்தில் மொத்த ‘டங்கல்’ திரைப்படக் குழுவினரும் குழுமி இருந்தனர். கிராமம் முழுதுமே திரை நட்சத்திரங்களை ஒரே இடத்தில் காணும் குதூகலத்தில் ஒரே கோலாகலமாக இருந்தது. 

டங்கல் படக் குழுவினரோடு சேர்த்து நாமும் கீதாவை வாழ்த்துவோமாக!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com