பிள்ளைகளைப் பள்ளிப் பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கவனத்துக்கு! 

வாணியம்பாடியில் நிகழ்ந்த விபத்தைப் பொருத்தவரை அது முற்றிலும் ஓட்டுனரின் அலட்சியத்தால் தான் என்றே சொல்லலாம். மாணவர்களை ஏற்றிச் செல்வதற்குத் தான் பள்ளிப் பேருந்துகளே தவிர ஏற்றிக் கொல்வதற்கு அல்ல!
பிள்ளைகளைப் பள்ளிப் பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் கவனத்துக்கு! 
Updated on
2 min read

தனியார் பள்ளிப் பேருந்துகளுக்கான வாகன விதிமுறைகள் உச்ச நீதிமன்றத்தால் எத்தனை முறை கடுமையாக வகுக்கப்பட்டாலும் அதை மீறுவது என்பதும் சர்வ சகஜமாகவே நடந்து வருகிறது. திங்கள் அன்று வாணியம்பாடி சின்னமொட்டூர் சிகரம் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியின் 4 ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளிப் பேருந்தில் ஏற முயலும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த அவலம் விதி மீறலுக்கு மற்றுமொறு அத்தாட்சி என்பதைத் தவிர வேறென்ன சொல்ல! 

சிறுவன் வி.தினேஷ் அன்று காலை பள்ளிப் பேருந்தில் ஏற முயற்சிக்கும் போது ஓட்டுநர் மாணவன் படியிலிருந்து உள்ளே வருவதைக் கவனிகாமல் பேருந்தை இயக்கியுள்ளார். இதனால் நிலை தடுமாறிய சிறுவன் பேருந்தில் இருந்து நழுவி தரையில் விழுந்து முன் சக்கரங்களில் சிக்கி படுகாயமுற்றான். உடனே சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு விரைந்த போது  அங்கிருந்த மருத்துவர்கள் தினேஷ் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்ட செய்தியை உறுதிப்படுத்தி இருக்கின்றனர். 

இங்கே நாம் பள்ளி நிர்வாகத்தை கேட்டாக வேண்டிய கேள்விகள் சில உள்ளன. பள்ளிப் பேருந்து என்பது பள்ளி மாணவர்களை உரிய நேரத்தில் பள்ளிக்கு கொண்டு சேர்ப்பதற்காகத் தானே இயக்கப்படுகிறது. அப்படியான பேருந்துகள் எப்படி இயக்கப் பட வேண்டும் என இப்படியான விபத்துக்கள் நிகழும் ஒவ்வொரு முறையும் சென்னை உயர் நீதி மன்றம் விதிமுறைகளை கடுமையாக்கிக்
கொண்டே தானே வருகிறது. அப்படி இருந்தும் இப்படி விபத்துக்கள் நடக்கிறதென்றால் இது தனியார் பள்ளிகளின் மெத்தனப் போக்கு அல்லது அலட்சியம் என்று தானே கருத வேண்டி இருக்கிறது. 

மாணவ, மாணவிகளின் உயிர் விஷயத்தில் இத்தனை அலட்சியம் ஏன்? முன்னதாக 2012 ல் இதே போன்ற ஒரு விபத்து சென்னை சேலையூரில் நடந்த போது அப்போது உயிரிழந்த 7 வயது சிறுமி ஸ்ருதிக்காக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதி மன்றம் பள்ளிப் பேருந்துகளில் ஓட்டுநர் தவிர்த்து அனைத்து பள்ளிப் பேருந்துகளிலும் மாணவ, மாணவர்களின் பாதுகாப்பு கருதி அட்டெண்டர் ஒருவரும் பேருந்தினுள் உடனிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. இதையொட்டி மாநில அரசு ’தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டத்தின்’ கீழ் பள்ளிப்பேருந்துகள் இயக்கம் மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக சில திருத்தங்களைச் செய்து தனியார் பள்ளிகளுக்காக ஓர் அறிக்கை வெளியிட்டது.

தனியார் பள்ளிப் பேருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விதிகள் சொல்வதென்ன?

  • இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பள்ளிப் பேருந்துகளில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் மற்றும் பள்ளியின் முதல்வர் இடையே குறிப்பிட்ட இடைவெளிகளில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புகள் பாதுகாப்புக் காரணங்களை மையப்படுத்தி தொடர்ந்து நடத்தப் பட வேண்டும்.
  • பள்ளி மாணவர்களின் விபத்துகளற்ற பாதுகாப்பான பயணத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப் படும் இந்த பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்களில் கட்டாயமாக பள்ளி அடிப்படையிலான போக்குவரத்துக் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அதில் காவல் துறை துணை ஆய்வாளர், கல்வித் துறை அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பெற்றோர் பிரதிநிதி ஒருவர், உள்ளிட்டோர் அதில் உறுப்பினர்கள் ஆக்கப்பட வேண்டும்.
  • பள்ளி அடிப்படையிலான இந்தப் போக்குவரத்துக் கமிட்டி சந்திப்புகள் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பள்ளிப் பேருந்துப் பயணத்தில் ஏற்படக் கூடிய இடர்பாடுகளைப் பற்றி கலந்தாலோசித்து மாணவ, மாணவிகளின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். 

இது தவிர பள்ளி நிர்வாகம் ஒவ்வொரு வருடமும் பள்ளிப் பேருந்துகளில் கட்டாயம் பரிசோதிக்க வேண்டிய விசயங்கள் என்ற வகையிலும் சில விதிமுறைகளை உயர் நீதி மன்றம் விதித்திருந்தது.

அதற்கான செக் லிஸ்ட் பாருங்கள்;

  • பள்ளிப் பேருந்துகளின்  ஃபுட்போர்டு உயரத்தை ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் கட்டாயம் பரிசோதித்து மாணவர்கள் எளிதில் பயன்படுத்தக் கூடிய அளவில் மாறுதல் செய்யவேண்டும்.
  • தீயணைப்புக் கருவி காலாவதி ஆகும் சரியான தேதி உல்ளிட்ட விவரங்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பள்ளிப் பேருந்திலும் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும். 
  • ஓட்டுனர் இருக்கையின் சவுகரியத்தைப் பரிசோதிக்க வேண்டும்.
  • மாணவர்கள் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதிகளைச் சோதித்து தேவையெனில் உரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
  • ஜன்னல்களைப் பரிசோதிக்க வேண்டும். 
  • ஜன்னல் கம்பிகள் வலுவானவையா எனச் சோதிக்க வேண்டும்.
  • முதலுதவிப் பெட்டியின் பயன்படுத்தும் தன்மை மற்றும் ஆபத்துக் காலத்தில் வெளியேறும் வாய்ப்புகளையும் பரிசோதிக்க வேண்டும்.
  • கடைசியாக ஓட்டுனர் உரிமம் மற்றும் பேருந்து உரிமத்துக்கான சான்றிதழ்களை பரிசோதிக்க வேண்டும்.

இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என உயர்நீதி மன்றம் ஆணையிட்டும் கூட அந்த ஆணைகள் அனைத்தும் இப்போதும் வெறும் காகித அளவிலேயே நிற்பது வெட்கக் கேடு.

பள்ளிக் கட்டணம் வசூலிப்பதில் மட்டும் உலகத்தனை கண்டிப்பு காட்டும் தனியார் பள்ளிகள் தன்னுடைய மாணவர்களின் பாதுகாப்பு என்று வரும் போது ஏன் இத்தனை மெத்தனம் காட்டுகின்றன? 

பள்ளிக் குழந்தைகளைப் பொருத்தவரை வீடானாலும் சரி பள்ளியானாலும் சரி தொடர் கண்காணிப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அது எப்போதெல்லாம் தவறிப் போகிறதோ அப்போதெல்லாம் இப்படியான விபத்துகள் குழந்தைப் பலி கொள்கின்றன. வாணியம்பாடியில் நிகழ்ந்த விபத்தைப் பொருத்தவரை அது முற்றிலும் ஓட்டுனரின் அலட்சியத்தால் தான் என்றே சொல்லலாம். மாணவர்களை ஏற்றிச் செல்வதற்குத் தான் பள்ளிப் பேருந்துகளே தவிர ஏற்றிக் கொல்வதற்கு அல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com