ஆன்லைன் ஷாப்பிங்கில் நிபுணராக விரும்புகிறீர்களா?

ஆன்லைன் ஷாப்பிங் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தே
ஆன்லைன் ஷாப்பிங்கில் நிபுணராக விரும்புகிறீர்களா?

 
ஆன்லைன் ஷாப்பிங் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள முடிவதால் அது நெட்டிசன்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களின் சேமிப்புத் திறனையும் இது மேம்படுத்துகிறது. ஆனால் நிறைய தளங்கள், எக்கச்சக்கமான பொருட்கள். எது தரமானது? எப்படி நமக்கு ஏற்ற பொருட்களை வாங்குவது? அது அத்தனை கடினமான ஒரு விஷயமல்ல. ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முன்பாக சிலவற்றை கவனத்தில் வைத்து ஷாப்பிங் செய்வது அதி முக்கியம்.

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது கண்கவரும் சில விஷயங்களை அது தேவையா இல்லையா என்பதைப் பற்றி யோசிக்காமல் அவசரத்தில் வாங்கி விடுவோம். அது பணத்தையும் நேரத்தையும் வீணாக்கிவிடும். மேலும் சிலர் ஆன்லைனில் பொருட்களை அடிக்கடி பார்ப்பதும் அதை விருப்பப் பட்டியலில் (விஷ் லிஸ்ட்) போட்டு வைப்பதும், திடீரென்று நினைவுக்கு வந்து அதை வாங்குவதுமாக ஒருவித அடிக்‌ஷன் மனநிலைக்கு போய்விடுவார்கள். இதுவும் தேவையற்றது. ஆன்லைனில் ஸ்மார்ட் ஷாப்பிங் செய்வது ஒரு கலை. அதில் நீங்கள் நிபுணராக முடியும், அதற்கு நீங்கள் முதலில் சில டிப்ஸை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 

சிறந்த சலுகைகளை கண்டறியுங்கள் 

ஊசி முதல் ஊஞ்சல் வரை, காப்பி பொடி முதல் காசு மலை வரை அனைத்து பொருட்களையும் பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் இணையத்தில் விற்கின்றன. நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது, ​​ஒரே ஒரு வலைத் தளத்தில் பொருட்களை வாங்காமால், வெவ்வேறு வலைத்தளத்தில் அந்த பொருட்களின் விலையை பாருங்கள். மற்ற வலைத்தளங்களில் அந்தப் பொருட்களுக்கு உரிய சலுகைகளையும் நீங்கள் காணலாம்.

பெரும்பாலும் நாம் பெரிதும் நம்பும் அல்லது அடிக்கடி பொருட்களை வாங்கும் வலைத்தளத்தை மட்டுமே அதிகம் பயன்படுத்துவோம். ஆனால் மற்ற வலைத்தளங்களில் அதிக சலுகைகளில் அதே பொருளைப் பெற முடியும். இதில் நமக்குத் தேவை கொஞ்சம் பொறுமை மட்டுமே.

கூப்பன்களில் ஒரு கண் வைத்திருங்கள்

ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது தற்போதைய சலுகைகள் மற்றும் கூப்பன்கள் மூலம் வழங்கப்படும் தள்ளுபடி பற்றிய தகவல் வழங்கும் பல வலைத்தளங்கள் உள்ளன, எனவே நீங்கள் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் கூப்பன் தேடலில் சிறிது நேரம் செலவிட சிறந்தது. பொருளுக்கு வரும் இலவசங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

பொருட்களை திருப்பி அனுப்பும் வசதி

ஆன்லைன் மூலம் வாங்கும் போது Return Policy அந்த தளத்தில் உள்ளதா என்பதை கவனித்து வாங்குங்கள். இது மிகவும் முக்கியமான விஷயம். காரணம் ஆடை, மோதிரம், காலணி, போன்ற சில பிரத்யேகப் பொருட்களை வாங்கும் போது அளவு சரியாக இல்லை என்றால் அதை திருப்பி அனுப்பி வேறு ஒன்றை வாங்கும் வசதி அந்த தளத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் பணம் வீணாவதுடன் மனக் கஷ்டமும் ஏற்படும்.

தொகுக்க மறக்கக் கூடாது

சில வலைத்தளங்களின் விலைகள் ஒப்பீட்டு வடிவில் ஒரே இடத்தில் காண்பிக்கப்படுகின்றன. இதன் படி, ஸ்மார்டான பயனர்கள் வெவ்வேறு வலைத்தளங்களில் உள்ள அந்த பொருளை ஒப்பிட்டு விலைப்பட்டியலை சரிபார்த்து, சலுகைகள் கூப்பன்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சரிபார்த்துவிட்டு தங்களுக்கு உகந்த சரியான பொருட்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தரமான பொருட்களை குறைந்த விலையில் ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவதே புத்திசாலித்தனம்.

கால அவகாசம்

நீங்கள் ஆர்டர் செய்த பொருள் அதிகபட்சம் 15 அல்லது 20 நாட்களுக்குள் உங்கள் கைக்கு வந்து சேர வேண்டும். அதற்கு மேல் அதிக நாட்கள் ஆகும் என்று தளத்தில் காண்பித்தால் நீங்கள் வேறு தளத்தில் சென்று ஷிப்பிங் டைம் எத்தனை நாட்கள் என்று பார்த்து வாங்கலாம். சென்னை போன்ற பெரு நகரங்கள் என்றால் ஒரு பொருள் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் கிடைத்து விடும்.
அப்படி ஆர்டர் செய்த பொருட்கள் தகுந்த சமயத்தில் கிடைக்கவில்லை என்றால் ஏதோ பிரச்சினை என்பதை நீங்கள் உணரவேண்டும். உடனடியாக பொருள் எங்கே உள்ளது என்பதை டிராக் செய்து பாருங்கள். இன்னும் அந்த பொருட்களை அவர்கள் அனுப்பவில்லை என்றால் உடனடியாக கேன்சல் செய்து விடுங்கள்.

பணம் திரும்பக் கிடைக்க வேண்டும்

ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு தேவையில்லை அவசரப்பட்டு வாங்கிவிட்டோமே என்று தோன்றினால் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களை கேன்சல் செய்யும் வசதியை குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனியுங்கள். அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படி இது இருக்க வேண்டும். பெரும்பாலும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்பக் கிடைத்துவிடும்.

இறுதியாக, ஆர்டர் குறித்து உங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளை பொருட்கள் உங்களிடம் வந்து சேரும் வரை அழிக்காமல் பத்திரமாக வைத்திருங்கள்.

இவையே ஆன்லைன் ஷாப்பிங் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com