மணிப்பூரின் மிக அரிதான 'பெங்பா' மீன் வகைகளை மேற்கு வங்க மாநில நீர்நிலைகளில் வளர்த்தெடுக்க அம்மாநில அரசு மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பெங்பா வகை மீன்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் மிகுதியாகக் கிடைக்கக் கூடிய ரோஹூ, கட்லா, சில்வர் கார்ப் உள்ளிட்ட மீன் வகைகளைப் போன்ற இயல்புடையது. ஆயினும் அவற்றைக் காட்டிலும் சுவையில் பலபடி மேலானது. அதனால் தான் பெங்பாவுக்கு மணிப்பூர் மாநிலம், மாநில மீன் எனும் சிறப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
பல்வேறு இயற்கை மற்றும் செயற்கை காரணிகளை முன்னிட்டு இந்த மீன் தற்போது அரிதான மீன் வகைகளில் ஒன்றாக ஆகிவிட்டது. அந்த காரணத்தை முன்னிட்டே மேற்கு வங்கம் பெங்பா மீன்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் குறித்து தற்போது இந்திய அளவில் பெரிதாகப் பேசப்படுகிறது. பெங்பா வகை மீன்கள் அதிகக் குளிர்ச்சியான மணிப்பூர் மாநிலத்தை தாய்மையிடமாகக் கொண்டிருந்த போதும் அம்மீன்கள் வெதுவெதுப்பான நீரிலும் வாழும் தன்மை கொண்டவை. இருவேறு வகையான தட்பவெப்ப நிலைகளைத் தாங்கும் தன்மை கொண்ட அதன் சிறப்பியல்பின் காரணமாக தற்போது மேற்கு வங்கத்தின் ஹால்டியா பகுதிகளில் இவ்வகை மீன்களை வளர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முன்னதாகக் குறிப்பிட்டுள்ளவாறு பெங்பா வகை மீன்கள் இந்தியாவில் பல இடங்களில் வளரக்கூடிய ரோஹு, கட்லா, ம்ரிகல் மற்றும் காமன் கார்ப் வகை மீன்களின் இயல்பையே தானும் கொண்டிருப்பதால் அவற்றுடன் ஒரே மீன் பண்ணையில் சேர்ந்து வளரும் திறனும் கொண்டதாக இருக்கிறது. எனவே இவ்வகை மீன்களை அந்த மீன்களுடன் இணைத்து ஒரே குளத்தில் வளர்ப்பது என்பது மீன் வளர்ப்பாளர்களுக்கு சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது.