முயற்சி, முயற்சி, முயற்சியே வெற்றிக்கு முன்னோடி!

ஒரு மலைப்பாங்கான கிராமம். அந்தி மாலையில் பறவைகள் தங்களுக்குள் அன்றைய நாளில் நடந்ததைப் பேசி முடித்து அமைதியாயின.
முயற்சி, முயற்சி, முயற்சியே வெற்றிக்கு முன்னோடி!

ஒரு மலைப்பாங்கான கிராமம். அந்தி மாலையில் பறவைகள் தங்களுக்குள் அன்றைய நாளில் நடந்ததைப் பேசி முடித்து அமைதியாயின. மலையோரத்து ஒற்றைக் குடிசையில் ஒரு கிழவி அடுப்பினில் களி சமைத்துக் கொண்டிருந்தாள். மீண்டும் தன் உடன்பிறப்புகளிடம் தலைநகரில் தோற்று, காட்டிற்குள் வேடனாக வேடம் தரித்திருந்தார் சந்திரகுப்த மெளரியர். அவருக்குத்  துணையாக அவரது நண்பர் சாணக்கியனும் இருந்தார். இருவரும் பசிக்காக அக்கிழவியிடம் கையேந்தினர். சூடாய்ச் சமைத்ததைச் சுடச்சுட கிழவி பரிமாறினார். தட்டில் போட்டதும், உடனிருந்த பாட்டியின் பேரன், சட்டென்று களியின் நடுவில் கையை வைத்தான். சுட்ட உணவால் 'ஆ' என்றலறி கையை எடுத்தான். 'உனக்கும் சந்திரகுப்த மெüரியனைப்போல எதை முதல்ல செய்யணும்னு தெரியல' என ஆரம்பித்தாள் கிழவி. 'தன்னை அடையாளம் கண்டு கொண்டாளோ கிழவி' என பயந்தார் சந்திரகுப்த மெüரியர். 

'நாட்டைப் பிடிக்க முதல்ல நாட்டோட எல்லை ஓரங்களைப் பிடிச்சு முன்னேறணும். கடைசியல மொத்தப் படையோட தலைநகரைப் பிடிக்கணும். எடுத்தவுடனே தலைநகரத்துல போர் தொடுக்கிறதும், சூடான களிக்கு நடுவுல கையை வைக்கிறதும் முட்டாள்தனமான வேலை' என உணவோடு யுத்த தந்திரம் பரிமாறினார் கிழவி. அக்கிழவியின் பேச்சில் திட்டம் தயாராகியது. ஓரங்களைப் பிடித்து தலைநகரைக் கைப்பற்றினார். சந்திரகுப்த மெüரியர் மகதப் பேரரசின் மாமன்னன் ஆனார். 

எனவே, திட்டங்கள்தாம் இலக்கின் அஸ்திவாரம். அவை தாம், ஓர் இலட்சியக் கட்டடத்தின் மாபெரும் பலம். திட்டங்கள் தெளிவானால் எகிப்தில் மட்டுமல்ல, எட்டையபுரத்திலும் பிரமிடுகள் நிமிரும். ஆக்ராவின் கரையில் மட்டுமல்ல, தாமிரவருணியிலும் தரணி போற்றும் கட்டடங்கள் கதை பேசும். மொத்தத்தில் மனதில் கனவாய் உருவாவதை நனவாக்குவதற்கான முதல் செயல்பாடு திட்டமிடுதல். திட்டமிடுதல் முயற்சியின் முதுகெலும்பு. 

பறவைகளும், விலங்குகளும் கூட தங்களது வாழ்க்கைக்காகத் திட்டமிடுகின்றன. ஆதலால்தான் பொறியியல் படிக்காத தூக்கணாங் குருவி எந்தப் பொறியும் வைக்க முடியாத அளவிற்கு அற்புதமாய்க் கூடு கட்டுகிறது. சைபீரியாவில் இரையை எடுத்துக் கொண்ட பின்பு ஐந்தாயிரம் மைல்கள் கடந்து வேடந்தாங்கலில் இணையைத் தேடிக் கொள்கிறது. 

மேலும், நிறைய திட்டங்களைச் செயல்படுத்த முனையும்போது, தோல்வி அடைவதுண்டு. அது நான்கு காளைகளில், ஒரு காளையை பலம் வாய்ந்த சிங்கமொன்று தாக்க முற்பட்டது போன்றது. அதே சிங்கம், அடுத்த திட்டத்தினை வகுத்தபோது காளைகள் சிதறுண்டன. சிங்கத்தின் திட்டமும் வெற்றிகண்டது என்பது ஒன்றாம் வகுப்பில் படக்கதையில் சொல்லப்பட்ட  செய்தி. 

