தினமும் கூடையளவு முடி கொட்டுகிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்! உடனே கவனிக்கவும்!

வியாதி வந்த பின்பு அவஸ்தைப்படுவதை விட, வருமுன் காப்பது சாலச் சிறந்தது தானே? 
தினமும் கூடையளவு முடி கொட்டுகிறதா? வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்! உடனே கவனிக்கவும்!
Published on
Updated on
3 min read

உலகமெங்கிலும், பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வரும் ஒரு விஷயம்  என்ன தெரியுமா? வைட்டமின் குறைபாடு பற்றித்தான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே எதோ ஒரு வகையில் வைட்டமின் குறைபாடு உண்டாகத்தான் செய்கிறது. டயட்டிங் செய்கிறேன் என்று சிறுயவர்கள் கூடச் சொல்லும் அளவிற்கு நாட்கள் மாறிவிட்டன. அந்தளவு உணவுக் கட்டுப்பாடு என்பது பரவலாக எல்லோரிடத்திலுமே காணப்படுகிறது. பாலன்ஸ்ட் டயட் என்று கூறிக் கொள்பவர்கள் கூட, வைட்டமின் பற்றாக்குறையைப் பற்றி யோசனை செய்வதில்லை. 

தன்னுடைய உடலில்  எந்த வைட்டமின் குறைபாடு உள்ளது? அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். நம் உடலுக்கு ஏற்ற முறையில், குறைபாடு இல்லாத வகையில், நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். நம் உடலில் ஏற்படும் சில மாறுதல்களை, அலட்சியம் செய்யாமல், கவனித்து, தேவையான போஷாக்கினைக் கொடுத்தால் போதும். வைட்டமின் குறைபாடே உண்டாகாது. இதோ சில டிப்ஸ்

தலைமுடி கொட்டுதல் என்பது இருபாலாருக்குமே தலையாயப் பிரச்சினையாக இருந்து வருகிறது. முடி பிரச்சனைக்காக  மருந்து. மாத்திரையைவிழுங்குகிறார்கள். சிலர் விளம்பரங்களைப் பார்த்து, அதிகப் பணத்தை செலவழித்து, பல கம்பெனி தைலங்களை பாட்டில் பாட்டிலாக வாங்கி வைத்துக் கொண்டு, தடவி வருகிறார்கள். பலன் என்னமோ பூஜ்யம்தான். 

முடி கொட்டுவதற்கு முக்கிய காரணம், வைட்டமின் B7 குறைபாடுதான் (பயோடின்). இந்த இடத்தில் ஆண்களைப் பற்றி கூறியே ஆக வேண்டும். இளம் வயது ஆடவர் நிறைய பேர், உடலை, கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ள ஜிம் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், தினமும் பச்சை முட்டைகள் குடிப்பதை பழக்கத்தில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

பச்சை முட்டையில் அவிடின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது பயோடின்னை ஜீரணிக்க விடாமல் தடுக்கிறது. முடி உறுதியுடன் இருக்க உடலுக்கு,  பயோடின் மிகவும் அவசியமாகிறது. சரி, இந்த பயோடின் வேறு எதிலெல்லாம் இருக்கிறது? 

சோயா, பசலைக்கீரை, வாழைப்பழம், உருளைக்கிழங்கு, காளான் , பாதாம்பருப்பு இவைகளை சாப்பிட்டால், வைட்டமின் B7 சத்து உடலுக்குக் கிடைக்கும். முடி கொட்டுவதும் கட்டுப்படும். 

முகத்தில் சிகப்பு திட்டுக்கள் காணப்பட்டாலும், B7 வைட்டமின் குறைபாடுதான் காரணம். அதற்கும் மேற்கூறிய உணவுப் பொருட்களை உண்ணலாம். 

அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டு, உடலில் உபாதை உண்டாகிறதா? அப்படியென்றால் உடலுக்கு, கால்ஷியம், பொட்டாசியம், மக்னீஷியம் தேவை என்று அர்த்தம். இவை பாதாம் கொட்டை, பாதாம் பருப்பு, வாழைப்பழம்,  இவற்றில் நிறைந்திருக்கிறது. இவற்றை உட்கொண்டாலே தீர்வு காணலாம். 

அடிக்கடி கை, கால், பக்க உறுப்புக்கள் மரத்துப் போகின்றதா? நீங்கள் உட்கொள்ளும் ஆகாரங்களில், வைட்டமின் B6, B9, B12 ஆகியவைகள் போதுமானதாக இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள். இந்தக் குறைபாட்டினை போக்கிக் கொள்ள, புளிப்பான பழங்கள், அவரைக்காய், இவற்றை சாப்பிடலாம். அசைவம் உண்பவர்கள், கோழி இறைச்சி, மீன் இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். 

வாய்ப்பகுதியின் இரு ஓரங்களிலும் அதாவது உதட்டின் ஓரங்களில் வெடிப்புகள் ஏற்படுகிறதா? நிச்சயம் உங்கள் உடலில் இரும்புச் சத்தும், துத்தநாகச் சத்தும் நிறைந்த , B2, B3, B12 வைட்டமின்களின் குறைபாடு இருப்பதாய் அறிந்து கொள்ளுங்கள். இந்த வைட்டமின்களின் சக்தியைக் கூட்டுவதற்கு, அவரைக்காய்,  கொட்டை வகை ( நட்ஸ்) உணவினை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அசைவம் உண்பவர்கள், கோழி இறைச்சி, முட்டை, மீன் இவற்றை சாப்பிடலாம். 

உடலில் முக்கியமாக கால், கைகளில் ஆங்காங்கே அழுத்தமான புடைப்புகள் தோன்றுகிறதா? அப்படியானால் உங்களுக்கு வைட்டமின் A, D, மற்றும் கொழுப்பு அமிலங்களின் குறைபாடு உள்ளதென்று அர்த்தம். அதற்கு காரட் மற்றும் கொட்டை வகைகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும். 

பலருக்கு அடிக்கடி பல்லில் ஏதாவது ஒரு பிரச்சனை வருகின்றது. அப்படியென்றால் உடலில் கால்ஷியம், பாஸ்பரஸ், வைட்டமின் D, குறைபாடு உள்ளது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அந்தக் குறைகளைக் களைய, பிரவுன் ரைஸ், தக்காளி, அவரைக்காய், புளிப்பான பழங்கள் மற்றும் திராட்சைப்பழம் ஆகியவற்றை சாப்பிடலாம். 

உணவே மருந்து என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சீசனுக்கு ஏற்ற உள்ளூர்ப் பதார்த்தங்களை காயாகட்டும், கனியாகட்டும் கிடைக்கும் காலங்களில், சாதத்தைக் குறைத்துக் கொண்டு, வேண்டியளவு உட்கொள்ள வேண்டும். வயிறு நிரம்புதல் முக்கியமில்லை. உடலுக்குத் தேவையான போஷாக்கான உணவினை நாம் உட்கொள்கிறோமா? என்பதுதான் முக்கியம். வியாதி வந்த பின்பு அவஸ்தைப்படுவதை விட, வருமுன் காப்பது சாலச் சிறந்தது தானே? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com