கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலம் சிவமோகா பகுதியில் இருக்கும் ஜோக் நீர்வீழ்ச்சி... இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எனும் பெருமை கொண்டது. எனவே தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்த்திழுக்கும் தன்மை இந்த நீர்வீழ்ச்சிக்கு உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இதில் சரியான நீர்வரத்து இன்றி சுமாரான நிலையில் இருந்து வந்த நீர்ப்பொழிவு சமீபத்திய கனமழையில் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்து தற்போது மலை விளிம்பில் இருந்த் அதன் கிளைவழிகள் அனைத்திலும் பெருகித் திரண்ட வெள்ளம் கட்டுக்கடங்காத ஆர்வத்தோடு பாய்ந்தோடி வீழும் காட்சி காணக் காண உவகையூட்டுவதாக இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியானது ஷராவதி ஆறானது 253 மீட்டர் உயரத்தில் இருந்து விழுவதால் தோன்றியது.
கர்நாடக மாநிலத்தின் முதன்மையான சுற்றுலா மையங்களில் ஒன்றாகத் திகழும் இந்த அருவியானது கெருசொப்பெ அருவி எனவும் ஜோகதகுன்டி அருவி எனவும் அழைக்கப்படுகிறது.