ஒரு கதை கேளுங்க!

ஒரு ஏழைக் குடும்பத்தில் ராமன் என்ற சிறுவன் இருந்தான். சிறுவயதிலேயே தந்தையை இழந்தான்.
ஒரு கதை கேளுங்க!
Published on
Updated on
2 min read

ஒரு ஏழைக் குடும்பத்தில் ராமன் என்ற சிறுவன் இருந்தான். சிறுவயதிலேயே தந்தையை இழந்தான். அவனுடைய தாய் மகனை அழைத்துக் கொண்டு பிறந்த ஊரான தெனாலிக்கு புறப்பட்டார். அங்கு ராமன் தாய் மாமா வீட்டில் வளர்ந்தான். படிப்பு வரவில்லை. ஆனால், நகைச்சுவையாக பேசும் திறமை இருந்தது.

ராமன் விடலைப் பருவத்தை கடந்த பிறகு குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்வது என்ற கவலை எழுந்தது.

ஒரு நாள் தெனாலிக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் தன் நிலையைச் சொல்லி வருந்தினான். இரக்கப்பட்ட துறவி, காளியின் மூல மந்திரத்தை உபதேசித்து, 'இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஜெபித்துவா. காளி உனக்கு பிரசன்னமாகி வேண்டும் வரம் தருவாள்' என்று வழி காட்டினார்.

அதன்படி ராமனும் அந்த ஊரில் இருந்த காளி கோயிலுக்குச் சென்றான். மந்திரத்தை 108 முறை ஜெபித்து விட்டு கண்களைத் திறந்து பார்த்தான். காளியின் தரிசனம் கிடைக்கவில்லை. இருந்தாலும் செய்ததை விடாமல் தொடர்ந்தான்.

இரவாகிவிட்டது. ராமன் கோயிலை விட்டு நகரவில்லை. ஒருவழியாக காளி அவன் எதிரில் தோன்றினாள். 

'உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டாள்.

'தாயே! நான் வறுமையில் வாடுகிறேன். அதைப் போக்குங்கள். படிக்காத எனக்கு நல்லறிவும் தாருங்கள்' என்றான்.

இதைக் கேட்ட காளி கலகலவெனச் சிரித்தாள்.

அடேய்! 'உனக்கு பேராசைதான். கல்வியும் வேண்டும். எல்லாமும் வேண்டுமா?'
என்றாள்.

'ஆமாம், தாயே புகழ் பெற கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும்' என்றான்.

காளி தன் இரண்டு கைகளையும் நீட்டினாள். அதில் இரண்டு பால் கிண்ணங்கள் இருந்தன. அந்தக் கிண்ணங்கள் அவனிடம் தந்தாள் காளி.

'ராமா இதிலுள்ள பால் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டும் இப்போது குடித்துக் கொள்ளலாம். எது தேவை என்பதை நீயே முடிவு செய்து கொள்' என்றாள்.

ராமன், நான் இரண்டையும் தானே கேட்டேன். ஒன்றை மட்டும் குடிக்கச் சொன்னால் எப்படி? எதை எடுப்பது என்று தெரியவில்லையே என்று யோசித்தபடி நின்றான்.

பிறகு சட்டென்று இடது கையிலிருந்த பாலையும் (செல்வம்) வலது கையிலிருந்த பாலையும் (கல்வி) கலந்து வேகமாகக் குடித்துவிட்டான். அது கண்டு காளியே திகைத்துப் போனாள். 

'அடேய்! உன்னை நான் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்'.

'ஆமாம் தாயே! நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்' என்றான்.

'ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?'

'கலக்கக் கூடாது என்று நீங்கள் சொல்லவில்லையே அம்மா!'

அவனது புத்திசாலித்தனத்தால் மகிழ்ந்த காளி! 'பாலகா நான் உக்கிர தேவதை. என்னிடம் வரம்பு மீறினால் அவர்களை அழித்து விடுவேன். என்பதை நீ அறிவாய். ஆனால், கோவக்காரியான என்னையே மடக்கி விட்டாயே! ஏமாற்றினாலும் நீ அறிவில் சிறந்தவன். 'விகடகவி' என்ற பெயருடன் வாழ்வில் சிறந்து விளங்குவாய்' என்று வரம் அளித்து மறைந்தாள்.

இந்த ராமன்தான் பிற்காலத்தில் கிருஷ்ண தேவராயரின் அரண்மனையில் விகடகவி தெனாலி ராமனாக புகழ் பெற்று விளங்கினார். புத்திசாலிகளைத் தேடி கடவுளும் வருகிறார் என்பது புரிகிறதல்லவா
- மயிலை மாதவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com