முன்னொரு காலத்தில், அதிகமில்லை சுமார் முப்பது வருடங்கள் முன்பு, கிராமங்கள் இட்டேரிகளால் இணைக்கப்பட்டு இருந்தன. இட்டேரி என்பது கொங்கு நாட்டுச் சொல். இருபுறமும் அடர்ந்த வேலி. நடுவில் ஒற்றையடிப் பாதை அல்லது மாட்டுவண்டித் தடம். இதுவே இட்டேரி என்று இங்கே அழைக்கப்படும். மற்ற ஊர்களில் என்ன பெயர் என்று தெரியவில்லை. இந்த இட்டேரி என்பது "ஒரு தனி உலகம்." இதை நான் "Itteri eco-system" என்று அழைப்பேன். கள்ளி வகைகள், முள்ளுச்செடிகளுக்கு இடையே, வேம்பு, மஞ்சக் கடம்பு, நுணா, புரசு போன்ற மரங்கள், நொச்சி, ஆடாதொடை, ஆவாரம் போன்ற செடிவகைகள், பிரண்டை, கோவை போன்ற கொடிவகைகள், மற்றும் பெயர் தெரியாத எண்ணற்ற புற்பூண்டுகள் நிறைந்திருக்கும். இவை உயிர்வேலியாய் விவசாய நிலங்களை காத்து வந்தன. இங்கு எண்ணற்ற உயிர்கள் வாழ்ந்து வந்தன. கறையான் புற்றுகள் , எலி வங்குகள் நிறைய காணப்படும். நிழலும் ஈரமும், இலைக்குப்பைகளும் எப்போதும் காணப்படுவதால் எண்ணற்ற பூச்சியினங்கள் காணப்படும். இவற்றை உணவாக கொள்ள வண்டுகள், நண்டுகள், பாப்பிராண்டிகள், உடும்புகள், ஓணான்கள், கோழிகள், குருவிகள், அலுங்குகள், ஆமைகள், இப்படிப் பல உயிர்களும் இவற்றை உணவாக கொள்ள பாம்புகள் , பருந்துகள், நரிகள் போன்றவையும் இருந்தன.