ஒரு காபியில் என்ன இருக்கிறது? கஃபே காஃபி டே நினைவலைகள்!

ஒரு காபியில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கான பதிவு இல்லை இது. நிச்சயம் ஒரு காபியில் எல்லாம் இருக்கிறது.
ஒரு காபியில் என்ன இருக்கிறது? கஃபே காஃபி டே நினைவலைகள்!

ஒரு காபியில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கான பதிவு இல்லை இது. நிச்சயம் ஒரு காபியில் எல்லாம் இருக்கிறது. முக்கியமாக நினைவுகள். காலை எழுந்ததும் ஒரு கோப்பை முழுவதும் அந்த சுவையான பானத்தை நுரைக்க நுரைக்க நிறைத்து, அதிகாலையை ரசித்தபடி, மொட்டை மாடிப் படிக்கட்டில் அமர்ந்து, அச்சூழலை உள்வாங்கியபடி, அன்றைய செய்தித்தாளையும் படித்து கொண்டே, காபி குடிப்பது என்பது பரமானந்த நிலை என்பதை அனுபவித்தவர்கள் உணர்வார்கள். நானெல்லாம் வீட்டில், ரோட்டோர டீ கடையில், அலுவலக் கேண்டீனில், ஹோட்டலில் என்று எங்கும் காபியை வாங்கிக் குடிப்பவள். அந்த அளவுக்கு காபி மனதுக்கு நெருக்கமானது.

கஃபே காபி டே (Cafe Coffee Day) இந்தப் பெயரை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தில் பணி புரிந்த போதுதான். இயக்குநர் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து படத்தின் ஷூட்டிங் காபி டேவில் நடக்கப் போகிறது என்றதும் பரபரப்பாகிவிட்டேன். இத்தகைய ஹைடெக் காபிக் கடைகள் பணக்காரர்களுக்கு அல்லது பொழுது நிறைய உள்ளவர்களுக்கு அல்லது காதலில் விழுந்த இளைஞர்களுக்கு என்று நினைத்த காலகட்டம் அது. அந்தக் கடைகளில் அதிக கூட்டம் இருக்காது. பி.சி.ஸ்ரீராம் ஒளியமைத்தது போல மெல்லிய வெளிச்சமும் அடர் இருட்டும் இருக்கும். அகலமான சோபாக்கள், பூச்செடிகள் என அழகான உள் அலங்காரங்கள். விசாலமான இடம். இதுதான் ஒவ்வொரு காபி டேயின் அடையாளம். பர்பிள் கலர் லோகோவில் ஒளிரும் காபி டே கடையில் வாயில் எளிதில் நுழையாத ஏதோ பெயர் கொண்ட ஒரு பானம் (அதுதான் காபி - நினைவில் கொள்க காபியை காபி என்றும் அழைக்கலாம்) ஆர்டர் செய்துவிட்டு மணிக்கணக்காக மெல்லிய குரலில் பேசிக் கொண்டே......இருக்கலாம். ஒரு நாள் போகவேண்டும் என்று நினைத்துக் கொள்வேன், ஒருவேளை சொத்தை பில்லுக்கு மாற்றாக எழுதி வாங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தால் அந்தக் கனவுப் பிரதேசத்தை வெளியிலிருந்து பார்த்துவிட்டு நகர்ந்துவிடுவேன்.

இவ்வாறான சமயத்தில்தான் எங்கள் ஷூட்டிங் அங்கே நடக்கப் போகிறது என்றதும் உளம் மகிழ்ந்தேன். அதற்கான கடிதப் பரிவர்த்தனைகளை நான்தான் செய்தேன். அதன் பின் சண்டைக் காட்சிக்காக ஷூட்டிங் நடந்தபோதுதான் முதன் முறையாக அங்கு சென்றேன். அலுவலக தோழமைகளுடன் காபி டேக்கு மட்டுமல்லாமல் இடாலிகா (இடாலியன் பாஸ்தா கடை) என்று புதிய மற்றும் வித்யாசமான கடைகளைத் தேடி ட்ரீட் என்ற பெயரில் போகத் தொடங்கினோம். கும்பலாக செல்வதுடன், அப்படியொன்றும் விலை அதிகமில்லை என்று சமாதானம் செய்து,  தனியாகவும் அதன் பின் போகத் தொடங்கினேன். காபி டேயின் வளர்ச்சி மால்களின் வளர்ச்சியைப் போலவே இருந்தது. திடீரென்று பல இடங்களில் அக்கடையின் பெயர் கண்களுக்கு அகப்படும். ஒரு முறை அசோக் பில்லர் செல்லும் வழியில் ஒரு காபி டேயில் மேல்தளத்தில் அமர்ந்து ஆற அமர காபி ருசித்த அனுபவம் இனி(த்த)து. 

