அப்துல் கலாமுக்காக புழல் சிறையில் வில்லுப்பாட்டு நடத்தினோம்!

ஆனந்தபைரவி ராகத்துல பாடினா ரத்த அழுத்தம் குறையும்; இப்படி ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. அதுதான் இசையின் மகத்துவம்..! 
அப்துல் கலாமுக்காக புழல் சிறையில் வில்லுப்பாட்டு நடத்தினோம்!

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர், கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் பாரதி திருமகன் இசைச் சொற்பொழிவாளராகவும், பக்திச் சொற்பொழிவாளராகவும், வில்லுப்பாட்டுக் கலைஞராகவும் வலம் வருபவர்.  அவரைச் சந்தித்தபோது, அவருக்கே உரித்தான இசைத் தமிழில் பல அரிய தகவல்களை அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்:

"காஞ்சி காமாட்சி சரணமம்மா..! கற்பூர நாயகியே கண் பாரம்மா' இது 1964-இல் அப்பா எழுதிய பாடல். 1970-இல்,  என் ஏழாம் வயதில் நான் மேடையேறிப் பாடிய முதல் பாடல் இதுதான். சிறுவயதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடத்திய நாடகத்தில் நடித்திருக்கிறேன். இன்று இசைச் சொற்பொழிவில் எனக்கு ஆதார சுருதியாக விளங்கும் "மாடுலேஷன்' அப்பாவின் வில்லுப்பாட்டு தந்த பரிசாகும்..!

இயல், இசை, நாடகம் என முத்தமிழ்க்கலையும் அடங்கியிருக்கும் வில்லுப்பாட்டு ஒரு "பல்கலைக்கழகம்'தான். வில்லுப்பாட்டுப் பாடுபவருக்கு சொல்லில் பாட்டு இயல்பாக வரும். வில்லும் சொல்லும் வெல்லும்..! இது என் தாரகமந்திரம். "என்ன வில்லுப்பாட்டை விட்டுவிட்டு பக்திச் சொற்பொழிவாற்ற வந்துவிட்டீர்களே!' என வியப்போடு கேட்பவர்களுக்கு என் பதில் இதுதான்: "ஒரு வில்லுப்பாட்டுக்காரரால் சொற்பொழிவு ஆற்றமுடியும்..! ஆனால், ஒரு சொற்பொழிவாளரால் வில்லுப்பாட்டுப் பாட முடியாது..!'.

பாடிப் பேசுவார் வாரியார்; பாட்டோடு பேசுவார் அப்பா...! பாட்டுப் பாடிப் பேசும் கலையை இவர்களிடம்தான் நான் கற்றேன். 

சிறுவயது முதலே அப்பாவுடன் மேடையில் பாடத்தொடங்கினேன். பாடினால் மட்டும் போதாது, மேடைக்கு ஏற்ப, ரசிகர்களுக்கு ஏற்ப, குரலைத் தாழ்த்தி அல்லது உயர்த்தி - "நடிக்க'வேண்டும். நாலு நல்ல விஷயங்களை விதைக்க வேண்டும். ஆனந்தபைரவி ராகத்துல பாடினா ரத்த அழுத்தம் குறையும்; இப்படி ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. அதுதான் இசையின் மகத்துவம்..! 

கலை, கலாசாரம், இலக்கியம், பக்தி, சமுதாயம், சமயம், தனிமனித ஒழுக்கம், பண்பாடு, இசை இப்படி எந்தத் தலைப்பிலும் என்னால் இசைப்பேருரை நிகழ்த்த முடியும். இசைப்பேருரையில் என் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் வானொலியும், தொலைக்காட்சியும்தான்..! 

மக்கள் தொலைக்காட்சியில் "நாளொரு நற்சிந்தனை' என்ற தலைப்பில் வள்ளலார் பற்றிய இசைச் சொற்பொழிவை கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து வழங்கி வருகிறேன்  இந்த வாய்ப்பையும், "சென்னையில் திருவையாறு' நிகழ்ச்சியில் "பாரதி யுகம்' என்ற தலைப்பில் இசைச் சொற்பொழிவாற்ற கிடைத்த வாய்ப்பையும் என் வாழ்க்கையில் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறேன்.  

நூறுவயது வாழ்ந்த காஞ்சி மகா பெரியவரைப் பற்றிய "காலடி முதல் காஞ்சி வரை' இசைப்பேருரை, தேவாரத் திருமுறைகள், திருப்புகழ் சொற்பொழிவு மற்றும் ராமகிருஷ்ணர், விவேகானந்தர், சாரதாதேவியார் பற்றிய சொற்பொழிவுகள் என எங்கும் தமிழ்; எதிலும் தமிழ் என்று என் இலக்கிய இசைப்பயணம் சென்று கொண்டிருக்கிறது.    

