2018-ம் ஆண்டில் இவர்களின் சபதங்கள் என்ன என்ன? ஒரு காமெடி ரிப்போர்ட்!

ஒவ்வொரு புதுவருடப் பிறப்பிலும் (ஆங்கிலப் புதுவருடம்தான் நமக்கேது டமில் உணர்வு?)
2018-ம் ஆண்டில் இவர்களின் சபதங்கள் என்ன என்ன? ஒரு காமெடி ரிப்போர்ட்!

ஒவ்வொரு புதுவருடப் பிறப்பிலும் (ஆங்கிலப் புதுவருடத்தைத் தான் சொல்கிறேன், எமக்கேது டமில் உணர்வு?) எனக்குத் தெரிந்தவர்கள் (உங்களுக்கும் அவர்களில் சிலரைத் தெரிந்திருக்கலாம்) பலர் தவறாமல் சபதம் எடுப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளனர்.

எண்பதுகளில் காப்பி குடிக்க மாட்டேன் என்றும், தொண்ணூறுகளில் சிகரெட் தொட மாட்டேன் என்றும், மில்லினியம் ஆண்டில் குடிக்க மாட்டேன் என்றும் சபதம் எடுத்துக் கொண்டிருந்த மகாஜனங்கள், 2018-ல் நான்குக்கும் மேற்பட்ட செல்போன்களைப் பயன்படுத்த மாட்டேன் என்றெல்லாம் சபதம் எடுக்கிறார்களாம். எனிவே, சபதங்கள் பலவகை அதில் ஒவ்வொன்றும் ஒருவகை. இதோ சில காமெடி சபதங்கள் (கற்பனைக்கு ஏது எல்லை?!) 

இனி வடிவேல் படத்துடன் மீம்ஸ்களுக்கு நோ!

சில யூத்கள் உலகில் என்ன பிரச்னை நடந்தாலும், மாபெரும் புரட்சி ஏற்பட்டு உலகமே தலைகீழாக மாறினாலும், மீம்ஸ் போட்டு மகிழ்வதை வா(வே)டிக்கையாக கொண்டுள்ளனர். எந்தக் கலவரத்திலும் அவர்களுக்கு கி.கி. தேவை. இந்நிலையில் அவர்களுக்குக் கை கொடுப்பது நடிகர் வடிவேலு மட்டுமே.

இனிமே எவனாவது என்னை வைச்சு காமெடி கீமடி பண்ணீங்க..........
இனிமே எவனாவது என்னை வைச்சு காமெடி கீமடி பண்ணீங்க..........

இதனால் அவர்கள் சுய அறிவுக்கு சோதனை வந்து, தூங்கும் போதும், விழிக்கும் போதும் வடிவேலுவின் உருவம் மட்டுமே நீக்கமறத் தெரிவதால் பீதியடைந்துவிட்டனர். அதனால் இனிவரும் ஆண்டுகளில் வடிவேலுவைப் பயன்படுத்தி மீம்ஸ் போட மாட்டோம், ஹீரோக்களுக்கும் சம உரிமை அளித்து மீம்ஸ் போடுவோம் என்று சபதம் போட்டுள்ளனர்.

ஃபேஸ்புக்கில் லைக்ஸ் வேண்டாம்

சிலர் ஃபேஸ்புக் டிவிட்டர் போன்றவற்றில் அறிக்கையும் அன்றைய தினத்தில் அவர்கள் வாழ்க்கையில் நடந்த மகத்தான சம்பவங்களை பதிவு செய்து வருவதை வாழ்க்கையின் லட்சியமாக கொண்டு இயங்கிவருகின்றனர். காலை எழுந்ததும் பல் விளக்குவதை செல்ஃபி எடுத்துப் போடுவது, அதன் பின் இதான் மை டிபன் என்று 'பன்’களை ஃபன்னியாக போட்டோவாக்குவது, சைக்கிளில் போவது, காலேஜ்ஜுக்கு கட் அடிப்பது, ஆபிஸில் கேண்டீன் க்யூவில் நிற்பது என்று சகலத்தையும் பதிவு செய்து வந்தார்கள். இதற்கெல்லாம் லைக்ஸ்கள் குவியும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், டிஸ்லைக் ஹேட் போன்றவை குவியத் தொடங்கியதால் பெரும் அதிருப்திக்கு உள்ளாகினர்.

மேலும் ஃபேக் ஐடியில் புறப்பட்ட புரட்சிப் படையினர் அவர்களை வறுத்தெடுத்ததால், தற்காலிகமாக ஃபேஸ்புக்குக்கு ஜூட் விட்டுள்ளனர். மீண்டும் புது வருடத்தில் புதிய அவதாரத்தில் வருவோம் என்றும் சபதம் எடுத்துள்ளனர்.

