நுகர்வோர் மன்றத்தில் பாட்டா நிறுவனத்துக்கு விழுந்த ‘பாட்டா’ அடி!

முறையிட்டதற்கான பலன். கஸ்டமருக்கு மன உளைச்சலைத் தந்த வகையிலும், பைக்கு எக்ஸ்ட்ரா காசு கேட்ட வகையிலும், தங்களது கஸ்டமர் சேவைத் தரத்தைக் குறைத்துக் கொண்ட வகையிலும் பாட்டா நிறுவனத்துக்கு 9000 ரூபாய்
நுகர்வோர் மன்றத்தில் பாட்டா நிறுவனத்துக்கு விழுந்த ‘பாட்டா’ அடி!
Published on
Updated on
2 min read

சண்டீகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கஸ்டமர் ஒருவர் ‘பாட்டா’ நிறுவனத்தின் மீது ஒரு புகாரைப் பதிவு செய்திருந்தார். சமீபத்தில் பாட்டா கடைக்குச் சென்று அவர் ஷூ ஒன்றைப் பர்சேஸ் செய்திருக்கிறார். ஷூ வாங்கிய பின் பில்லிங் கவுண்ட்டர் சென்ற போது பாட்டா நிறுவனம் பொருட்களைப் பொதிந்து தந்த பைக்கும் சேர்த்து தன்னிடம் காசு வசூலித்து விட்டது. இதெல்லாம் அராஜகம், நான் எதற்கு பைக்கும் சேர்த்து காசு தரவேண்டும், அதிலும் அந்தப் பையில் பாட்டா செருப்புகள் மற்றும் இதர தயாரிப்புகளுக்கான விளம்பரம் வேறு அச்சிடப்பட்டிருந்தது. தங்களது நிறுவனத் தயாரிப்புகளை விளம்பரப் படுத்திக் கொள்ளும் பொருட்டு பாட்டா தயாரித்த பை அது. அதை கஸ்டமர் தலையில் கட்டும் போது அதற்கும் சேர்த்து காசு வாங்கி விட்டார்கள். இதை நாம் சும்மா விட முடியாது, அதனால் தான் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறேன்’ என்றார் அவர்.

முறையிட்டதற்கான பலன். கஸ்டமருக்கு மன உளைச்சலைத் தந்த வகையிலும், பைக்கு எக்ஸ்ட்ரா காசு கேட்ட வகையிலும், தங்களது கஸ்டமர் சேவைத் தரத்தைக் குறைத்துக் கொண்ட வகையிலும் பாட்டா நிறுவனத்துக்கு 9000 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது நுகர்வோர் மன்றம். வெறும் 3 ரூபாய் பை விவகாரம் 9000 ரூபாய் அபராதத்தில் கொண்டு விட்டிருக்கிறது. இதில் தவறு யார் பக்கம்?

பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காக மத்திய அரசும், அனேக மாநில அரசுகளும் அதிகளவில் உபயோகப்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்த முடியாமல் வீணடிக்கப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள் மற்றும் பைகளைத் தடை செய்திருக்கின்றன.

இதன் காரணமாகப் பெரும் வணிக நிறுவனங்கள் தங்களது கஸ்டமர்களுக்கு இலவசமாக அளித்துக் கொண்டிருந்த பிளாஸ்டிக் பை சேவையை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டு அவற்றுக்கு மாற்றாக 20ரூபாய் அல்லது 40 ரூபாய் மதிப்பில் துணிப்பைகளையும், பயோ டிகிரேடபிள் பைகளையும் விற்கத் தொடங்கி விட்டன. எப்படியாவது பிளாஸ்டிக் பைகள் ஒழிந்தால் போதும் என்று நினைத்தவர்களுக்கு இதில் சிரமம் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், ஏகதேசம் கை வீசிக் கொண்டு கடை, கண்ணிகளுக்குச் சென்று பழகியவர்களுக்குத்தான் இப்போது சுள்ளென்று கட்டெறும்பு கடித்தாற் போலாகி விட்டது.

அவர்கள் பிளாஸ்டிக் தடை நிலவும் இக்காலத்திலும் கூட கை வீசிக் கொண்டு தேமேவென்று கடைகளுக்குச் சென்று நிற்கிறார்கள். போதும், போதுமென ஷாப்பிங் செய்து விட்டு பை எடுத்துச் சென்றிருந்தாலும் அதிலும் அடக்க முடியா வண்ணம் தளும்பத் தளும்ப பொருட்களை வாங்கித் தள்ளி விடுகிறார்கள். பிறகு அவற்றை இலவசப் பைகள் கிட்டாவிட்டால் எப்படி எடுத்துச் செல்வது? காசு கொடுத்தாவது பை வாங்கி எடுத்துச் செல்ல வேண்டியது தான். வேறு வழியில்லை. அப்படிப்பட்டவர்களுக்குத் தான் சில கடைகளில் பைகளுக்கும் சேர்த்து காசு வசூலிக்கும் விஷயத்தில் கடும் கோபம் மூள்கிறது.

மேற்கண்ட சண்டீகர் கஸ்டமர் விஷயத்திலும் அதே தான் நடந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. இவரது புகாரின் தன்மையே வேறு. அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், ‘நான் பாட்டா கடைக்குச் சென்று ஷூ வாங்கினேன். 402 ரூபாய் பில் வந்தது. அதற்குள் பேப்பர் பைக்கான 3 ரூபாயும் அடக்கம் என்றார்கள். நானும் சரியென்று பையை வாங்கிக் கொண்டேன். வாங்கிய பிறகு தான் தெரிந்தது, அந்தப் பையில் பாட்டாவின் பிற தயாரிப்புகளுக்கான விளம்பரமாக அந்தப் பை பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்படி என்றால் பாட்டாவுக்கான விளம்பரத் தூதுவரா நான். இவர்களது விளம்பரங்கள் அச்சிட்ட பைகளை நான் ஏன் 3 ரூபாய் விலை கொடுத்து வாங்க வேண்டும். அதை பாட்டா நிறுவனம் எனக்கு இலவசமாகத்தானே வழங்கி இருக்க வேண்டும். அதனால் தான் நான் இந்த விஷயத்தை நுகர்வோர் மன்றம் வரை எடுத்துச் சென்றேன்’. என்கிறார்.

கஸ்டமரின் புகாருக்கு ஆதரவாக கன்ஸ்யூமர் ஃபோரம் அதாவது நுகர்வோர் மன்றம் என்ன சொல்லியிருக்கிறது என்றால்’

பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை என்பது சூழலியலைப் பாதுகாக்க அரசு எடுத்த முடிவு. அதைக் குறை கூற முடியாது. அதே வேளையில் பெரிய வணிக நிறுவனங்களும், கடைகளும் தங்களது கஸ்டமர்களின் செளகர்யத்தைப் பற்றியும் யோசிக்க வேண்டிய நேரமிது. இவர்களின் விளம்பரங்களை கஸ்டமர்களிடம் திணிக்க காசு கேட்பது தவறு. கஸ்டமர்களின் மேல் நிஜமான அக்கறை இருந்தால் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வண்ணம் தயாரிக்கப்படும் பேப்பர் பைகளைத் தயாரித்து அவர்கள் இலவசமாக அளிக்கத்தான் வேண்டும். அதன் அடிப்படையில் மேற்கண்ட புகாரில் பாட்டா நிறுவனம் புகார் எழுப்பிய கஸ்டமருக்கு 9000 ரூபாயை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தினமணி வாசகர்கள் மறவாமல் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com