சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமறைவு, நாட்டுக்கு அவமானம்!

காவல்துறையின் உயர்பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்போதே ஓ.பன்னீர்செல்வம் மிரட்டப்பட்டிருக்கிறார் என்றால் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மிரட்டப்பட்டிருக்கலாம் அல்லவா?
சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமறைவு, நாட்டுக்கு அவமானம்!
Updated on
4 min read

மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் அவர்கள் மக்கள்மன்றத்தில் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுபவர்களாக இருக்க வேண்டும்.  அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று மக்கள் தேடுகிற நிலையில் இருக்கக் கூடாது. பேருந்துகளில் இருக்கிறார்கள். ஆடம்பர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் போன்ற செய்திகள் யாவும் இந்த நாட்டிற்கு அவமானத்தைப் பெற்றுத் தருவதாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் ஆயுதங்கள் அல்லர். அவர்களை மறைவாக வைத்துக் கொண்டு தாக்குதலைத் தொடுப்பதற்கு. பெரியார் சொன்னது போல் முட்டாள்களால் தேர்வு செய்யப்பட்ட அயோக்கியர்களே அரசியல்வாதிகள் என்ற இழிச் சொல்லைத் தொடர்ந்து சுமக்காதீர்கள்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தத்தமது தலைமையிலான கூட்டம் முடிந்தததும் தங்கள் தொகுதி மக்களின் கருத்துக்களைச் செவிமடுத்துக் கேட்க வேண்டும். உங்களுக்குத் தொகுதியை ஒதுக்கியது வேண்டுமானால் கட்சித் தலைமையாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு மதிப்பளித்துச் சட்டப் பேரவைக்கு அனுப்பியவர்கள் இந்த மக்கள் தான். அந்த மக்களின் கருத்துக்களைக் கேட்டு அதன்படிதான் நீங்கள் செயல்பட வேண்டும்.

உங்கள் கட்சித் தலைமையின் காலடிகளில் நீங்கள் மண்டியிடுகிற காரணத்தால் தான் உங்களைத் தேர்வு செய்த மக்களின் கருத்துக்களை மதிக்க மறுக்கிறீர்கள். தலைமையில் பிளவு என்ற நிலைபாடுகளின் போது அறிவுக் கூர்மைக்கும் சுயமரியாதைக்கும் இடம் தந்து சிந்திக்கிற பகுத்தறிவு மிகுந்தவர்களாகத் திகழ வேண்டும். தன்னலத்துடனும், குதிரைபேரத்துக்கு இடம் தருகிற வகையிலும் செயல்படுவது என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு வஞ்சகம் செய்கிற செயலாகும்.

தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு திராவிடத் தலைமைகளும் இதுநாள் வரை தங்களுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, மண்டியிடும் குணம் மிகுந்தவர்களையே விரும்பியுள்ளனர். கால்களில் விழக் கூடாது என்று சொன்ன பெரியாரின் கொள்கையை மதித்ததே இல்லை.

நன்றிக்கடன் என்ற சொல்லுக்கு அஞ்சிய கர்ணன் என்ற கதாபாத்திரம் மகாபாரதத்தில் இறப்பையே சந்தித்தது. எனவே இங்கு நன்றிக் கடன் என்ற சொல்லைவிட நேர்மை, கடமை, மக்கள்நலன் அகியவற்றைக் கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்கிற கதாபாத்திரங்கள் தேவை. மேற்படி நற்பண்புகள் நிறைந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்ய மறுத்ததால் தமிழக வாக்காளர்கள் வருத்தத்தையும் புலம்பலையும் வெளிபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லாமல் தத்தளிக்கிறார்கள்.

சென்னைக் கடற்கரைப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட காவல் துறையின் தாக்குதலைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் துடிதுடித்தார்கள். இளைஞர்களும் மாணவர்களும் மீனவர்களும் கொதித்தெழுந்து கடற்கரையை நோக்கிப் படையெடுத்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் சட்டப் பேரவைக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் கடற்கரை பக்கம் வரவேயில்லை.

