வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது அல்ல!

ஒரு காரியம் எளிமையானதா இல்லை கடுமையானதா என்பது புறத்தோற்றத்திலோ, அணுக எளிமையானது என்பதிலோ நிச்சயமாக இல்லை.
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது அல்ல!
Published on
Updated on
2 min read

வலைதளத்திலிருந்து...

ஒரு காரியம் எளிமையானதா இல்லை கடுமையானதா என்பது புறத்தோற்றத்திலோ, அணுக எளிமையானது என்பதிலோ நிச்சயமாக இல்லை. அதன் எதிர்மறை விளைவுகளிலேயே அதன் தன்மை அடங்கி இருக்கிறது. வேண்டுதல் ஒவ்வொன்றுமே பிசாசினையும் நிரப்பி வைத்திருக்கிறது.

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல' என்று நம்முடைய மூத்த புலவன் ஒருவன் சொல்லியிருக்கிறான். அதனை நீங்கள் இரண்டுவிதமாக வாசிக்கலாம். வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் இறைவன்; அவன் காலடியில் சேர்ந்தார்க்குத் துன்பமில்லை எனவும் வாசிக்கலாம் இது ஒரு சாதாரண வாசிப்பு. வேண்டும், வேண்டாம் என்கிற இரு நிலைகளும் இல்லாமல் அவனடி சேர்ந்தார்க்கு ஒரு துன்பமும் இல்லை என்றும் வாசிக்கலாம். இந்த இரண்டாவது வாசிப்பு மிகவும் கடுமை நிறைந்த தவம்.

பல்வேறு நோய்கள் நாம் வருத்தி வேண்டி பெற்றுக் கொள்ளுவதே ஆகும். ஒருவர் தன்னை மிகவும் சிக்கலானவர் என கற்பனை செய்து கொண்டே இருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள்; சிக்கலானவை சார்ந்த நோய்கள் அனைத்தும் இவரை நோக்கி வேகமெடுத்து வந்து கொண்டிருக்கும். நமக்கு ஓர் உடல் கிடைத்து விட்டது என்று வேகமெடுத்து இவரை நோக்கி விரைவுப் பயணம் மேற்கொள்ளும்.

தன்னிரக்கம் கொண்டு நடப்போரைக் கொல்வதற்கு ஏராளம் வியாதிகள் இருக்கின்றன. சுய நரகத்தை ஸ்தாபிப்பவர்கள் அவர்கள். அதில் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் சுய நரகத்தை ஸ்தாபித்துவிடுகிறார்கள் என்பதுதான். 
 http://lakshmimanivannan.blogspot.com

***

முக நூலிலிருந்து....
* நதி தரும் நெருக்கம்,
கடல் தருவதில்லை.
கிராமத்து ரயிலடியின் அந்நியோன்யத்தை...
பெருநகர நிலையங்களில்
எதிர்பார்க்க முடிவதில்லை.
ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தாலும் 
அது உன் தோட்டம்.
ஆயிரம் மலர்கள் சொரிந்தாலும்...
வனம் தன் தனிமையில்
உன்னைச் சேர்த்துக் கொள்ளாது
டி.கே.கலாப்ரியா

* "பேண்ட் கிழிஞ்சிருக்கு
கவனிக்காமே
பேட்ஸ்மேன்ஆடிக்கிட்டிருக்காரே...'
"தெரிஞ்சுதான் ஆடிக்கிட்டுருக்கார்...
ஜட்டி விளம்பரத்துக்கு
பணம் வாங்கியிருக்காரு!'
பெ. கருணாகரன்

* புரிகிறது; 
எதையும் 
புரிந்து கொள்ளாதது.
ஆரூர் தமிழ்நாடன்

* சொரியும் சருகளை
தனது வேர்களுக்காக
பெற்றுக் கொண்டு...
துளிர் விட ஆயத்தமானது
மரம்
வட்டூர். அ. கு ரமேஷ்

சுட்டுரையிலிருந்து...
* நடிக்கத் தெரிந்தவன் பிழைக்கிறான்... 
- கவிமதி சோலச்சி

* வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் 
முதல் இடத்தைப் பெறுவது 
என்று பொருள் அல்ல...
இன்று வெற்றி பெற்றாய் என்றால்...
உன் செயல்பாடு சென்ற முறையை விட 
இம்முறை சிறப்பாக உள்ளது
என்று மட்டுமே பொருள். 
ராஜலக்ஷ்மி

* நாம் அடிமையாகிற 
விஷயம்
நமக்குப் பயனுள்ளதாக 
இருக்கணும்...
அந்த விஷயத்திலே 
பைத்தியமாக இருந்தா
வெற்றி கிடைக்கும்.
ராஜா

* மனம் என்னும் "விளக்கில்"
நம்பிக்கை என்னும் "எண்ணெய்' இருந்தால்..
வாழ்க்கை என்னும் "தீபம்' 
எரிந்து கொண்டே இருக்கும். 
பாலசுப்ரமணி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com