மகத்தான வெற்றியின் ரகசியம் இதுவே இதுமட்டுமே!

கடற்கரை ஓரமாக நின்ற பெரிய மரத்தின் உச்சியில் கடற்குருவி ஒன்று அடைகாத்து வந்தது.
மகத்தான வெற்றியின் ரகசியம் இதுவே இதுமட்டுமே!
Published on
Updated on
1 min read

கடற்கரை ஓரமாக நின்ற பெரிய மரத்தின் உச்சியில் கடற்குருவி ஒன்று அடைகாத்து வந்தது. குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆண்குருவியும், பெண் குருவியும்  ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. 

ஒரு நாள் கடுமையான புயல் வீசியது! அலைகள் பொங்கி எழுந்தன!

கிளையிலிருந்த கூடு காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது! குருவிகள் மனம் பதறிக் கதறின. பெண் குருவி, 'எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும்... இல்லையேல் உயிர் வாழமாட்டேன்!....' என்றது. ஆண் குருவி அதனிடம், 'பயப்படாதே!... முட்டைகள் கூட்டுடன் சேர்ந்துதான் கடலில் விழுந்துள்ளன. எனவே அவை உடைந்திருக்காது!... கடலிலுள்ள தண்ணீரை வற்ற வைத்து விட்டால் முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்!...' என நம்பிக்கை ஊட்டியது! 

'கடலை எப்படி வற்ற வைப்பது?'

'முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம்.... எனவே இடைவிடாமல் சில நாட்கள் முயற்சிக்க வேண்டும்!...நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு தொலைவில் கொட்டுவோம்!.... இப்படியே இடைவிடாமல் செய்தால் கடல் நீர் வற்றி முட்டைகள் வெளிப்படும்!... இவ்வாறு பேசிய குருவிகள் இரவு, பகலாகச் செயலில் இறங்கின.

அப்போது ஒரு முனிவர் வந்தார். குருவிகளின் செயல்களைப் பார்த்தார். ஆச்சரியப்பட்டார். தன் ஞான திருஷ்டியால் விஷயத்தை அறிந்தார். தாய்க்குருவியின் தவிப்பு அவரது உள்ளத்தை நெகிழச் செய்தது. தன் தபோபலத்தால் கடலை சில அடிகள் பின் வாங்க வைத்தார். அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து மகிழ்ந்தன. முட்டைகளை பத்திரமாக வேறிடத்தில் சேர்த்தன. 

'நான் அப்போதே சொன்னேனே.... பார்த்தாயா!.... நமது ஒரு நாள் உழைப்பால் கடல் நீரைக் குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம்!' என்றது ஆண் குருவி பெருமையாக!

முனிவர் சிரித்தபடி நடந்தார். 

குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா?...

இல்லை....முனிவரின் அருளால்!... ஆனால் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ, தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ எதுவுமே தெரியாது!... ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின. குருவிகள் அதைச் செய்யாமல் இருந்திருந்தால்?.... முனிவர் தம் வழியே போயிருப்பார். 

நம்பிக்கையும், உழைப்பும் கடவுளைக் கூட நம்மிடம் கொண்டு வந்துவிடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com