திங்கட்கிழமையை நினைத்து பயமா? இதைப் படியுங்கள்!

திங்கட்கிழமையே போ போ, ஞாயிற்றுக்கிழமையே விரைந்து வா என்று குழந்தைகள்
திங்கட்கிழமையை நினைத்து பயமா? இதைப் படியுங்கள்!

திங்கட்கிழமையே போ போ, ஞாயிற்றுக்கிழமையே விரைந்து வா என்று குழந்தைகள் அடம் பிடிப்பது போல மண்டே ஃபீவர் பிடித்தவரா நீங்கள்? கவலைப்படாதீர்கள். மற்ற நாட்களைப் போல திங்கள் உங்களுக்கு தித்திக்க சில டிப்ஸ்:

ஞாயிறு மதியமே அடுத்த நாளின் வேலைகளைப் பற்றிய பீதியை மனத்தில் சுமக்காதீர்கள். அப்படி செய்தால் இந்த நொடி சந்தோஷத்தை இழப்பதுடன் மறுநாளின் சுமையையும் அதிகமாக்கிக் கொள்கிறீர்கள். முதலில் ஞாயிறு முழுவதும் மகிழ்ச்சியாக மனநிறைவுடன் வாழுங்கள்!

'ஐயோ திங்கட்கிழமையா'!!!!! என்ற இந்த அலாரத்தை தலைக்குள் இருந்து நிறுத்துங்கள். இந்த வாரம் இனிய வாரமாக மாறுவதற்கான முதல்படி திங்களிலிருந்து தொடங்குகிறது என்று மனத்தை தயார்படுத்திக் கொள்ளுங்கள். 

சின்ன சின்ன திட்டமிடல்களுடனும் வேலைகளைத் தொடங்குங்கள். அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு செல்வதில் தொடங்கி, அன்றைய பணிகளை அவசரப்பட்டுச் செய்யாமல் சற்று நிதானத்துடன் அணுகுங்கள். 

ரொட்டீன்கள் பெரும்பாலும் அலுப்பானவை எனவே வழக்கமாக செய்ய வேண்டிய வேலைகளை விரைவாக முடித்துவிடுங்கள். சுறுசுறுப்பாக இருந்தால் தேவையற்ற நினைவுகள் உங்களை வருத்தாது.

திங்கள் காலையில் உங்களுக்குப் பிடித்த வேலைகளை முதலில் செய்யத் தொடங்குங்கள். பிடித்த வேலையைச் செய்யும் போது உற்சாகம் பெருகும். அது அந்த நாளின் இனிமையை அதிகரித்துவிடும்.

திங்கட்கிழமை ஜூரம் என்பது ஒரு கற்பனையான மனப்பான்மை. அப்படி ஒன்று கிடையாது என்று நினைக்கத் தொடங்குங்கள். இது தான் இப்பிரச்னைக்கான நிரந்தர தீர்வு என்பதை உணருங்கள்.

தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலை பிடிக்கவில்லையென்றால் திங்கள் மட்டுமல்ல, வாரத்தின் எல்லா தினங்களும் வெறுப்பு நாட்கள்தான். ஒன்று அந்த வேலையை மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது உங்கள் மனப்பான்மையை நீங்கள் மாற்றியே ஆக வேண்டும். எது சுலபமோ அதைச் செய்யுங்கள். 

நண்பர்கள் அல்லது அலுவலகத் தோழிகள் திங்கட்கிழமை வந்திருச்சா அய்யோ உய்யோவென்று என்று உங்களுக்கு மீம்ஸ் அனுப்புவதை ரசிக்காதீர்கள். அவர்களிடம் வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். அல்லது தொடர்ந்து அனுப்பி கொண்டிருப்பவர்களை அன் ப்ரெண்ட் செய்துவிடுங்கள். உங்களுக்கு எது பிடிக்க வேண்டும் பிடிக்க கூடாது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். மற்றவர்கள் உங்களுக்கான முடிவுகளை எடுப்பதை அனுமதிக்காதீர்கள். அது திங்கள் பற்றியதாக இருந்தாலும் சரி வேறு எதுவாக இருந்தாலும் சரி.

ஒவ்வொரு திங்களும் ஒரு புதிய விஷயத்தைச் செய்யத் தொடங்குங்கள். ஒரு திங்கள் செடி ஒன்றினை நடலாம். அடுத்த திங்கள் தெருவில் வாழும் நாய்களுக்கு பிஸ்கட் வாங்கிப் போடுங்கள். மற்றொரு நாள் பீச்சுக்கு சென்று கடலைப் பார்த்துவிட்டு அலுவலகம் கிளம்பிச் செல்லுங்கள். ஏதோ ஒரு சிறிய விஷயம் அது எதுவாக இருந்தாலும் உங்கள் மனத்துக்கு பிடித்ததை செய்த பின் அந்த நாளை துவங்கிப் பாருங்கள். சுவர்க்கமாக இருக்கும்.

நீங்கள் கடவுள் பக்தி உடையவராக இருந்தால் வீடு அல்லது அலுவலகத்தின் அருகே இருக்கும் கோவிலுக்கு போய் நிம்மதியாக கொஞ்ச நேரம் இறைவனை தரிசித்துவிட்டு அதன் பின் வேலைகளை தொடங்குங்கள். 

திங்கட்கிழமையா என்று மனத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். ரிலாக்ஸ்டாக வேலைகளை செய்யுங்கள். மனத்தை நெகிழ்வாக வைத்திருந்தால் தான் எதிர்மறை எண்ணங்கள் தோன்றாமல் உற்சாகத்துடன் இருக்க முடியும்.

திங்கட்கிழமையோ வாரத்தின் எந்த நாளோ இப்போது நீங்கள் கண் விழித்துவிட்டீர்கள். உயிருடன் நாம் இருக்கிறோம் என்பதும், நாம் செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன என்ற விழிப்புணர்வுடன் கூட புரிதல் இருந்தால் போதும், திங்கட்கிழமையில் தொடங்கிய உற்சாகம் அடுத்தடுத்த திங்கட்கிழமைகளில் சங்கிலியாகத் தொடரும். 

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும். திங்கள் என்றால் தமிழில் நிலா என்ற பொருளும் உண்டு. நிலவு நாளை நேசிக்கத் தொடங்குங்கள்.

நீங்கள் செய்யும் வேலையில் ஆழமான பிடிப்பு இருந்தால் ஞாயிற்றுக்கிழமை கூட உங்களுக்குத் திங்களாகும். வேலையை வாழ்க்கையை அந்தந்த நிமிடத்தின் ருசியை அனுபவியுங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு நொடியும் வாழக் கிடைத்த வாய்ப்பு. ஒரு புது நாள் என்பது ஒரு புதிய பரிசு. அது உங்களுக்குத் தரப்பட்டிருப்பது நிச்சயம் வரம். எனவே அதை பொக்கிஷமாக்கிக் கொள்வதும் குப்பையாக நினைத்து தூர எறிவதும் உங்கள் கையில் தான் உள்ளது.

என்ன தயாராகிவிட்டீர்களா? திங்கட்கிழமையை(யும்) நேசிக்கத் தொடங்குங்கள். எல்லா நாட்களிலும் உற்சாகம் சந்தோஷம் உங்கள் வசப்படும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com