நம்முடன் பலர் நெருக்கமானவர்களாக இருக்கலாம், நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ளலாம்?

உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்' என்பது சான்றோர் வாக்கு. பெறுதற்கு அரிய செல்வம் நட்புடைமையாகும்
நம்முடன் பலர் நெருக்கமானவர்களாக இருக்கலாம், நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ளலாம்?
Published on
Updated on
3 min read

'உன் நண்பன் யார் என்று சொல் நீ யாரென்று சொல்கிறேன்' என்பது சான்றோர் வாக்கு. பெறுதற்கு அரிய செல்வம் நட்புடைமையாகும். மற்ற உறவுகள் நாம் பிறக்கும் போதே இயற்கையாக உருவாகிவிடும். ஆனால் நாம் வாழும் காலத்தில் நம்மால் உருவாக்க முடிந்த உறவு நண்பர்களே. யாரை வேண்டுமானாலும் நாம் நண்பர்களாக ஆக்கிக் கொள்ளலாம். ஆனால் நல்ல மனிதர்களை நண்பர்களாக்கிக் கொள்வதன் மூலமே நம் வாழ்வை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள முடியும். கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். எனவே நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்முடன் பலர் நெருக்கமானவர்களாக இருக்கலாம். அவர்களில் நாம் யாரை நண்பர்களாக்கிக் கொள்ளலாம்?

நேர்மையானவர்: எந்த ஓர் உறவுக்கும் உண்மையும், நேர்மையுமே அடித்தளம். நேர்மையானவர்களின் நட்பைப் பெற நாம் எப்படியேனும் முயற்சிக்க வேண்டும். நமது நண்பர் நாம் தவறான வழியில் செல்லும் போது நம்மை திருத்தி வழிகாட்டுபவராகவும், நாம் சரியான வழியில் செல்லும் போது நமக்கு பக்கபலமாக தோள் கொடுப்பவராகவும் இருத்தல் வேண்டும். "டேய் உனக்கு பச்சை சட்டை செட் ஆகலடா' என்று சொல்வது முதல் "அந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கல மச்சான்' என்று சொல்வது வரை மனதில் படும் உண்மையை நமக்காக நேர்மையாக எடுத்துக் கூறுபவரையே நமது நண்பராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

எப்போதும் விட்டுக்கொடுக்காதவர்: நம்மை எங்கும் எப்போதும் விட்டுக் கொடுக்காதவர்களின் நட்பை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது. நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள் நமது கருத்துகளுக்கு மதிப்பளிப்பவராகவும், நமது கருத்தறிந்து நடந்து கொள்பவராகவும், நம்முடன் ஒத்த கருத்துடையவராகவும் இருக்க வேண்டும். சிரிப்பு, கவலை, மகிழ்ச்சி, துக்கத்தில் பங்கு கொள்பவராக இருக்க வேண்டும். சமயத்தில் மற்றவர்கள் முன் நாம் சொல்லும் மொக்கை ஜோக்குகளையும் சகித்துக் கொண்டு, "நல்லா காமெடி பண்ற மச்சான்'' என்று நம்மை விட்டுக் கொடுக்காமல் பேசுபவர்களை நாம் நண்பர்களாக்கிக் கொள்வது மிக நல்லது!

இடுக்கண் களைவதாம் நட்பு: ஆபத்தில் உதவுபவனே நல்ல நண்பன். நாம் சந்தோஷத்தில் இருக்கும் போது மட்டுமல்லாமல் நமது கஷ்ட காலங்களிலும் துணை நிற்பவரே உண்மையான நண்பர். நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர்கள், நமக்கு துன்பம் வரும் வேளைகளில் அதை சரிசெய்ய நமக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி, நம்முடன் பக்கபலமாக இருந்து 'தோள் கொடுக்க தோழன் உண்டு' என்ற நம்பிக்கையைத் தர வேண்டும். அதற்காக நண்பன் தேர்வறையில் பதில் தெரியாமல் ஆபத்தில் இருக்கிறான் என்று விடைத்தாளை தூக்கிக்கொடுத்து நட்பை நிலை நாட்ட எண்ணிவிடக் கூடாது.

உரிமையோடு பழகுதல்: சிலர் நம்மிடம் இருந்து அவர்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக்கொள்ள மட்டும் நம்மை பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், நமக்கு தேவையான நேரத்தில் உதவி புரிய முன்வர மாட்டார்கள். அத்தகையோரிடமிருந்து விலகியே இருக்க வேண்டும். ஒருவர் மட்டுமே கொடுப்பதும், அதை மற்றொருவர் பெறுவதும் உதவியே தவிர, நட்பல்ல. கொடுத்து வாங்கும் உரிமை நண்பர்களிடம் மட்டுமே கொள்ள வேண்டும்.

நம்பிக்கையானவர்: நாம் தேர்ந்தெடுக்கும் நண்பர் நமக்கு மிகுந்த நம்பிக்கையானவராக இருக்க வேண்டும். நாம் ஒரு பொறுப்பை நம்பி கொடுக்கும் போதும், ஒரு விஷயத்தை நம்பி சொல்லும் போதும் நமது நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பவரையே நண்பராக்கிக் கொள்ள வேண்டும். நமது செயல்கள் சிலவற்றில் தமக்கு விருப்பமில்லை என்றாலும் நமது உணர்வுகளுக்கு மதிப்பளித்து பழகுபவரை நமது நண்பராக்கிக் கொள்ள வேண்டும்.

கருத்தொற்றுமை: நண்பர்களுக்கிடையே சில நேரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுவதும் இயல்பே. எனினும் மற்றவரின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து, நமது செயல்களை விரும்பி ஏற்றுக் கொண்டு, விட்டு கொடுத்து போவதே நட்புக்கு அழகு. அத்தகைய நபர்களிடம் நட்பு கொண்டால் வாழ்வும் அழகு பெறும்.
 - க. நந்தினி ரவிச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com