யாருமே இல்லாத டீ கடையில் 

இந்த நாட்டில் தான் திடீர் திடீர் என்று கட்சிகளை ஆரம்பிப்பார்கள் நாமும் ஏன் அப்படி செய்யக் கூடாது என்று வேலை வெட்டி எதுவும் இல்லாத ஒரு க்ரூப், சொ.தூ.மு.ச என்ற புதுக்கட்சியைத் தொடங்கினர். ஆனால் கட்சியின் கொள்கை மற்றும் நிதி வசதிகளின் போதாமையால் மொத்தமாக ஏசொதூமுச  என்ற கட்சிக்கு தாவினர். ஆனால் இவர்கள் கட்சி மாறிய சமயம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது.  

அந்தக் கட்சியை மீ.சொ.தூ.மு.ச என்ற மூத்த கட்சி மொத்தமாக ஒரு பேமெண்ட் கொடுத்து வாங்கிவிட்டதால் அவர்கள் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறி கடையை சாத்திவிட்டனர். புதுவருடம் தொடங்கியதும்  புது கட்சித் தொடங்குவோம் என்று சூளுரைத்துள்ளனர் சொமுசெமா அணியினர்.

விளம்பரங்களுக்கு இடையே நிகழ்ச்சிகள்

தனியார் தொலைக்காட்சிகளில் எப்போதாவது விளம்பரங்களுக்கு இடையே சினிமா, சீரியல், நியூஸ் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும். பண்டிகை தினங்களில் கேட்கவே வேண்டாம். விளம்பரங்கள் தொடர் விளம்பரங்களாகிவிடும். சில புத்திசாலி ஆடியன்ஸ் இந்த சானலில் விளம்பரம் வரும்போது வேறு சானலுக்கு மாறிவிடுவார்கள்.

ஆனால் இத்தகைய சூழ்ச்சிகளை அவதானித்துவிடும் சானல் நிறுவனங்கள் அத்தனை விளம்பரங்களும் ஒரே நேரத்தில் போடத் தொடங்க, எட்டுத் திக்கிலும் விளம்பரங்கள் மட்டுமே காண முடியும். சில சமயம் விளம்பரங்களுக்கே நேரம் சரியாக இருப்பதால் நிகழ்ச்சிகளை போடுவதற்கு மறந்துவிடுவார்கள். இதனால் கடுமையாக பாதிப்படைந்தார் 'செத்தாள் சந்திரிகா’ சீரியலைத் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகை ஒருவர். சந்திரிகா செத்தாளா இல்லையா என்ற முடிவு தெரியும் வரை போராடுவோம் என்று பெருங்கூட்டம் ஒன்றைத் திரட்டி போர்  அறிக்கைவிடவே, நடுங்கிப் போன சானல் நிறுவனங்கள் புது வருடத்திலிருந்து கொஞ்சூண்டு நிகழ்ச்சியை காண்பிக்க முடிவு செய்துள்ளனர். (குறைந்தது 175 வருடங்கள் சந்திரிகாவுக்கு சாவு கிடையாது என்று சானல் உறுதி அளித்தவுடன் தான் ரசிகைகள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்).

பொதுஜனம் பலவிதம் சபதங்கள் ஒரேவிதம்

இனி தியேட்டருக்கு சென்று படம் பார்க்க மாட்டோம் (டிக்கெட் விலை எகிறிடுச்சே), டூவீலரில் பயணம் செய்ய மாட்டோம் (ஹெல்மெட் போட வேண்டுமே), வீட்டை விட்டு வெளியே எங்கும் போக மாட்டோம் (பெட்ரோல் செலவு மிச்சமாகும்). அரிசி, காய்கறி, பழங்கள், தண்ணீர் எதையும் குடிக்க மாட்டோம், சாப்பிட மாட்டோம் (விலைவாசி, ஜிஎஸ்டி, உணவுப் பொருளில் பாய்சன் இதுபோன்றவற்றிலிருந்து தப்பிக்க), பூமியில் வாழப் போவதில் (நிலத்தை நீர் முழுவதும் உறிஞ்சி எடுக்கப்பட்டுவிட்டதால் செவ்வாய் கிரகம் செட் ஆகுமா என்ற யோசனையில்)

வாட்ஸ் அப் மெசேஜ்களை ஃபார்வெர்ட் செய்ய மாட்டோம் (இது வரை ஆயிரம் முறைக்கு மேல் சுழற்சியில் அதே நியூஸ் திரும்ப திரும்ப திரும்ப....வருவதால்), ஆனால் எப்ப தேர்தல் வந்தாலும் சரி தவறாம ஓட்டு மட்டும் நிச்சயம் போடுவோம் என்று சபதம் எடுத்துள்ளனர். 

இதுபோன்ற காமெடி சபதங்களை உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் எடுத்திருந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளலாம்! 

புகைப்படங்கள் நன்றி : imgflip

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com