இலவசமாக போட்டோ எடுக்கக் கத்துக்கணுமா? இதைப் படியுங்கள் முதலில்

சென்னையில் தனியார் கல்லூரில் ஒன்றில் காட்சித் தொடர்பியல் (விஸ்காம்) துறையில் புகைப்படக் கலையைப் பயிற்றுவிக்கும்
இலவசமாக போட்டோ எடுக்கக் கத்துக்கணுமா? இதைப் படியுங்கள் முதலில்

சென்னையில் தனியார் கல்லூரில் ஒன்றில் காட்சித் தொடர்பியல் (விஸ்காம்) துறையில் புகைப்படக் கலையைப் பயிற்றுவிக்கும் துணை பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் பி.நவீன்குமார்.

சென்னை வடபழனியைச் சேர்ந்த இவர், வசதியற்ற மாணவர்களுக்கு புகைப்படக் கலையை இலவசமாகப் பயிற்றுவித்து வருகிறார். அதற்காக நேர்முகநிலை என்ற பெயரில் கிளப் ஒன்றை நடத்தி வருகிறார்.

வார இறுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து, கிளப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களை அழைத்துக் கொண்டு அந்த இடத்தில் புகைப்படம் எடுத்துவிட்டு திரும்புகிறார்கள்.

இந்தக் கிளப்பில் இப்போதைக்கு வசதியற்ற மாணவர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக எந்த கட்டணத்தையும் நவீன் வசூலிக்கவில்லை. இதனால், விஸ்காம் மாணவர்களும், புகைப்படக் கலையில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பவர்களும் இந்தக் கிளப்பில் இணைந்து தங்கள் திறமையை வளர்த்துக் கொள்கின்றனர்.

இந்த கிளப்பின் செயல்பாடுகள் குறித்தும், தனக்கு புகைப்பட கலை மீது ஏற்பட்ட ஆர்வம் குறித்தும் நவீன் பகிர்ந்துகொண்டவை:

வடபழனியில் பள்ளி வாழ்க்கையை நிறைவு செய்தேன். இளமைக் காலத்திலேயே ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.  அனிமேஷன் படித்துவிட்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஓவியத்தின் மற்றொரு நவீன வடிவமான புகைப்படக் கலை மீது ஆர்வம் பிறந்தது. புகைப்படக் கலைதான் வாழ்க்கை என்பதை அப்போதே முடிவு செய்தேன். கல்லூரியில் விஸ்காம் இளங்கலை பட்டப்படிப்பும், முதுகலையில் எம்ஏ மாஸ் கம்யூனிகேஷனும் முடித்து, விஸ்காம் படிப்பில் புகைப்படக் கலையை பயிற்றுவிக்கும் துணைப் பேராசிரியராக ஆனேன். கல்லூரி நாட்களில் பல புகைப்படப் போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு பெற்றிருக்கிறேன். ஆண்டுக்கும இருமுறை வெளிமாநிலங்களுக்கு பயணித்து அங்குள்ள மக்களையும், அவர்களின் கலாசாரத்தையும் எனது கேமரா கண்களில் பதிவு செய்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது ஸ்டீர்ட் ஃபோட்டோகிராஃபி. அதாவது, தெருக்களிலும், சாலைகளிலும் இறங்கி அங்குள்ள மக்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் புகைப்படத்தின் மூலம் ஆவணமாகப் பதிவு செய்வது.

பல மாணவர்களுக்கு புகைப்படக் கலை மீது ஆர்வம் இருந்தும், அவர்களால் விலை உயர்ந்த கேமராக்களை வாங்கி அந்தக் கலையை கற்றுக் கொள்ள இயலாத சூழலில் உள்ளனர்.

அவர்களுக்காகவே நேர்முகநிலை என்ற கிளப்பை தொடங்கி பயிற்சிப் பட்டறைகளை இலவசமாக நடத்தி வருகிறேன். இந்தக் கிளப்பில் யாரும் உறுப்பினராகலாம். புகைப்படக் கலையில் ஆர்வம் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். புகைப்படம் எடுக்க தெரியவில்லை என்றாலும் நான் அவர்களுக்கு பயிற்றுவிப்பேன். பயிற்சி பட்டறையில் எடுக்கப்படும் புகைப்படங்களை சமூக வலைதலமான முகநூலில் பதிவு செய்வேன். அங்கு அந்தப் புகைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பே அவர்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைத்தது போல் இருக்கும் என்று கருதுகிறேன். புகைப்படத் துறையில் போட்டிகளையும், நடத்தி சான்றிதழ்களை வழங்கலாம் என்று திட்டமிட்டு வருகிறேன். முகநூலில் Nermuganilai என்ற டைப் செய்து எங்கள் குழுவில் இணைந்து பின்தொடரலாம். nermuganilai@gmail.comnermuganilai@yahoo.com  என்ற மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்புகொள்ளலாம் என்றார் நவீன்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com