வீட்டில் பணப்பிரச்சனை அதிகமா இருக்கிறதா?

வீட்டில் பணப்பிரச்சனை அதிகம் இருந்தால், நிம்மதி பறி போகும். அதிகப் பணம் இல்லா விட்டாலும் கூட பரவாயில்லை.
வீட்டில் பணப்பிரச்சனை அதிகமா இருக்கிறதா?
Published on
Updated on
3 min read

வீட்டில் பணப்பிரச்சனை அதிகம் இருந்தால், நிம்மதி பறி போகும். அதிகப் பணம் இல்லா விட்டாலும் கூட பரவாயில்லை. அத்தியாவசியத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் பணம் நிச்சயம் தேவை. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை, என்ன செய்தாலும் பணப் பிரச்னை தீருவதில்லை, இதற்கெல்லாம் முடிவே இல்லையா என்று நினைத்து வருத்தப்படாதீர்கள். பின் வரும் சிலவற்றை கடைபிடித்துப் பாருங்கள். 

தினமும் அதிகாலையில் கண்விழிக்க வேண்டும். பின் தூங்கி பின் எழும் பழக்கம் மிகவும் கெடுதல். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஊன்றி கவனித்துப் பாருங்கள் அவர்கள் அனைவரும் அதிகாலை எழும் பழக்கத்தை கடைபிடிப்பவர்களாக இருப்பார்கள். எழுந்தவுடன் முதலில் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும். அல்லது கண்ணாடியைப் பார்க்கலாம். 

காலைக் கடன்களை முடித்து, குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும் பின்புதான், முகத்தை துடைக்க வேண்டும். குளித்தவுடன் உடலைத் துவட்டும் போது முதலில் மூதேவிதான் உடலில் இடம்பிடிப்பாள் அதன் பின்தான் லட்சுமி வருவாள் என்று சொல்லி வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.

உடலை தூய்மைப்படுத்தியவுடன் வீட்டில் பூஜை அறைக்குச் சென்று இறைவனை வழிபட வேண்டும். பூஜை அறை தனியாக இல்லாவிட்டாலும் கடவுளர் படத்தினை வைத்திருக்கும் இடத்தில் உள்ளன்புடன் எளிமையான பூஜையை செய்தல் வேண்டும். கடவுளை வணங்கும் சமயத்தில் ஈரத் துண்டு அல்லது வேஷ்டி அணிந்து வணங்க வேண்டும். கைலி அல்லது அரை டிராயாருடன் பூஜை அறைக்குள் போகாதீர்கள். தெய்வத்தின் முன் எப்படி வேண்டாலும் நிற்பேன், இதிலென்ன ரூல்ஸ் என்று விதண்டாவாதம் புரியாதீர்கள். அலுவலகத்தில் தினமும் டை மற்றும் ஷு அணிந்துதான் செல்ல வேண்டும் என்று சொன்னால் உடனடியாக கடைபிடிப்போம் அல்லவா. அது போல தான் சிலவற்றை செய்யுங்கள் என்றும் சில விஷயங்கள் ஆகாது என்றும்  ஆசார அனுஷ்டானங்களை ஏற்படுத்தி வைத்துள்ளனர். அவற்றில் நம் அறிவுக்குப் புலப்படாத காரணங்கள் ஏதேனும் இருக்கும். எனவே தேவையற்ற கேள்வியின்றி இறைவனிடம் சரண் அடைதலே பக்திக்கு ஆதாரனமான விஷயம். பக்தி யோகம் உங்களை நிச்சயம் பணப் பிரச்னை என்றில்லை எல்லா பிரச்னையிலிருந்தும் காப்பாற்றி கரை சேர்த்துவிடும்.

பூஜை அறை வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். மேலும் பூஜை அறையில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற பல்ப்பைப் பயன்படுத்த வேண்டும்.

பூஜை அறையில் சங்கு வையுங்கள். சங்கு லஷ்மி தேவியுடன் தொடர்புடையதால், இதனை வீட்டினுள் வைத்திருப்பதால், செல்வம் அதிகரிக்கும் என்பது சிலரின் நம்பிக்கை. 