இந்தியாவின் பல மாநிலங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், பாரதி பிறந்த எட்டயபுரத்தில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் சமாதியில், முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனைகளை அப்பா தமிழ்ப்படுத்தி, நான் எடுத்துரைக்க, என் மகன் தி.கலைமகன் அதைப் பாடியதை மறக்கவே முடியாது.  

கடந்த ஆண்டு 1.5.2016 அன்று, துபாய் இந்தியத் தூதரகத்தில் "ஆமாம் போடலாம் வாங்க' என்ற புதுமையான இசை நிகழ்ச்சியை நடத்தினோம்; அங்கிருந்த தமிழர்கள் அவ்வளவு பேரும் ரசித்துப் பாராட்டினார்கள்.     அப்பா எழுதி, வாரியாருக்குப் பாடிய தாலாட்டுப் பாடலும், காஞ்சி மகா சுவாமிகளுக்குப் பாடிய தாலாட்டுப் பாடலும் என் வாழ்வில் மறக்கமுடியாத தருணங்கள்..!  

சொன்னால் நம்ப மாட்டீர்கள், 1990 ஜனவரி 22-ஆம் தேதி, என்னைப் பெண் பார்க்கும் வைபவத்தில், நான் பாடவில்லை; வித்தியாசமான நிகழ்வாக, என் கணவர் தன் அழகிய குரலில் தியாகராஜ கீர்த்தனைகளைப் பாடினார். மார்ச்-22இல், வாரியார் சுவாமிகளின் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நடைபெற்றது.

"வில்லுப்பாட்டு வளர்ச்சியில் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் பங்கு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் என் கணவர் எஸ்.திருமகன். கலைக்குரிய ரசனையோடும், விட்டுக்கொடுக்கும் தன்மையோடும் என்னை ஊக்குவித்து உயர்த்துபவர். அவர் சென்னைப் பல்கலைக் கழக (முன்னாள்) தேர்வாணையர்.

2009-இல் தில்லி தமிழ்ச் சங்கத்தில் வில்லிசை நிகழ்ச்சிக்காக அப்பா, நான், கணவர், மகன் அனைவரும் சென்றிருந்தோம். அதேநாளில் எங்கள் வில்லிசை நிகழ்ச்சியை, ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்களின் வீட்டிலும் நடத்தினோம். நாங்கள் தரையில் அமர்ந்து நிகழ்ச்சியைத் தொடங்கினோம். அப்போது அப்துல்கலாம் அவர்கள் விதிகளைப் புறந்தள்ளி எங்கள் அருகே தரையில் அமர்ந்து நிகழ்ச்சியைக் கேட்டு ரசித்தார். எப்பேர்ப்பட்ட மாமனிதர் அவர். நிகழ்ச்சி முடிந்ததும், "என்னுடைய ஒரு விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றவேண்டும். புழல் சிறையில் உள்ள கைதிகள் வில்லுப்பாட்டு மூலம் நல்ல கருத்துகளைக் கேட்டால் மனம் மகிழவும், சிந்தித்து சீர்திருத்தம் அடையவும் வாய்ப்பு இருக்கிறது.'' என்றார். கலாம் சாரின் விருப்பத்தை நிறைவேற்ற அன்றைய சிறைத்துறை அதிகாரி ஏற்பாடுகள் செய்துதந்தார். புழல் சிறைக்கைதிகளுக்காக வில்லிசை நிகழ்த்தினோம். அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள இன்று கலாம் சார் இல்லையே என்று மனம் ஏங்குகிறது.     

இப்போது, ஒரு புதிய முயற்சியாக, எஸ்.ஜி.கிட்டப்பா முதல் இளையராஜா வரையான (1920 முதல் 1980 வரை) பாடல்களைத் தொகுத்து, "காலத்தை வென்ற திரை கானங்களாக' நானும் என் மகனும் இசைப்பேருரை நிகழ்த்தி வருகிறோம். ஓர் ஆராய்ச்சி மாணவியாக, வில்லிசை வளர்ச்சியைப் பற்றி நான் பி.எச்.டி., செய்து வருகிறேன். என் அம்மா, எஸ்.ஏ.மகாலட்சுமியும் ஓர் எழுத்தாளர். அவர், "உண்மையுள்ள ஒரு கவிஞன்', "கவிஞர் சுப்பு ஆறுமுகம் வில்லிசையில் தேசப்பற்று' ஆகிய நூல்களை இயல்பான தமிழ் நடையில் அழகுற எழுதியிருக்கிறார். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து, "வில்லிசைத் தந்தை' எனும் பெயரில் என் தந்தையார் பற்றிய ஆவணப் படம் ஒன்றும் தயாரித்திருக்கிறோம். "கவிஞரின் வில்லிசையில் கலைவாணர் முதல் கமல்ஹாசன் வரை' என்ற எனது நூலும் விரைவில் வெளியாகவிருக்கிறது'' என்றார்.
-ரவிவர்மா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com