'எதிரியை முதன்முதலில் நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது எந்தவொரு திட்டமுமே தாக்குப்பிடிப்பதில்லை'  என்று ஒரு பழைய ராணுவப் பழமொழி கூறுகிறது.  இந்திய விடுதலைக்காக, அந்நியர்களை விரட்ட,  மாவீரன் மங்கள் பாண்டேவிலிருந்து மகாத்மா காந்திவரை பல திட்டங்களைத்  தீட்டினர். 'ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், கடைசியில் வெள்ளையனே வெளியேறு' என காலச் சூழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்ட திட்டங்கள் மட்டுமே வெற்றிக்கு வித்திட்டன. 

வெற்றிகரமானவர்கள் எப்பொழுதுமே எழுத்துப்பூர்வமான திட்டங்களுடன்தான் தொடங்குகின்றனர்.  உலக அதிசயங்களில் தொடங்கி, நவீன காலத்தின் மாபெரும் தொழிற்சாலைகள் வரை, மனிதகுலத்தின் மாபெரும் சாதனைகள் அனைத்துமே, தொடக்கத்திலிருந்து இறுதிவரை விலாவாரியாகச் சிந்திக்கப்பட்டு, கவனமாக வடிவமைக்கப்பட்ட, விரிவான திட்டங்களுடன்தான் தொடங்கப்பட்டன.  மனதளவில் மட்டுமே உருவாக்கப்படுகின்ற திட்டங்கள் பல நேரங்களில் கரை காணாத கலன்கள் போலவே காணாமல் போய்விடுவதுண்டு. அதுவே எழுத்து வடிவத்திலிருந்தால் அது என்றாவது ஒருநாள் உயிர்பெற்று விருட்சமாகும்.

உண்மையில், திட்டமிடுவதற்காகச் செலவிடப்படும் ஒவ்வொரு நிமிடமும், செயலில் ஏழு நிமிடங்களைச் சேமித்துக் கொடுக்கின்றது.  இந்தியாவின் மிகப்பெரிய கோயில்களெல்லாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கட்டப்பட்டவை. ஆனால், தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயிலின் சாரம் முதல் இருபத்தைந்து டன் பாரம் கொண்ட விமானம் வரை பணி முடிய  இரண்டு ஆண்டுகள் திட்டம் தீட்டினார் இராஜராஜ சோழன். அதனால் நூறு ஆண்டுகள் கட்டப்படவேண்டிய கோயில், இருபத்தைந்தே ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட பெருமையை உலகிற்கு பறைசாற்றுகிறது. அதனால்தான், 'திட்டமிடத்  தவறுவது என்பது "தோற்பதற்குத் திட்டமிடுவது' என்று அர்த்தமாக கூறப்படுகிறது. 

திட்டம் ஏதுமின்றிச் செயலில் இறங்குவதுதான் அனைத்துத் தோல்விகளுக்கும் காரணம் என்கிறார் நேர நிர்வாக வல்லுநர் அலெக் மெக்கன்சி. திட்டமிடாத வாழ்வு, திக்குத் தெரியாத வாழ்க்கை. அதிலே பயனிலாச் சொற்கள் மிகுந்திருக்கும். செயல்பாடுகள் பிறரின் முகம் சுளிக்க வைக்கும். மொத்தத்தில் வாழ்வில் இறுதி நாட்களை அசைபோடும்போது வாழத் தெரியாமல் வாழ்ந்துவிட்டோமே என்ற வருத்தம் மட்டுமே மிஞ்சியிருக்கும்.

'ஒரு மாபெரும் கப்பலைப்போலவே, ஒரு மாபெரும் வாழ்க்கையும், ஒரே ஒரு நம்பிக்கை அல்லது ஒரே ஒரு கயிறால் ஒருபோதும் தாங்கிப் பிடிக்கப்பட்டிருக்கக்கூடாது' என்ற கூற்றைப் போல பல கோணங்களில் ஆராய்ந்தறிந்து ஓர் இலக்கை அடையவேண்டும். ஒரு தடைதாண்டும் ஓட்டத்தில் ஓடுகின்ற வீரனைப்போல், தன் இலக்கினை அடைவதற்கு முன்னால் இருக்கின்ற ஒவ்வொரு தடைகளையும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாண்டி இலக்கை அடையத் திட்டமிடல் வேண்டும் என்பதை திருவள்ளுவர், 'முடிவும்  இடையூறும் முற்றியாங்கு எய்தும்படுபயனும் பார்த்துச் செயல்' என்ற வரிகள் மூலம்    இறுதி இலக்கை அடைவதற்கு முன்பாக, ஒவ்வொரு நிலையிலும் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை அறிந்து செயல்படவேண்டும் என்கிறார்.

இருப்பினும், ஒரு செயலைத் தொடங்கும்போதே அது தோல்வியில் முடியும் என்பதற்கு காரணம் சொல்லும் ஒரு நண்பன் உடனிருந்தால் வெற்றி உறுதியாகிவிடும். அதன் மூலம்தான், திட்டத்தின் நிறைகளை மட்டும் ஆராயாமல், குறைகளையும் ஆராயும்போது, மொட்டைக் கோபுரமாய் திட்டம் நிற்பது தடுக்கப்படும். 