தினமும் இறைவனை வணங்குவதை ஒரு கடமையைப் போலச் செய்யாமல் ஆழமான உணர்வுடன் செய்ய வேண்டும். பூஜை முடித்த பின்னர் சுவாமிக்கு கற்பூரம் அல்லது தீப ஆரத்தி எடுத்து, நிவேதனம் செய்த பின் தான் காலை உணவைச் சாப்பிட வேண்டும். சாப்பிடத் தொடங்கும் முன் காக்கைக்கு சிறிதளவு உணவை தினமும் வைக்க வேண்டும்.

நாம் சாப்பிடும் உணவுப் பாத்திரத்துக்கு வட்டில் என்ற அழகான சொல் உள்ளது. சிலர் வட்டிலை தட்டு என்று சொல்வார்கள். அப்படி  சொல்லக்கூடாது அது தட்டுபாட்டுக்கு உரிய சொல். சாப்பிடுகையில் இடது கை எப்போதும் வட்டிலைத் தொட்டு கொண்டு இருக்க வேண்டும். 

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மின்விசிறி, கேஸ் அடுப்பு, விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டிருகின்றனவா என்று சரி பார்த்து விட்டுச் செல்ல வேண்டும். வீட்டில் உள்ள குழாய்களில் எப்போதும் தண்ணீர் வடிந்தவாறு இருந்தால் அதை உடனே சரி செய்யவும். இல்லாவிட்டால் தண்ணீர் வீணாவது போலவே, நம்முடையிஅ பணமும் நிலைக்காமல் வீணாய் செலவாகும்.

வீட்டிலேயே படுக்கை அறையில்தான் செல்வம் அதிகரிக்கும். எனவே படுக்கை அறை நேர்த்தியாக எவ்வித குறையும் இல்லாமல் இருப்பது நல்லது. பணத்தை பத்திரப்படுத்த பயன்படுத்தும் அலமாரி, பீரோ போன்றவற்றை வீட்டின் தெற்கு திசையில் வைத்து, அதன் முகம் வடக்கு திசையை நோக்கியவாறு வையுங்கள். இது வீட்டில் பணத்தை நிலைத்திருக்கச் செய்யும். படுக்கை அறைக் கட்டிலின் கால்கள் உடைந்திருந்தாலோ, அலமாரிகள் மற்றும் இதர மரப் பொருட்கள் சேதமடைந்திருந்தாலோ, அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, பணக் கஷ்டத்தை அதிகரிக்கும். எனவே இம்மாதிரியான பொருட்களை உடனே சரி செய்துவிடுங்கள் அல்லது தூக்கி எறிந்துவிடுங்கள்.

மாலையில் சந்தியா நேரத்தில் தினமும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். முடிந்தால் அருகாமையில் இருக்கும் கோவிலுக்குச் சென்று வரலாம். அங்குள்ள தூய்மையான காற்றும், தெய்விக அலைவரிசையும் மனத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

இரவு உணவை நேரத்துக்கு சாப்பிட வேண்டும். இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது லட்சுமி கடாட்சம் காணாமல் போய்விடும் என்பார்கள். அது உண்மையோ இல்லையோ அது உடல் நலத்துக்கு நல்லது அல்ல. தயிர் எளிதில் செரிமானம் ஆகாது உணவு. அதை இரவில் சாப்பிட ஜீரண கோளாறுகள் ஏற்பட்டு உறக்கம் பாதிக்கப்படும்.

ஓரிரவு தூக்கம் பாதித்தாலும் அது அடுத்த நாளின் மொத்த இயக்கத்தை பாதித்துவிடும். எனவே நன்றாக தூங்கி மறுநாள் அதிகாலையில் சுறுசுறுப்பாக எழுந்தால்தான் நாள் முழுவதும் உழைக்க முடியும். உழைப்பே பண வருவாயின் மூலாதாரம். எனவே அது பாதிப்படையாமல் இருக்க, மேற்சொன்ன விஷயங்களில் அதிக கவனத்துடன் செயல்பட்டு விழிப்புணர்வுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள். பணப் பிரச்னைகளை ஓட ஓட விரட்டுங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com