2. நம்முள் பாடும் பாடலை உலகமே கேட்க முடியும்!

பாட்டு, பாட்டினால் பெறும் பல நன்மைகள் பற்றி சென்ற வாரம் (நாமாக உட்கொள்ள அனுமதியுள்ள மருந்து
2. நம்முள் பாடும் பாடலை உலகமே கேட்க முடியும்!

பாட்டு, பாட்டினால் பெறும் பல நன்மைகள் பற்றி சென்ற வாரம் (நாமாக உட்கொள்ள அனுமதியுள்ள மருந்து: பாட்டு, இசை, சங்கீதம்) என்ற முதல் பகுதியில் பார்த்தோம். இதை மேலும் ஆராய்வோம்.

பாட்டை அனுபவித்தல்

நாம் ஒவ்வொருவரும் பாட்டு, சங்கீதத்தைத் தனித்துவமாக அனுபவிப்பதுண்டு. நம்மில் சிலருக்குப்  பாட்டின் விதம் ஈர்க்கும், சிலருக்கு வாய் பாடல்கள், வேறு சிலருக்கு வாத்தியங்கள். வீணை, வயலின் புத்துணர்ச்சி அளிக்கும், ஸந்தூர், ஃப்ஃளுட், பியானோ சிலரை வருடச் செய்யும். இசையில் ஆழ்ந்து, பறந்து செல்வோம். மனம் லேசாக, அதிலிருந்து கற்பனை வளரலாம், சிந்தனை தெளிவு பெறலாம், மனதை வருடி, ஆட்டி வைத்து, கண்கள் நீர் மல்கச் செய்யும். கேட்கும் ராகம், வரிகள், உணர்வுகள் நம்முடனே இருந்து விடுகிறது.

நம்மை வெளிப்படுத்தும் ஒரு விதம், பாட்டு, இசையும் ஆகும். அதை நாம் கேட்கும் இசை, அதனுள் அடங்கிய கவிதை வரிகள் காட்டிவிடும். எந்த இசையிலும் கருத்து, வாழ்க்கை தத்துவங்கள், கனவு, கோட்பாடுகள் எனப் பல பக்கங்கள் இருக்கின்றன.

வார்த்தைகளினால் இசையா? இசையிலிருந்து வரிகளா என்ற கேள்வி எப்போதும் தோன்றும். இரண்டும் சேர்ந்து இணைவதில் அனுபவங்கள் ஆயிரம் ஆயிரம்!

‘ஹவுஸ் ஃபுல்’ இசை, பாட்டு அரங்கங்கள் எந்த ஒரு இசை, பாட்டு, சங்கீத மேடையிலும் எந்த விதமான கச்சேரியாக இருந்தாலும் நிரம்பி வழிவதுண்டு. மனிதர்களை எது இப்படி ஈர்க்கிறது? குறிப்பிட்ட இசையின் வடிவமே அங்குள்ள மனிதர்களை ஓன்றாக சேர்த்துக் கட்டுகிறதா? அத்துடன் அல்லாமல் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு, நண்பர்கள் ஆகிறார்கள். பாட்டும் இசையும் மனிதர்கள் இணைவதற்கு ஒரு கருவியாகிறது. இப்படி ஒருவருக்கு ஒருவர் ஒன்றில் ஒன்றிணைங்குவதில் அவர்களுக்கு மேலும் உறவுகள் கூடி, மனநலம் பெருகுவதால், அந்த அனுபவிப்பை மீண்டும் மீண்டும் செய்யத் தூண்டுகிறது என பல ஆராய்ச்சிகள் காட்டி இருக்கிறது.

பின் ஒரு தரம் யார் யாரை ஒரு இசை, பாட்டு அரங்கில் சந்திக்கிறோமோ அவர்களை அடுத்த முறையும் சந்திப்பு சாத்தியமே. இப்படி நேர்கையில், பாட்டினால் உறவுகள் மலரும் இடமாகிறது.

பாட்டை மற்றவர்களுடன் அரங்கில் கேட்பது வேறொரு அருமையான நன்மையை அளிக்கிறது. நம் உணர்வுகள் மேம்பாடு அடையச் செய்கிறது. மற்றவருடன் கலந்துரையாட, பழக, அவர்களுடன் பேச, சமரசமாக இருக்க, பொதுக் கூட்டங்களில் பழக என நம்மிடம் பல திறன்களை வளர்க்கவும் மேம்படுத்தவும் உதவும் இடமாகிறது. இப்படி நேர்வதற்குக் காரணிகள்: இசை கேட்பதாலும், பாட்டை அனுபவிப்பதாலும், மற்றவர்களுடன் இணைந்து ரசிப்பதாலும் என்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இசையும் பாட்டும் மருந்தே

இசையும் பாட்டும் எல்லா மனநிலைகளுக்கும் ஒத்துழைப்பு தரக்கூடிய ஒன்றே! குறிப்பாகத் தாலாட்டு மன உளைச்சலுக்கு மருந்து என்பது நன்றாகத் தெரிந்த கருத்தே.

