மருமகள்களை ஜெயித்த மாமியாரின் தந்திரம்! சீனச் சிறுகதை!

முன்னொரு காலத்தில் சீனாவில் மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு மகன்கள்.
மருமகள்களை ஜெயித்த மாமியாரின் தந்திரம்! சீனச் சிறுகதை!

முன்னொரு காலத்தில் சீனாவில் மூதாட்டி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இரண்டு மகன்கள். இருவருக்கும் ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு பெண்களைத் திருமணம் செய்து வைத்தாள், அந்த மூதாட்டி.

இரு மருமகள்களும் அடிக்கடி தாய் வீட்டிற்குச் சென்று வந்தனர். ஒவ்வொரு முறையும் அவர்கள் திரும்பி வர சில நாட்கள் ஆயின. மருமகள்கள் இருவரும் குடும்பப் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று வருந்தினாள் மூதாட்டி. 
ஒருநாள்...

வழக்கம் போல மருமகள்கள் இருவரும் மூதாட்டி முன்பு வந்து நின்று, 'பெற்றோரைப் பார்த்து விட்டு வர உங்கள் அனுமதி வேண்டும்' என்று கேட்டார்கள்.

'மருமகள்களே! உங்கள் வேண்டுகோளை மறுக்க எனக்கு மனம் வரவில்லை. திரும்பும் போது நீங்கள் இருவரும் ஆளுக்கொரு பரிசை எனக்குக் கொண்டு வர வேண்டுமே' என்றாள்.

'தாராளமாக. என்ன பரிசு வேண்டும்?' என்று இருவரும் கேட்டனர்.

'மூத்தவளே! நீ நெருப்பை ஒரு தாளில் சுற்றிக் கொண்டு வர வேண்டும். இளையவளே! நீயோ காற்றை ஒரு தாளில் சுற்றிக்கொண்டு வர வேண்டும்' என்றாள் மூதாட்டி.

ஊருக்குச் சென்று சில நாட்கள் கழிந்தன. இருவருக்கும் கணவன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது. கூடவே, மாமியார் கொண்டு வரச் சொன்ன பரிசுப் பொருட்களின் நினைவும் வந்தது.

'தாளில் எப்படி நெருப்பைக் கொண்டு செல்ல முடியும்? நெருப்பு பட்டாலே தாள் எரிந்து விடுமே? நான் என்ன செய்வேன்?' என்று அழுதாள் மூத்த மருமகள்.

'தாளில் எப்படி காற்றைக் கொண்டு செல்ல முடியும்? நாம் இருவரும் கணவன் வீட்டிற்குச் செல்ல முடியாது போல இருக்கிறதே?' என்று புலம்பினாள் இளையவள். 

அந்த வழியாக பெரியவர் ஒருவர் வந்தார்.

'பெண்களே! ஏன் அழுகிறீர்கள்?' என்று அன்புடன் கேட்டார் பெரியவர்.

'எங்கள் மாமியார் எங்களிடம் இரண்டு பரிசுப் பொருட்களைக் கேட்டார். யாராலும் கொண்டு வர இயலாத பொருள்கள் அவை. என்ன செய்வது என்று தெரியவில்லை' என்றாள் மூத்தவள்.

சிரித்த அவர், 'அழுது புலம்புவதால் எந்தச் சிக்கலும் தீராது. எதுவாக இருந்தாலும் நம் அறிவைப் பயன்படுத்த வேண்டும். என் வீட்டிற்கு வாருங்கள்' என்று அவர்களை அழைத்துச் சென்றார்.

ஒளி ஊடுருவக் கூடிய ஒரு வெள்ளைத் தாளால், பெட்டி வடிவிலான தபாலைச் செய்தார் பெரியவர். அதன் நடுவில் விளக்கை வைத்தார். பிறகு மூத்தவளைப் பார்த்து, 'விளக்கை ஏற்று' என்றார். அவளும் அப்படியே செய்தாள்.

'இதை எடுத்துச் சென்று உன் மாமியாரிடம் கொடு. நீங்கள் கேட்டபடி தாளில் நெருப்பைக் கொண்டு வந்திருக்கிறேன் என்று சொல்' என்றார்.

பின்னர், தாளால் செய்யப்பட்ட விசிறி ஒன்றை இளையவளிடம் கொடுத்தார். 'இதை விசிறு. என்ன வருகிறதென்று சொல்' என்று கேட்டார் பெரியவர். விசிறியதை அனுபவித்த அவள், 'காற்று'' என்று சொன்னாள். 'உன் மாமியாரிடம் காற்று சுற்றிய தாள் தான் என்று இந்த விசிறியைத் தா!' என்றார் அவர். இரண்டு மருமகள்களும் அந்தப் பெரியவருக்கு நன்றி கூறிவிட்டு, அந்தப் பொருள்களுடன் தங்கள் புகுந்த வீட்டிற்குப் புறப்பட்டார்கள்.

இருவரையும் வரவேற்றாள் அந்த மூதாட்டி. இருவரும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை அவளிடம் தந்தார்கள். அவற்றை வாங்கிப் பார்த்த மூதாட்டி, 'நான் கேட்ட பரிசுப் பொருட்களைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அடுத்த முறை தாய் வீடு செல்லும்போது சொல்லுங்கள். இன்னும் இரண்டு பரிசுப் பொருட்களைக் கேட்கிறேன். கொண்டு வாருங்கள்' என்றாள் மூதாட்டி.

'இந்தப் பரிசுப் பொருட்களுக்கே எவ்வளவு துன்பப்பட்டோம்? எப்படியோ ஒரு பெரியவரின் உதவியால் சமாளித்தோம். மீண்டும் பரிசுப் பொருட்களைக் கொண்டு வருவதா?' என்று இருவரும் திகைத்தனர்.

'அம்மா! நாங்கள் இருவரும் இனி எங்கள் தாய் வீட்டிற்குச் செல்வதாக இல்லை' என்று இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

தனது தந்திரம் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ந்தாள் மூதாட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com