குயிட் இந்தியா 75 ஆவது ஆண்டுவிழாவில் மோடி அறிவித்த நியூ இந்தியா உறுதிமொழி 2022!

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளை நாம் பழைய நினைவுகளுக்காக மட்டும் கொண்டாடாமல்; இனிவரும் நவீன இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நாளாக இந்நாளை நாம் இனி கொண்டாடுவோம்
குயிட் இந்தியா 75 ஆவது ஆண்டுவிழாவில் மோடி அறிவித்த நியூ இந்தியா உறுதிமொழி 2022!

வரலாற்றில் நேற்றைய தினம் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கப் போராட்டம் ஆரம்பமான நாள். 1942ஆம் வருடம், ஆகஸ்டு மாதம் 8 ஆம் நாள், மும்பையில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வைத்துத் தான் முதன்முறையாக குயிட் இந்தியா போராட்டத்துக்கான அறிவிப்பு வெளியானது. ஆகஸ்டு மாதத்தில் துவக்கிய போராட்டம் என்பதால், இதை ஆகஸ்டு போராட்டம் என்றும் குறிப்பிடுவார்கள். இந்திய விடுதலைக்கு வித்திட்ட எண்ணற்ற போராட்டங்களில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கும் முக்கிய பங்கு உண்டு. லட்சோபலட்சம் மக்கள், காந்திஜியின் தலைமையில் ஒன்றுபட்டு அணிவகுத்து அந்நியப் பொருட்களை முற்றிலுமாகப் பகிஷ்கரித்து வெள்ளையனே வெளியேறு - Quit India என கோஷமிட்டு பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை பெற கடுமையாகப் போராடினர். அப்படிப்பட்ட சரித்திரப் பிரசித்தி மிக்க நாளின் 75 ஆவது ஆண்டு விழா நேற்று தலை நகர் டெல்லியில் அனுஷ்டிக்கப் பட்டது. அவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய பாரதப் பிரதமர் மோடி, தனது உரையில்;

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளை நாம் பழைய நினைவுகளுக்காக மட்டும் கொண்டாடாமல்; இனிவரும் நவீன இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நாளாக இந்நாளை நாம் இனி கொண்டாடுவோம் என்று கூறினார். கூறியதோடு நில்லாமல் குயிட் இந்தியா ஆண்டு விழா நாளில் நியூ இந்தியாவை உருவாக்கத் தேவையான உறுதிமொழிகளையும் அவர் அறிவித்தார். அந்த உறுதிமொழிகள் கீழே...

புதிய இந்தியா 2022 க்கான உறுதிமொழிகள்!

  • தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்போம்.
  • ஏழ்மையற்ற இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்போம்.
  • ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்போம்.
  • தீவிரவாதம் அற்ற இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்போம்.
  • மதவாதமற்ற இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்போம்.
  • சாதியமற்ற இந்தியாவை உருவாக்குவோம் என உறுதிமொழி ஏற்போம்.

இந்திய மக்களான நாம் அனைவரும் நம் மனதாலும், ஆன்மாவாலும் உண்மையாக மேற்கண்ட உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டு 2022 ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க முயற்சி செய்வோம். என மோடி தனது உரையாடலில் மக்களிடம் கேட்டுக் கொண்டார். மேற்கண்ட உறுதிமொழியானது மோடியின் ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

Image courtesy: financial express

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com