நல்ல தரமான உணவு வகைகள் நியாயமான விலையில் வேண்டுமா?

'இங்கு பலவிதமான தொழில்கள் செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கினாலும் உங்களால் எதை செய்தால் வெற்றிகரமாக
நல்ல தரமான உணவு வகைகள் நியாயமான விலையில் வேண்டுமா?
Published on
Updated on
2 min read

'இங்கு பலவிதமான தொழில்கள் செய்வதற்கான ஆலோசனைகள் வழங்கினாலும் உங்களால் எதை செய்தால் வெற்றிகரமாக செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். தற்பொழுது பெரும்பாலானோர் மத்தியில் உணவு சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அதனால் நமது பாரம்பரிய உணவு பழக்க வழக்கங்களைத் தேடிக் கொண்டே இருக்கிறோம். நல்ல தரமான உணவு வகைகள் நியாயமான விலையில் கடைகளில் கலப்படம் இல்லாமல் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். எனவே, உணவுத் தொழில் எப்போதும் நமக்கு கை கொடுக்க கூடியது. அந்த வகையில், வீட்டில் இருந்தபடியே சில உணவு வகைகளை எப்படி தயார் செய்து விற்பனை செய்யலாம் என்பதை பார்க்கலாம்' என்கிறார் சுயதொழில் ஆலோசகர் உமாராஜ்.

சேவை: சேவை எப்படி தயார் செய்வது என்பதை. அதாவது பச்சரிசியில் செய்வது இடியாப்பம், புழுங்கல் அரிசியில் செய்வது சேவை. இதை அரிசியில் மட்டுமல்லாமல் கோதுமை, கேழ்வரகு மற்றும் சிறுதானியத்திலும் செய்ய முடியும். இதை செய்வதும் எளிது. புழுங்கல் அரிசியை ஊற வைத்து பின் அரைத்து அதை இட்லி போல் வேக விட்டு பின்னர் அதை இடியாப்ப அச்சிலிட்டு பிழிய வேண்டும். பெரிய அளவில் இதைச் செய்ய இதற்கான இயந்திரங்கள் உண்டு. உங்களால் ரூ. 70,000 முதலீடு செய்ய முடிந்தால் அல்லது வங்கியில் கடன் பெற முடியும் என்றால், வீட்டில் 10க்கு 10 இடம் இருந்தாலே போதும். இதை எளிதாக செய்யலாம். இதற்கு வீட்டு உபயோகத்தில் இருக்கும் மின்சாரம் போதுமானது. என்னால் இவ்வளவு முதலீடு செய்ய இயலாது என்றால் இதனை செய்பவர்களிடமிருந்து மொத்தமாக வாங்கி அதை விதவிதமாக தயார் செய்யலாம். அதாவது அதை எலுமிச்சை சேவை, தேங்காய் சேவை, வெஜிடபிள் சேவை மற்றும் மஸ்ரூம் சேவை என பலவிதமாக தயார் செய்து விற்பனை செய்யலாம். சின்ன சின்ன கம்பெனிகள் நிறைய உள்ள இடங்களில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

பாப்கார்ன்: நீங்கள் இருக்கும் பகுதி, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி எனில், உங்களால் ரூ. 12,000 முதலீடு செய்ய முடியும் என்றால் பாப்கார்ன் செய்யும் மிஷின் வாங்கி இதனை தயாரிக்கலாம். மேலும், மிஷின் வாங்கும் போது அதனை எப்படி உபயோகப்படுத்துவது என கற்றும் தருவார்கள். பாப்கார்னில் தற்போது நிறைய வகைகள் இருக்கிறது. அதனை அவர்களே சப்ளையும் செய்கிறார்கள். நீங்கள் சில்லறை வியாபாரிகளுக்கு மொத்த விலையில் கொடுக்கலாம்.

சப்பாத்தி: திருமண விசேஷங்கள், ஓட்டல்கள் மற்றும் சிறிய விசேஷங்களுக்கு சப்பாத்தி செய்வது எளிதல்ல. அதிகளவில் சப்பாத்தி செய்வதற்கு இயந்திரம் உள்ளது. சில மிஷின்கள் மாவை பிசைந்து, பின் அதை உருண்டையாக்கி, பின் அதுவே வட்ட வடிவமாக செய்து தரும். இதில் கால்வாசி வெந்துவிடும். பிறகு அதை ரெடிமேட் சப்பாத்தியாக விற்பனை செய்யலாம். இது தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை வாங்கி சப்பாத்தி கல்லில் போட்டு சுட்டு எடுத்தால் சப்பாத்தி ரெடி. இன்னொரு இயந்திரம் உள்ளது அதில் மாவை போட்டால், பிசைந்து , உருட்டி, திரட்டி சப்பாத்தியாக கொடுத்துவிடும். இது விலை சற்று அதிகம். குறைந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான சப்பாத்திகளை செய்யக் கூடியது. ஆக உங்களால் ரூ.1 லட்சம் முதல் 2.50 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும் என்றால், வீட்டில் இடவசதி உள்ளது என்றால் சப்பாத்தி செய்யும் தொழிலை செய்யலாம். கேட்டரிங் செய்பவர்கள், ஓட்டல் நடத்துவோரிடம் ஆர்டர் பிடித்து செய்ய நல்ல லாபம் கிடைக்கும். இது போன்ற இயந்திரங்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com