எதிர்க்கட்சிப் பொறுப்பிலிருந்தவர்கள் சட்டமன்றத்திற்குச் சென்று வழக்கமான அறிக்கையைத் தயாரித்து வைத்துக் கொண்டு ஆளுநர் உரை புறக்கணிப்பு என்ற ஒன்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். அவர்களால் ஏன் கடற்கரைக்கு வரமுடியவில்லை. கடற்கரைக்கும் கடலுக்கும் நடுவே ஆயிரம் மாணவர்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த சூழலில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன? பக்கத்துத் தெருவில் இருக்கும் சட்டப்பேரவைக்குச் செல்லாமல்,  காலை 8 மணிக்கெல்லாம் கடற்கரையை நோக்கி ஓடி வந்திருக்க வேண்டாமா?  காவல்துறையின் தடியடிகள் எதிர்க்கட்சிகள் மீது விழுந்திருக்குமா? காவல் துறைக்கு அச்சம் வந்திருக்காதா? 98 சட்டமன்ற உறுப்பினர்கள் அப்போது சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்கவே கூடாது. அவர்கள் கடற்கரைக்குத்தான் விரைந்திருக்க வேண்டும். ஆனால் தாக்குதல் முடியட்டும் அதற்குப் பிறகு அறிக்கை விடலாம் என்ற மோசமான செயல்முறை வெறுப்பைத் தான் தந்தது.

எதிர்க்கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களே இப்படியிருக்கும் போது ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டாமா?

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பரிதாபத்துக்கு உரியவர்களாகத் தற்போது இல்லை. வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களுக்கான துரோகச் சிந்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.

திராவிடக் கட்சிகள் பெரியாரின் கொள்கைகளின் வெளிப்பாடு என்று சொல்கிறார்கள். ஆனால் பெரியார் சொன்ன சுயமரியாதையும் பகுத்தறிவும் எங்கே?

இந்துத்துவா சக்திகளை முறியடிக்கவும் பாஜக காலூன்றுவதைத் தடுக்கவும், பெண் என்பதாலும் சசிகலாவை ஆதரிப்பதாகக் கி. வீரமணி அறிவிக்கிறார். இந்நிலையில் சுப்பிரமணியன்சுவாமியும் சசிகலாவை ஆதரிக்கிறார். இரண்டு பேரும் வெவ்வேறு துருவங்களாகச் செயல்படுகிற நிலையில் இந்த ஆதரவு நிலைப்பாடு எதைச் சுட்டிக் காட்டுகிறது?

சில நேரங்களில் திராவிடரா? ஆரியரா? என்ற கேள்வியை எழுப்புவார்கள். சில நேரங்களில் திராவிடரா? தமிழரா? என்ற கேள்வியை எழுப்புவார்கள், இப்போதோ ஆணா? பெண்ணா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இந்தக் கேள்விகளில் எத்தகைய தத்துவங்கள்தான் இடம் பெற்றுள்ளன? பெரியார் தத்துவமா? இந்துத்துவா தத்துவமா?

தமிழக முதலமைச்சர் தான் மிரட்டப்பட்டு விலகல் கடிதம் கொடுத்ததாக அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கே அவமானத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. முதலமைச்சரால் குறிப்பிடுகிறப்படுகிற திவாகரன் என்ற பெயர் யாரைக் குறிப்பிடுகிறது? தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்?

காவல்துறையின் உயர்பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்போதே ஓ.பன்னீர்செல்வம் மிரட்டப்பட்டிருக்கிறார் என்றால் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மிரட்டப்பட்டிருக்கலாம் அல்லவா?

இந்த நேரத்தில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாருடைய கண்களிலும் சிக்கிக் கொள்ளாமல் மறைந்திருப்பதன் காரணம் என்ன? ஆளுநர் முன்னர் தான் அணிவகுப்போம், குடியரசுத் தலைவரைத் தான் சந்திப்போம் என்று சொல்லிக் கொள்வது என்பது அடிமைத்தனத்தின் உச்சகட்டமாகும். தங்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் சென்று மக்களுடன் கலந்துபேச வேண்டாமா? வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜிகணேசன் பேசுகிற ‘பொருட்கள் அல்ல, புருசர்கள்’ என்ற அடையாளத்தோடு சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டாமா?

இந்த அவலநிலைக்கு யார் காரணம்? நிச்சயமாகத் திராவிடக் கட்சிகள் தான். தங்களுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது பெரியார் கொள்கையுள்ளவர்களைத் தேடிப்பார்த்து அடையாளம் காண்பதில்லை. பெரியார் கொள்கைகளுக்கு எதிரானவர்களைத் தேர்வு செய்வார்கள். உட்ஜாதிப் பெயரில் வலிமை கொண்டவர்களையும், தங்கள் சொல் பேச்சைக் கேட்கிற ஏவலாட்களாகவுமே இவர்கள் தேர்வு செய்வார்கள்.