'திட்டமிடுதல் ஓர் ஒழுங்கு. அது ஒரு பழக்கம். திட்டமிடுதல் ஒரு கலை. மனிதனின் தகுதியை நிர்ணயிக்கும் பண்பு. தனிமனிதன் மூலம் நாடுகள் வரை வளர்த்தெடுக்கப்பட வேண்டிய  திறமை. இது சிலருக்குத் தெரியாமலிருக்கலாம் அல்லது பழக்கமில்லாமலிருக்கலாம். அறியாமை வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் அறிந்து கொள்ள விருப்பமில்லாமை அதைவிடப் பெரிய வெட்கக்கேடானது'' என்கிறார் பெஞ்சமின் ஃபிராங்க்லின். திட்டமிடுதலை பழகிக் கொண்டால் அதுவே திறமையாக உருவெடுக்கும். மன அழுத்தம் குறைவதோடு, மனச்சோர்வும் காணாமல் போகும். சுறுசுறுப்பு ஊற்றெடுக்கும்.

ஒரு  நாளினைத் திட்டமிடுதல் என்பது அந்நாளின் அதிகாலையில் திட்டமிடுதல் அல்ல. முதல் நாளிலேயே திட்டமிடுவது. உறக்கத்திற்கு முன்னே திட்டமிடு. அடுப்படி சமையல் முதல் அகிலம் போற்றும் வெற்றி வரை தெளிவான திட்டமிடுதலே மன அதிருப்தியில்லா வாழ்வு. சரியாகத் திட்டமிடும் நாட்களில், சரியாக வாழ்ந்தால், திட்டமிட்டு வாழ்ந்த ஒவ்வொரு நாளும், திருப்திகரமான ஒரு வாழ்வைத் தரும். திருப்திகரமான வாரங்களின் தொகுப்பு, வெற்றி சொல்லும் மாதமாகும். வெற்றி கொண்ட மாதங்கள், சாதனையான வருடமாகும். சாதனை வருடங்கள், வருங்கால சந்ததிக்கு ஓர் எடுத்துக்காட்டான வாழ்வினைத் தரும். எனவே,  இன்றைய திட்டமே, எதிர் காலத்தில் நம் வரலாறாகும். 

ஓராண்டு நோக்கிருந்தால், 
பூக்களை வளருங்கள்! 
பத்தாண்டு நோக்கிருந்தால், 
மரங்களை வளருங்கள்! 
முடிவில்லா நோக்கிருந்தால், 
மனிதகுலத்தை வளருங்கள்!

என்பது சீனநாட்டுப் பழமொழி. எனவே, திட்டம் தீர்க்கதரிசனமாய் இருப்பதே நல்லது. 

புத்திசாலியும், முட்டாளும் ஒரே விஷயத்தைத்தான் செய்கின்றனர்.  ஆனால், புத்திசாலிகள், முதன்முதலில் செய்வதை முட்டாள்கள் கடைசி வரை அறியாமலே விட்டுவிடுகின்றனர். ஆம், ஒரு நிலச்சுவான்தார் தனக்குக் கீழ் பணிபுரியும் தொழிலாளிக்கு நல்லது செய்ய நினைத்தார். அவரிடம், 'காலையில் நடக்க ஆரம்பிக்க வேண்டும், மாலையில் சூரியன் மறைவதற்குள் அதே இடத்திற்கு வந்துவிடவேண்டும். எவ்வளவு தூரம் நடந்தாயோ, அவ்வளவு நிலமும் உனக்கே சொந்தம்'' என்றார். மறுநாள் கிடைத்தற்கரிய வாய்ப்பை நழுவ விடாமல் பெரிய சொத்தை அடைவதற்காக விரைவாக நடந்தார். பிற்பகல் ஆகியது. களைப்படைந்திருந்தாலும், நடந்து போய்க் கொண்டேயிருந்தார். சூரியன் மறைவதற்குள் தொடங்கிய இடத்திற்குச் செல்லவேண்டுமே என்பதற்காக ஓட்டமும் நடையுமாக வந்தார். சூரியன் மறையும் நேரம் நெருங்கிவிட்டது. 

மூச்சிரைக்க ஓடிவந்தார். முடியவில்லை. கடைசியில் முழுவதுமாய் சோர்வடைந்து, ஆற்றலில்லாமல் தொடங்கிய கோட்டில் "தொப்' பென்று விழுந்தார். அவர் மூச்சு நின்றிருந்தது. அறுபது மைல் தூரம் கடந்தவனுக்கு ஆறடிநிலம் மட்டுமே தேவைப்பட்டது.  

'பணியைத் திட்டமிடுங்கள்;   திட்டமிட்டு பணியாற்றுங்கள்' என்பதுதான் வெற்றியை எளிதில் அடையும் வழி. 

திட்டமிட்டால் திசையெங்கும் வெற்றியே! 

கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com