மணமகன் போலவே குதிரையேறி ‘பராத்’ ஊர்வலம் வந்த புரட்சிகரமான ராஜஸ்தானிய மணப்பெண்!

ராஜஸ்தான், அள்வார் பகுதியில் இன்றளவும் பெண் குழந்தைகள் பிறந்தால் பெரிய வரவேற்பு எதுவும் இருப்பதில்லை. அதே ஆண் குழந்தைகள் பிறந்தால் மிகுந்த விமரிசையாக அந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது. இது அங்கிருக்கும் இள
மணமகன் போலவே குதிரையேறி ‘பராத்’ ஊர்வலம் வந்த புரட்சிகரமான ராஜஸ்தானிய மணப்பெண்!

திருமணச் சடங்குகளில் ஆணாதிக்க மனப்பான்மையை எதிர்க்க நினைப்பவர்களால் மிஞ்சிப் போனால் என்னவெல்லாம் செய்து விட முடியும்? இதோ இப்படியும் செய்யலாம் என்று நிரூபித்திருக்கிறார் இந்த ராஜஸ்தானிய மணப்பெண். தென்னாட்டை விட வட இந்தியக் கிராமங்களில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். திருமண விசயத்தில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களில் பழம் பஞ்சாங்கத்தனமான கட்டுப்பாடுகள் நிறைந்திருக்கும் அங்கு. அதில் ஒரு வழக்கம் தான் திருமணச் சடங்குகளில் ஒன்றாக மணமகன் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் ஏறி நண்பர்கள், உறவினர்கள் புடை சூழ மணமகள் வீட்டிற்கு செல்வார். இந்த ஊர்வலத்தின் முன்பாக மணமகன் வீட்டார் உற்சாகமாக நடனமாடிக் கொண்டே செல்வார்கள்.

இந்த ஊர்வலம் மணமகள் வீட்டார், தமது வருங்கால மாப்பிள்ளைக்கு மரியாதை செய்து மணமகள் வீட்டுக்குள் அழைப்பதுடன் நிறைவு பெறும். இப்படியான மணமகன் வரவேற்பு விழாவுக்கு வட இந்தியத் திருமணங்களில் ‘பராத்’ என்று பெயர். அதைப் பற்றி அறிந்திராதவர்கள் டெய்ரி மில்க் விளம்பரம் ஒன்றில் மாமியாரும், மருமகளும் ஒரு திருமண ஊர்வலத்தின் முன் சாக்லெட் சாப்பிட்டு விட்டு நடனமாடுவார்களே அதை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அந்த விளம்பரத்தில் குதிரையில் மணமகன் உட்கார்ந்திருக்க ஊர்வலம் நடக்கும். இதற்குப் பெயர் தான் ‘பராத்’  இது பொதுவாக மணமகனுக்கு முதல் மரியாதை செய்து மணப்பெண் வீட்டுக்கு அழைக்கும் நிகழ்வாக அங்கு தொன்று தொட்டு நடத்தப்படுவது. இந்த வழக்கத்தைத் தான் இந்த ராஜஸ்தானிய மணப்பெண் துணிந்து உடைத்தெறிந்து மணமகனுக்குப் பதிலாக மணமகளான தான் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் ஏறி தனது உறவினர்கள் புடைசூழ மணமகன் வீட்டை அடைந்து அவர்கள் தரும் முதல் மரியாதையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இது ராஜஸ்தான் போன்ற ஒரு மாநிலத்தில் நிச்சயம் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கக் கூடிய புரட்சிகரமான மாற்றமே! 

ராஜஸ்தான், அள்வார் பகுதியில் இன்றளவும் பெண் குழந்தைகள் பிறந்தால் பெரிய வரவேற்பு எதுவும் இருப்பதில்லை. அதே ஆண் குழந்தைகள் பிறந்தால் மிகுந்த விமரிசையாக அந்நிகழ்வு கொண்டாடப்படுகிறது. இது அங்கிருக்கும் இளம்பெண்களிடையே மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்த அதிலிருந்து மீள வழி தேடிக் கொண்டிருக்கையில் தான் இப்படி ஒரு திடீர் திருமணப் புரட்சி நிகழ்ந்து பலரது மனதை மகிழ்வித்திருக்கிறது.

ஆம் படைப்பில் ஆண், பெண் பேதம் என்பது தோற்றத்தில் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் அவரவருக்கான முன்னுரிமை மற்றும் மரியாதைகளில் இருக்கக் கூடாது என நினைத்த மணமகள் ஜியா சர்மா தனது வருங்காலக் கணவரான லோகேஷ் சர்மாவுடன் இணைந்து திட்டமிட்டு இப்படி ஒரு மறுமலர்ச்சியான திருமண வரவேற்பு நிகழ்வை அரங்கேற்றி இருக்கிறார்.

ஜியா சர்மாவுக்கு வயது 25, MA ஆங்கில இலக்கியம் படித்தவரான ஜியாவின் வருங்காலக் கணவர் கணிப்பொறியாளர். ஜியாவுக்குத் திருமணம் பேசி முடித்ததும் இப்படி ஒரு புதுமையான ஐடியாவை அவர்களின் முன் வைத்தது ஜியாவின் அத்தை. பள்ளி ஆசிரியையும், சமூக ஆர்வலருமான அந்த அத்தை முன்னெடுத்துக் கொடுத்த இந்த ஐடியாவை ஜியாவும், அவரது வருங்காலக் கணவரும் மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக் கொண்டு அருமையாகச் செயல்படுத்தி இன்று மொத்த மாநிலத்தையும் தங்களை நோக்கி ஆச்சரியத்துடன் திரும்பி பார்க்க வைத்திருக்கின்றனர்.

இதற்கான ஒரே காரணமாக அவர்கள் கூறிவது, ராஜஸ்தானில் தொடர்ந்து பெண் குழந்தைகளின் பிறப்பு விழுக்காடு குறைந்து கொண்டே வருகிறது. ஆண் குழந்தைகளுக்கு ஈடாக பெண் குழந்தைகளின் பிறப்பும் பெரு மகிழ்வுடன் வரவேற்கப் பட வேண்டும். குழந்தைகளில் ஆண், பெண் பேதம் என்பது கூடாது எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகாந்திரங்களில் ஒன்றாகவே நாங்கள் மரபை உடைத்து இப்படி ஒரு புதுமையான வரவேற்பு நிகழ்வை நடத்தினோம் என்கிறார்கள்.

இந்தத் திருமண நிகழ்வில் மக்கள் அனைவரும் விரும்பத் தகுந்த, பின்பற்றத்தகுந்த மற்றுமொரு கூடுதல் அம்சமும் உண்டாம். அது என்ன தெரியுமா? மணமகள் ஜியா குடும்பத்தார் மணமகன் லோகேஷ் குடும்பத்தாருக்கு வரதட்சிணை எதுவும் தரவதாக இல்லை என முடிவெடுத்தது தான். அதற்கு மணமகன் வீட்டாரும் ஒப்புக் கொண்டனர். இது நிச்சயம் புரட்சியே தான். வரதட்சிணைகள் இல்லாத திருமணங்கள் பெருகினால் பெண் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஏன் அஞ்ச வேண்டும்?!

வடஇந்தியா மட்டுமல்ல வரதட்சிணை விசயத்தில் தென் இந்தியாவும் பின்பற்றத் தகுந்த முன்னுதாரணத்தை திட்டமிட்டதற்காக ராஜஸ்தான் மணமக்களை வாழ்த்துவோம்!

Image courtsy: The better india

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com