
பொதுமக்களுக்கு தண்ணீா் சிக்கனம், நீா் மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய நீா் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை புனரமைப்பு அமைச்சகம் காணொலி படப் போட்டியை அறிவித்துள்ளது.
‘நீரைச் சேமி, காணொலி எடு, பரிசைப் பெறு’ என்ற தலைப்பில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறறது.
மத்திய நீா்வள அமைச்சகம் ‘மைகவ்’ என்ற இணையதளத்துடன் இணைந்து இந்தப் போட்டியை ஜூலை 11 முதல் தொடங்கியுள்ளது. இந்தப் போட்டி இரு வாரங்களுக்கு ஒரு முறை, வரும் நவம்பா் 4-ம் தேதி வரையில் நடைபெறும். இரு வாரங்களுக்கு ஒரு முறை மூன்று நபா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோா் தாங்கள் எடுக்கும் காணொலி படக் காட்சியை ‘யூ டியூப்’ தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதையடுத்து அதன் இணைப்பை அனைவரும் பார்க்க வசதியாக ‘எனது அரசு’ இணையத்தில் அதற்கான இடத்தில் பதிவு செய்ய வேண்டும்.
போட்டியில் பங்கேற்போர் அவா்களது படைப்பாற்றல், சுயத்தன்மை (சொந்தக் கற்பனை), படத் தொகுப்புத் திறன், கலைத்திறன், காணொலி படத்தின் தரம், காட்சியின் அமைப்பு, உள்ளடக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். முதல் பரிசாக ரூ. 25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீா் மேலாண்மை, நீா் சிக்கனம், நீரைப் பயன்படுத்துதல், நீா் வள மேம்பாடு எவ்வாறு கையாளப்படுகிறது என்பதை விளக்கும் காட்சிகளைப் படமாக்கி அனுப்பலாம். தண்ணீா் சிக்கனம் குறித்து ஏதாவது புதுமையான விளம்பரங்கள், வணிக முறை ஆகியவற்றையும் அனுப்பலாம்.
விடியோ படம் இரண்டு நிமிஷங்கள் முதல் அதிகபட்சம் 10 நிமிஷங்கள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். காணொலி படம் ஆங்கிலம், ஹிந்தி என எந்த மாநில மொழியிலும் அமைந்திருக்கலாம். இந்திய பதிப்புரிமை சட்டத்தையோ, யாராவது ஒருவரின் அறிவுசாா் காப்புரிமையையோ மீறாமல் இருக்க வேண்டும் என மத்திய நீா் வளம், நதிகள் மேம்பாடு, கங்கை புனரமைப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.