மனைவிக்கு கணவரே பிரசவம் பார்த்த மற்றுமொரு பகீர் கதை, குழந்தையின் தொப்புள் கொடியை நீக்க மறுக்கும் அதிர்ச்சி!

தொப்புள் கொடி என்பது தானாகத் தான் விழ வேண்டுமே தவிர, அதை நாம் அறுத்தெடுக்கக் கூடாது, அப்போது தான் அதில் உள்ள நஞ்சு குழந்தையின் உடலில் ஏறி குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்’ என கண்ணன்
மனைவிக்கு கணவரே பிரசவம் பார்த்த மற்றுமொரு பகீர் கதை, குழந்தையின் தொப்புள் கொடியை நீக்க மறுக்கும் அதிர்ச்சி!
Published on
Updated on
1 min read

தேனி அருகே கோடங்கிபட்டியில் கர்ப்பிணி மனைவிக்கு கணவரே பிரசவம் பார்த்ததோடு மட்டுமல்லாமல் குழந்தையின் தொப்புள் கொடியை அறுக்க விடாமல் மருத்துவர்களுடன் தகராறு செய்த செய்தி அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. கோடங்கிபட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தன் மனைவி மகாலட்சுமிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்துள்ளார். மகாலட்சுமிக்கு சுகப்பிரசவமானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவரே வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த அதிசயம் அரசு மருத்துவமனைக்கு எட்டி அங்கிருந்து மருத்துவர்களும் செவிலியரும் நேராக கண்ணன் வீட்டுக்கே வந்து பிரசவித்த தாய்க்கும், குழந்தைக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால், கண்ணன் அதற்கு ஒப்புக் கொள்ளாததோடு குழந்தையின் தொப்புள் கொடியை நீக்கவும் மறுத்திருக்கிறார்.

தொப்புள் கொடியை நீக்காவிட்டால் குழந்தைக்கு ஆபத்து என மருத்துவர்கள் எடுத்துக் கூறியும் கண்ணனும் அவரது வீட்டினரும் அதை மறுத்ததோடு வீட்டின் கதவை இறுகப் பூட்டிக் கொண்டு மருத்துவர்களுடன் ஒத்துழைக்க மறுத்திருக்கின்றனர். காரணம் கேட்ட மருத்துவர்களிடம் ‘தொப்புள் கொடி என்பது தானாகத் தான் விழ வேண்டுமே தவிர, அதை நாம் அறுத்தெடுக்கக் கூடாது, அப்போது தான் அதில் உள்ள நஞ்சு குழந்தையின் உடலில் ஏறி குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்’ என கண்ணன் தெரிவித்திருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன மருத்துவர்கள் இவ்விஷயத்தை காவல்துறைக்கு அறிவிக்க விரைந்து வந்த காவல்துறையினர் கண்ணன் குடும்பத்தாரை எச்சரித்ததோடு வீட்டில் பிரசவம் பார்ப்பதால் நேரக்கூடிய ஆபத்துகளைப் பற்றியும் விளக்கியுள்ளனர். அப்போதும் கண்ணன் குடும்பத்தார் தாங்கள் செய்ததே சரி எனப் பிடிவாதமாகச் சாதிக்க, அரசு மருத்துவர்கள், குழந்தையை மட்டுமேனும் கொடுங்கள் சிகிச்சை அளிக்கிறோம் என்று அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஆனால், கண்ணன் குடும்பத்தார் குழந்தையை தொப்புள் கொடி அறுக்காமல் அப்படியே வீட்டின் உள்ளேயே வைத்துக் கொண்டு அனைத்துக்கதவுகளையும் இழுத்துச் சாத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு வராமலும் குழந்தை பிறந்த பின்பு அதன் தொப்புள் கொடியை அறுக்க மறுத்தும் போராடிக் கொண்டிருக்கும் அக்குடும்பத்தினரைக் கண்டு அப்பகுதி மக்கள் பரபரப்படைந்து விட்டனர். தற்போது கண்ணனின் தந்தை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைக்கான மருத்துவப் பாதுகாப்பு குறித்துப் பேசக் கூட இடமளிக்காத அக்குடும்பத்தினரின் செயல் அரசு மருத்துவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com