இசை, நம் உடல் நலத்திற்குப் பல நன்மைகளைச் செய்கின்றது. நேரடியான நன்மைகளாகப் படபடப்பைக் குறையச் செய்யக் கூடிய ஆற்றல் உள்ளது. ரத்தக் கொதிப்பைச் சரிசமமாகச் செய்ய, ஊக்குவிக்க, தைரியம் கூட எனப் பல. எப்படி என்றால், இசை கேட்கையில் நம்முள் சுரக்கும் ரசாயனப் பொருட்களைச் சரி செய்கிறது. முக்கியமாக, பாட்டுக் கேட்கும்போது ஆல்ஃபா என்ற நிலையை அடைகிறோம். இந்த நிலையில் சாந்தமாக இருப்போம். அதனால்தான் பாடல்கள் கேட்க, மனம் அமைதி பெறுகிறது; உடல்-மனநலனை நன்றாக்கச் செய்யும் கருவி இசையாகிறது.

இத்துடன் வரிகள், நல்ல முற்போக்கு சிந்தனை உள்ளதாக இருந்து விட்டால் கேட்பவர்கள் சிந்தனை மூலம் அவர்களைச் சிந்திக்க வைக்கும். எவ்வளவு முறை பாடல் வரிகள் நமக்கே ஊக்கம் தர வைத்துச் செயல்பட வைத்து இருக்கிறது என்பதை நினைவு கொண்டாலே புரியும். உதாரணத்திற்கு, சில வருடங்களுக்கு முன் வந்த ஆங்கில பாடல் “வீ ஷெல் ஒவர்கம்..” அதன் ஆழமும், அர்த்தமும் உலகளவில் மொழியாக்கம் செய்யப்பட்டன. நம் நாட்டில் பல மொழிகளில் காணலாம்.

இசையும் பாட்டும் கேட்க மூளை அலைகளைச் சாந்தமாக்க நமக்கு அமைதியான நிலையை அளிக்கச் செய்கிறது. அதுவும் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் வெறும் இசையிலும், பாட்டிலும் மட்டும் நனைந்து இருந்தால் முழுதாக உடல் மனம் லேசாவது உணர முடியும். அதாவது சமைத்துக் கொண்டே கேட்பதோ, வண்டியை ஓட்டிக் கொண்டு கேட்பது, படித்துக் கொண்டே கேட்பது ஒரு விதம். எதுவும் செய்யாமல் கேட்பதில் சுகம் அதிகமாகுமாம், அதற்கு ஏற்றவாறு விளைவுகளும் பன்மடங்கு. இனிமே, எவ்வாறு கேட்பது என்பதைத் தேர்வு செய்வது நம்மிடமே இருக்கிறது. மிகச் சத்தத்துடன் கேட்பதில் பதற்றத்தைத் தரும்..

இசையின் தாக்கம், படிப்பிற்கும்!

பாட்டும் இசையும் அமைதியற்ற குழந்தைகளின் வரப்பிரசாதம். ஆராய்ச்சிகள் தெளிவாக காட்டுவது, காட்டுக் கத்தல் இல்லாமல், அமைதியான பாட்டும் இசையும் படபடப்பை குறைத்துவிடும் என்றும் மற்றவர்களுடன் சுமூகமாக பழகச் செய்யத் தூண்டும்.

இத்துடன் இன்னும் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் விளக்குவது, பாட்டை, இசையை வெவ்வேறு தாளத்துடனும் சுருதியுடனும் சேர்த்து வைத்து கேட்பதில், கற்றல் உயர் தர ரகமாகவும், நன்றாகவும் அமையும். அதனால்தான் ப்ளே க்ருப், நர்ஸரி என ஆரம்ப வகுப்பு அறைகளில், பாட்டுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இசையுடன் ஆடல், பயிற்சி இவைகளின் கலவை உண்டு, கற்றுத் தரும் கருவியாகிறது. இவற்றுடன் ஆட்டம், சேர்வதில் எதைக் கற்றுத் தருகிறோமோ அது பல வருங்களுக்கு ஞாபகத்தில் இருக்கின்றன. படிப்பின் பலவற்றை பாட்டுடன் சொல்லித் தருவதால் கவனம் இருக்கும், ஞாபகத்தில் நின்று விடும். அதனால் தான் ஆக்க்ஷன் கவிதைகள் என்றைக்கும் நமக்கு நினைவில் நிற்கும்.

இதே காரணத்தினால் தான் ஆலயங்களில் தோத்திரம் செய்வதில் பாட்டின் சாயல் இருக்கும். ஆராய்ச்சியாளர்களின் மற்றொரு கண்டுபிடிப்பு, பாட்டு, இசையுடன் மனிதனின் ஸ்பேஷியல் இன்டெலிஜென்ஸ் (Spatial Intelligence) என்றுடன் பின்னி இருப்பதைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்த மாதிரி உள்ளவர்களுக்கு லயம், சுருதி, தாளம் ஒன்றுக்கொன்று எவ்வாறு இணைந்து வருகின்றன என்பதை மனக்கண்ணில் காண முடியும். இந்த ஆற்றல் கணக்கில் வெல்வதற்கு உதவுகிறது. இப்படி பாட்டை, இசையைப் உள்ளலிருந்து புரிந்து ரசிப்பவர்களாக இருப்பவர்கள், கணக்கில் பல வழிமுறைகளைக் கையாளுவது, எது எத்துடன் சேரும் என இணைப்பது, என்றவை புரிய உதவும் என்று குறிப்பாக ஆராய்ச்சி காட்டுகிறது அதே சாயலில் உள்ள ஆர்க்கிடெக்சர், பொறியியல், கணினி, என மற்ற துறைகளையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு ஏற்றவாறு பொறியியல் முடித்த பலர் பாட்டு-இசைத் துறைகளில் வருவதைக் கண்டிருக்கிறோம்.

இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும், ஆட்டிஸம் உள்ளவர்களுக்கும் பாட்டும் இசையும் உதவுகிறது என்று காட்டப்படுகிறது. இதை  ம்யூஸிக் தெரபி (Music Therapy) என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இதில், பாட்டு மூலமாக அவர்களுக்குள் தட்டி எழுப்ப உதவுகிறது. பல நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் மனநல நிலமைக்கு உதவுகிறது. உதாரணத்திற்கு, வயதுடைவோருக்கு வரும் ஆல்ஜைமர், பக்கவாதம், டிமென்ஷியா, பதட்டம், மன அழுத்தம்.  பலமுறை நாமே படித்து, கேள்விப்பட்டுள்ளது, ஒவ்வொரு வேளையில் சில ராகம். ஒவ்வொரு உணர்வைச் சாந்தப்படுத்தப் பல ராகங்கள், அந்த வகையில் கேட்பதே நலனையும் காக்கும்.

சமதளமும் பாட்டும் இசையும்

பாட்டு இசை என்றாலே எல்லோரும் எல்லாமும் சமமாக பார்க்கச் சொல்லும், பார்க்க வைக்கும். பாட்டின் வகைகள் எவ்வளவோ அவ்வளவு அதைப் பற்றி நமக்கு இருக்கும் அபிப்பிராயங்களும். இதிலிருந்து நம்முடைய குறுகிய பார்வையா பரந்த மனப்பான்மை வெளிப்படையாகத் தென்படும். உதாரணத்திற்கு, நீண்ட கூந்தல்-தாடி-மீசைப் பார்த்தால் அவர்கள் ராக் அண்ட ரோல், ஜாஸ் போன்றவை மட்டும் பாடுவார்கள் என எண்ணுவோம். அதே மாதிரி, பாரம்பரிய கர்நாடகம் பாட்டுக் கேட்பவர்கள் மிக அமைதியானவர் என்ற ஒரு கணக்கு. இதை பல சமயங்களில் பாட்டுக்கு ஏற்றவாறு கூட்டம் அமையும் விதங்களில் பார்க்கலாம்.

மனித பேதங்களுக்கு தீர்வு,பாட்டு!!

இந்த குறுகிய விதத்தில் இல்லாமல் இருப்பதும் நம் கையில் உள்ளன. சிறிய வயதிலேயே சாந்தமாக, நன்றாகப் படிக்க-பழகப் பாட்டு கேட்பதைக் கருவியாக்க வேண்டும். வித விதமான பாட்டில் கேட்க வாய்ப்பு வீடுகளில் அமைய வேண்டும்.

பாட்டும் இசையும் மனித பேதங்களுக்கு அப்பால் உள்ளது. ஜாதி மத பேதமின்றி ரசிக்கச் செய்வது பாட்டும், புத்தகமும். நாம் கேள்விப்பட்ட ஒரு தருணம், எம்.எஸ்.சுப்புலட்சுமி யூ.என் கச்சேரி. கேட்ட அனைவரும் வெளிநாடு மனிதர்கள். கேட்டவுடன், எழுந்து கை தட்டியது அவர்கள் பாடிய நம் நாட்டு பாடல்களுக்கு. நாம் பீதோவன், மோஸார்ட், ரூபின் மெஹதா, மைக்கேல் ஜாக்சன் பாடல்களை ரசிப்பது போல்.

பாட்டுக்கும், இசைக்கும் தலை ஆட்டி ரசிப்பது உண்டு, கைவிரல்கள் கால்களும் தாளம் போடும், அப்படியே உருகிப் போய் நம் உடலே முன்னும் பின்னும் ஆடி ரசிப்பதும் உண்டு, கை தட்டித் தாளம் போடுவது, ஆஹா, ஒஹோ, சபாஷ் சொல்வது எல்லாம் எல்லா நாடு ரசிகர்கள் செய்வதே. லாவ் ட்ஜூ என்ற ஒரு பெரியவர் இதை அழகாகச் சொன்னார், “நம்முள் பாடும் பாடலை உலகே கேட்க முடியும்”!

பாட்டும் இசையும் எங்குதான் இல்லை? எதில் தான் இவை இல்லை. எங்கும், எதிலும் நிறைந்த பாட்டையும் இசையும் கேட்போம், எளிதாகப் பெறக்கூடிய நலனைப் பெற்று வாழ்வை வளமாக்குவோம். என்றும் எங்கும் எதிலும் இசையே!

- மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்

malathiswami@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com