தனித்தொகுதி வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது அம்பேத்கர் கொள்கைகள் நிறைந்தவர்களையும், அம்பேத்கர் கொள்கைகளைப் பரப்புகிறவர்களையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நற்பணி செய்பவர்களையும் தேர்வு செய்து விட மாட்டார்கள். தமக்கு யார் விசுவாசமாக இருப்பார்களோ அவர்களை அடையாளம் கண்டறிந்து தேர்வு செய்வார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களால் பெற்றுத் தரப்பட்ட தனித் தொகுதி இடஒதுக்கீடு காரணமாகச் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பைப் பெற்றிருப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் சுயமரியாதைக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். உங்கள் மனசாட்சிக்கு யார் குற்றவாளி? என்று தோன்றுகிறதோ அவர்களைப் புறக்கணியுங்கள். தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களின் போதும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே முடிவை எடுத்ததில்லை.

தத்தம் தலைமைக்கு மண்டியிட வேண்டிய சூழலில் இருந்தனர். தற்போது தன்மானத்திற்கும் அறிவுக்கூர்மைக்கும் வேலை கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தமிழக அரசியலில் நன்மை தரும் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டும். அம்பேத்கர் அறிவுறுத்திய 'யாரின் காலிலும் மண்டியிடாதே, உனக்குள்ள தகுதியையும் வாய்ப்பையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

நீங்கள் தற்போது எடுக்கும் முடிவு எதிர்காலத் தலைமுறைக்கு மகிழ்வைத் தரக்கூடியதாகவும், சுயமரியாதையை உணர்த்துவதாகவும் அமைய வேண்டும். இதுநாள் வரை உங்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி அடிமைகளாக வைத்திருந்தார்கள். உங்கள் வலிமையை உணர வேண்டிய நேரமிது.

“கோயில்யானை குட்டியாக இருக்கும்போது கால்களில் விலங்கிட்டு வைத்திருப்பார்கள். யானை வளர்ந்த பிறகும் தன்னால் அந்த விலங்கை உடைத்தெறிய முடியும் என்பது தெரியாமல் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட கோயில் யானையாக வாழ்ந்திடாமல் காட்டுயானையாகப் பிளிறிட வேண்டிய நேரமிது. நமக்கான கதவுகளை யாரும் திறக்க மாட்டார்கள். நாமாகத் தான் உடைத்து நொறுக்கி உள்ளே நுழைய வேண்டும்எ ன்று அறிவுறுத்திய அம்பேத்கரின் உழைப்பையும் தியாகத்தையும் நினைத்துப் பாருங்கள். அவருக்கு இருந்த நாட்டுப் பற்றையும் சமுதாயப் பற்றையும்  ஒரு துளியையாவது மனதில் வைத்திடுங்கள். துணிந்து முடிவெடுங்கள். உங்கள் கைகளை யாராவது கட்டியிருந்தால் திமிறிக் கட்டுடையுங்கள். உங்கள் முடிவைத் தமிழகமே எதிர்பார்க்கிறது. அடிமையாக இருந்துவிடாதீர்கள்.

ஏறுதழுவுதல் சிக்கலின் போது தமிழர்கள் ஒருங்கிணைந்த அந்த வியப்புக்குரிய சூழலில் தமிழ் மண்ணின் இயற்கையை மீட்டெடுக்கவே களம் புகுந்தார்கள். அவர்களின் இரத்தம் உங்களின் குருதிகளிலும் ஓடுகிறது என்று நம்புகிறோம். வாய்ப்பை நழுவ விடாதீர்கள். யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாதீர்கள். தன்மானத்துடன் முடிவெடுங்கள்.

இந்த நேரத்தில் வாக்காளர்களும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது என்ன தெரியுமா?

“தட்டிக் கேட்கத் தலைவன் இல்லை. இழிவைச் சுமக்கிறது தமிழ்நாடு.”

 ஓட்டுக்குப் பணம் என்ற அயோக்கியத் தனத்தின் வெளிபாடு தானே இது? தந்தை பெரியார் சொன்னார். முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள் என்று. ஆனால் உண்மை அதுவல்ல. அயோக்கியர்களால் தான் ஆட்சியாளர்கள் உருவாகுகிறார்கள். சுயமரியாதை, பகுத்தறிவு இவை எவைகளுக்கும் பொருத்தமே இல்லாதவை திராவிடக் காட்சிகள்? மண்டியிடுபவர்களால் தான் ஆட்சி அதிகாரம் ஏற்படுகிறது என்றால் இது பெரியார் கொள்கையா?

ஓட்டுக்குப் பணம் வாங்கி ஜனநாயகத்திற்குத் துரோகம் செய்தவர்களுக்குத் துரோகம் தான் பரிசாகக் கிடைக்கும். துரோகம் என்னவென்றும் துரோகிகள் யார் என்பதும் ஓட்டுக்குப் பணம் வாங்காமல் வாக்களித்த நன்மக்களுக்குப் புரியும்.

சி.சரவணன்  - 9976252800 - senthamizhsaravanan@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com