நவராத்திரி கொலுபொம்மை தயாரிப்பு விற்பனையும் ஏற்றுமதியும் மும்முரம்...

கொலு வைக்கப்படும் அந்த 9 நாள்களிலும் கொலு பார்க்க வீட்டிற்கு வரும் குழந்தைகள், கன்னிப்பெண்கள், சுமங்கலிகள் இவர்களில் யாராவது தெய்வமாக வருவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில் அவர்களுக்கு மஞ்சள், குங்குமம்
நவராத்திரி கொலுபொம்மை தயாரிப்பு விற்பனையும் ஏற்றுமதியும் மும்முரம்...

செங்கல்பட்டு அக்டோபர் 2: நவராத்திரி கொலுவிற்கு சில தினங்களே உள்ள நிலையில் செங்கல்பட்டு பகுதியில் பொம்மை தயாரிப்பு மற்றும் விற்பனை சுறுசுறுப்பு அடைந்துள்ளது. நவராத்திரி விழா நாள்களில் வீடுகளில் பாரம்பரியமாக பொம்மை கொலு வைப்பதை பல குடும்பத்தினர் இன்னும் மறந்து விடவில்லை. வாடகை வீடாக இருந்தாலும் இட நெருக்கடியிருந்தாலும் நவராத்திரி கொலு வைப்பதற்கு சிறிய இடத்தையாவது ஒதுக்கி வைத்து பாரம்பரியத்தை காப்பாற்றி வருகின்றனர். தங்கள் கற்பனைகளுக்கேற்ப  கொலுவில் பல்வேறு பொம்மைகளை நிறுத்தி வைக்கின்றனர்.
 
மஹாளய அமாவாசையன்று கலசம் நிறுத்தி கடந்த ஆண்டு பத்திரமாக பெட்டிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளை எடுத்து துடைத்து பளபளப்பாக்கி 5,7,9,11,15 என இடவசதிக்கேற்ப படிக்கட்டுகளில் கொலு பொம்மைகள் நிறத்தப்படுவதாகவும், விஜயதசமி அன்று பொம்மைகளை படுக்க வைத்து கொலுவை கலைப்பது வழக்கமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொலு வைக்கப்படும் அந்த நாள்களில் நவதானிய சுண்டல்கள், வெண்பொங்கல், புளியோதரை என நைவேத்தியம் செய்து வருபவர்களுக்கு கொடுப்பார்கள். 

கொலு வைக்கப்படும் தாத்பரியம்:
பூமியில் உயிரினங்களை படைக்கும் முறைகளை விளக்கும் வகையில் புள்பூண்டு என மரம்செடி கொடிகளை ஓரறிவு உயிர்களாகப் பாவித்து முதல் படியிலும், பின்னர் புழு உள்ளிட்ட ஊர்வன உயிரிகளை ஈரறவு உயிர்கலாகப் பாவித்து இரண்டாம் படியிலும், மீன் உள்ளிட்ட நீந்துவனவற்றை மூன்றறிவு உயிர்களாகப் பாவித்து மூன்றாம் படியிலும், பறவைகளை நான்கறிவு உயிர்களாக எண்ணி நான்காம் படியிலும், விலங்கினங்களை ஐந்தறிவு உயிர்களாகப் பாவித்து ஐந்தாம் படியிலும், அதன்பின் கடவுள் படைப்பில் ஆறறிவு உயிரினங்களான மனித பொம்மைகளை ஆறாம் படியிலும், அதையும் தாண்டி முற்றும் துறந்த முனிவர்கள் மற்றும் சித்தர் பொம்மைகளை ஏழாம் படியிலும், இவைகளுக்கெல்லாம் மேலாக கடவுள் அவதாரங்களான விநாயகர், முருகர், சிவப்பெருமான், அம்மன், பெருமாளின் தசவதார பொம்மைகள் போன்றவற்றை எட்டு மற்றும் ஒன்பதாம் படியிலும் வைத்து கொலுவைப்பார்கள்.

கொலு ஐதீகம்: 
கொலு வைக்கப்படும் அந்த 9 நாள்களிலும் கொலு பார்க்க வீட்டிற்கு வரும் குழந்தைகள், கன்னிப்பெண்கள், சுமங்கலிகள் இவர்களில் யாராவது தெய்வமாக வருவார்கள் என்ற நம்பிக்கையின் பேரில் அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், பரிசுபொருட்கள், மங்கல வளையல்கள், மாங்கல்யம், ரவிக்கை துண்டு போன்றவற்றை பூஜை முடிந்ததும் அவர்களுக்கு அளித்து வழியனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு பொம்மை தயாரிப்பாளர் குடும்பம்:

நவராத்திரி பூஜை நாட்களில் தேவையான புதிய பொம்மைகள் வாங்கவும் நிறம் மங்கிய பழைய பொம்மைகளுக்கு புதிதாக வர்ணம் தீட்டவும் மக்கள் பொம்மை தாயரிப்பாளர்களை அணுகுகின்றனர். செங்கல்பட்டு மேட்டுத்தெருவில் உள்ள பொம்மைகாரம்மாள் கலைவாணி சங்கரை அணுகி விசாரித்த போது ”எங்கள் குடும்பத்தில் நாங்கள் தலைமுறை தலைமுறையாக பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். வேலைக்கு ஆட்கள் வைத்தும் தொழிலை நடத்திவருகிறோம். எங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் இத்தொழில் விழாக்கால வருமானமாகவே உள்ளது. ஒவ்வோராண்டும்  கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி மற்றும்  நவராத்திரி விழாவிற்கு முன்பாகவே பொம்மைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் உள்நாடு மற்றும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் பொம்மைகள் அனுப்பப்படுவதாகவும் அவர் தெரவித்தார். 

பொம்மைகள் தயாராகும் முறைகள்:
முதலில் களிமண் கிடைக்கும் ஏரிகள் எந்தெந்த ஊர்களில் உள்ளது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்கள் ஏலம் விடும்போது அறிந்து அந்தெந்த ஊர்களுக்குச் சென்று ஏலத்தில் கலந்து கொண்டு பணம் செலுத்தி ஏலம் எடுப்போம். முதலாவதாக நல்ல களிமண்ணை தேர்வு செய்து அதை பக்குவமாக பிசைந்து கைகளினால் பொம்மை வடிவமைக்கப்படும். பின்னர் அதற்கு அச்சு உருவாக்கி அச்சில் களிமண்ணை வைத்து அழுத்தி செய்த பொம்மைகளை நிழலில் காய வைத்து பின்னர் நெருப்பில் சுட்டெடுப்பதாகவும். பின்னர் அதன்மீது பிரைமர் வர்ணம் தீட்டியபின்பு வெவ்வேறு வர்ணங்களால் பொம்மை அழகு படுத்தப்படுகிறது. மேலும் ஆண்டு முழுவதும் இத்தொழிலில் ஈடுபட்டாலும் மழைக்காலங்களில் எந்தவேலையும் செய்ய இயலாது. மழைக் காலத்தில் வர்ணங்களும் எளிதில் உலராது” என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com