வாழ்க்கையைக் கொண்டாடுவது எப்படி? 

உளவியலாளர், பாடகர், பேச்சாளர், சமூக ஆர்வலர், இல்லத்தரசி என பல பரிமாணங்களைக் கொண்டவர் மஞ்சு  ஸ்ரீ.
வாழ்க்கையைக் கொண்டாடுவது எப்படி? 
Published on
Updated on
2 min read

உளவியலாளர், பாடகர், பேச்சாளர், சமூக ஆர்வலர், இல்லத்தரசி என பல பரிமாணங்களைக் கொண்டவர் மஞ்சு  ஸ்ரீ. Lifeolicious எனும் பயிற்சி மையத்தை தொடங்கி, வாழ்க்கையை ரசிக்கவும், கொண்டாடவும் கற்றுத் தருபவர். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி வருபவர்.

இவரால் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து வருபவர்கள் பல பேர். சேலத்தில் வசித்து வரும் அவரை தொடர்பு கொண்டு பேசியதிலிருந்து…

பிறந்து, வளர்ந்தது கோவை. ஊட்டியில் பள்ளிப் படிப்பை முடித்தேன். கோவை அவினாசிலிங்கம் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தேன். திருமணத்துக்கு பிறகு எம்எஸ்சி உளவியல் படித்து முடித்தேன்.

கடந்த 2013-ம் ஆண்டில், குடும்பத்தில் மீண்டு வர இயலாத துன்பத்தை எதிர்கொள்ள நேரிட்டது.  அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பது எனக்குத் தெரியவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்த எனக்கு, வாழ்க்கையில் இலக்கை அடைவதற்கு உதவும் பயிற்சியாளர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. பெங்களூரில் இருந்த அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, எனக்குள் மீண்டும் நம்பிக்கை துளிர்த்தது. நமக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத நபரால், வாழ்க்கை குறித்த புரிதலை நமக்கு ஏற்படுத்த முடியும் என்று புரிந்து கொண்டேன். அந்த சமயத்தில் சேலத்தில்தான் அதிக தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வந்தன. அதைத் தொடர்ந்து, வாழ்க்கை முறை பயிற்சியாளராவது தொடர்பான ஒரு சான்றிதழ் படிப்பை கனடாவில் படித்தேன். ஏற்கெனவே உளவியல் படித்திருந்ததால் அந்தப் பயிற்சி எளிமையாக இருந்தது. பின்னர், பெண்களுடனும், குழந்தைகளுடன் பேச வேண்டும் என்று நினைத்தேன்.

தொடர்ந்து பேசி வருகிறேன். பல பெண்கள் தேடி வந்து வாழ்க்கை முறை மாற்ற பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

குழந்தைகளுக்கான kiddathon சேலத்தில் கடந்த 2014-ல் தொடங்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதில் பங்கேற்கும் குழந்தைகள் அனைவரும் வெற்றியாளர்கள் என்றே அறிவிப்போம்.

1 முதல் 2 கி.மீ. வரை அனைவராலும் ஓட முடியும் என்பதால் 2 கி.மீ. தொலைவு நிர்ணயித்தோம்.

எனது நண்பர்கள் பெரிதும் ஆதரவு அளித்து நிதியுதவியும் செய்தனர். சேலத்தில் தொடர்ந்து kiddathon ஆண்டுதோறும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்று ஓடும் சிறார்களுக்கு சான்றிதழும், பதக்கமும் அளிக்கப்படும். HAPPY WOMEN என்ற பெயரில் குழு பயிற்சியும் நடத்தி வருகிறேன் என்று கூறிய அவரிடம் விடியோ ஆல்பம் வெளியிட்டது குறித்து கேட்டேன்.

'சின்ன வயதிலிருந்தே பாடுவது எனக்கு பிடித்தமான ஒன்று. என்றாவது ஒருநாள் ஆல்பம் வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனது தந்தையும் ஊக்குவித்து கொண்டிருந்தார். எட்டாத தூரம் என்ற பாடலை பாடி ஆல்பம் வெளியிட்டேன். life parachute என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறேன். ஜூலையில் இந்தப் புத்தகம் வெளியாகும்’என்றார் மஞ்சு ஸ்ரீ.

வாழ்க்கையை எப்படி கொண்டாடுவது என்ற கேள்விக்கு, 'வாழ்க்கையில் எந்தவொரு விஷயத்துக்கும் உடைந்து போய் விடக்கூடாது. இன்பமும், துன்பமும் கலந்திருப்பதுதான் வாழ்க்கை. எந்தவொரு சின்ன விஷயத்தையும் பெரிதாகக் கருதாமல் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். உலகம் மிகவும் அழகானது. நமக்கு மட்டும் இப்படியெல்லாம் சோதனை வருகிறது என்று எல்லோரும் எண்ணிவிட்டால், இந்த உலகில் உள்ள அனைவரும் மன அழுத்தத்தில்தான் இருக்க வேண்டும். மழை, வெயில் மாதிரி கஷ்டங்களும் அவ்வப்போது வந்துவிட்டு சென்றுவிடும். உங்களைப் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நீங்களும் அழகான ஒரு படைப்பு என்பதை உணரத் தொடங்கிவிட்டால் வாழ்க்கையில் நிச்சயம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்' என்று நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com