ஒரு முறை தோழியும் எழுத்தாளருமான தமிழ்நதி கனடாவிலிருந்து சென்னை வந்திருந்தாள். கடிதம் மூலமும் வலைத்தளம் மூலமுமாக மட்டுமே வளர்ந்திருந்த எங்கள் நட்பு, முதல்முறையாக நேரில் சந்திக்க விரும்பிய போது எங்கே சந்திக்கலாம் என்று பெரும் திட்டம் தீட்டினோம். வெவ்வேறு இடங்களைப் பற்றி அலசி ஆராய்ந்து கடைசியில் கே.கே.நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகிலுள்ள காபி டேயில் சந்திக்க முடிவு செய்தோம். ஒரு ஆட்டோ பிடித்து நான் அங்கு செல்ல, கதகதப்பான அரவணைப்புடன் என்னை சந்தித்தாள் தோழி. அது ஒரு பனிக் காலம், சூடான அந்த கோப்பி (அவள் அப்படித்தான் காபியை சொல்வாள்) உயிர் வரை இதமளித்தது. அதன் பின் தமிழ்நதி அளித்த பரிசுப் பொருட்களையும் அழகான அந்த தினத்தின் நினைவுகளையும் சுமந்தபடி வீடு சென்றேன். சென்ற வேகத்தில் அச்சந்திப்பைப் பற்றி கவிதையும் எழுதினேன். என்னுடைய முதல் கவிதைத் தொகுதியில் அக்கவிதையை தமிழ்நதிக்கு சமர்ப்பணம் செய்தேன். கருத்து வேறுபாடு காரணமாக கடைசியில் அவளைப் பிரிந்ததும் அபிராமி மால் எனும் இடத்தில் ஒரு காபி கடையில்தான். அதன்பின் வெகு காலம் அவளை சந்திக்கவில்லை. பிரிவும் சந்திப்பும் சில காபி வேளைகளில் நடக்கும் போல. இத்தகைய அபூர்வ வாழ்வின் கருவிகள் தாமே நாமெல்லாம் என்று தத்துவம் பேசி என் மனதை சமாதானம் செய்து கொள்வேன்.

காபி என்றதும் மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் நினைவு எனக்கு வரும். காபியை அவர் அளவுக்கு ரசித்து அருந்தியவர்கள் யாரையும் நான் அதற்கு முன் சந்தித்ததில்லை. அவரது பல கதைகளிலும் காபியின் ருசி பற்றி அனுபவித்து எழுதியிருப்பார். வெகு நாள் கழித்து அவரை சந்திக்க சென்றபோது சரவணபவனில் ஒரு காபி சாப்பிடலாமா என்றுதான் அவர் கேட்டார். பீட்டர்ஸ் ரோடில் உள்ள சரவண பவன் தான் அவரது ஆஸ்தான உணவுக் கடை, காபி கடை. ஒரு வாக்கிங் போல அவரது பீட்டர்ஸ் காலனி வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து கீழிறங்கி, தெருவை கடந்து சரவண பவனில் அவருடன் அந்த குழம்பியை பருகிய தினம் அனேகம். அன்றைய என் மனநிலையில் சாதாரண காபி வேண்டாம் என்கவே, ஒரு ஆட்டோ பிடித்து காபி டேக்கு சென்றோம். காபி மணத்துடன் சிகரெட் வாசனையும் சேர்த்தபடி அவர் தான் ரசித்த பல காபி கடைகளைப் பற்றி சுவாரஸ்யமாக சொல்லி, அடுத்தடுத்த தடவைகள் சந்திக்கும் போது நிச்சயம் அக்கடைகளுக்கு போகலாம் என்றார். அவர் சொன்ன வார்த்தைகளும் அவரது மெல்லிய குரலும் என் நினைவுகளில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது அவர் மட்டும் இல்லை என்பது சுடும் நிஜம்.

கடந்த பத்து ஆண்டுகளில் பத்திரிகை வேலை நிமித்தம் யாரையேனும் சந்திக்க நேரும் தருணங்களில் பரிஸ்டா, ஸ்டார்பக்ஸ் போன்ற காபி கடைகளுக்குச் செல்வேன். காரணம் நாம் பேசிக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் வந்து அடுத்த ஆர்டர் யாரும் கேட்க மாட்டார்கள். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அடுத்து எப்போது நாம் எழுந்து போவோம் என்று யாரும் நம் பின்னால் வந்து நிற்க மாட்டார்கள். ரயில்வேயிலிருந்து காபி கடை வரை தற்போது ப்ரீ வொய் ஃபை சர்வீஸ் அனைவரும் தருவதால் தேவையான காணொளிகளை அப்போது டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு. கஸ்டமர் சர்வீஸ் என்ற ஒரு விஷயத்தை சென்னையில் பிரபலமாக்கியவர்கள் சிலருள் காபி டே நிறுவனமும் ஒன்று என்பது உண்மை. அதாவது கஸ்டமர்களை தொந்திரவு செய்யக் கூடாது என்பதுதான் அவர்களது முதன்மை பாலிஸி. நானும் தோழி சந்திராவும் சில சமயங்களில் கதை பேச மட்டுமல்லாமல் கவிதை வாசிக்கவும் காபி கடைக்குச் செல்வோம்.

கிழக்குக் கடற்கரைச் சாலைகளில் வாகனங்களில் பயணம் செய்யும் போது காபி டே கடையைப் பார்த்தால், அட இங்க ஒரு ப்ரான்ச்சா என்று வியப்பதும், வெளியூர்களுக்குச் செல்லும் போது அதை உள்ளூராக நினைக்க வைக்கும் சில இடங்களில் காபி டேயும் இடம் பெற்றதும், கால மாற்றம் மட்டுமின்றி ஒரு இடத்தின் பழக்கம் என்பதுமாகியது. கடைசியாக எப்போது காபி டேக்கு சென்றேன் என்று யோசித்தபோது நானும் தோழி கார்த்திகாவும் அலுவலக நிமித்தமாக எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்றோம். வேலை முடிந்து கிளம்பிச் செல்லும் சமயத்தில் இருவரும் ஒரே சமயத்தில் ஒரு காபி சாப்பிடலாமா என்று கேட்டு, புன்னகைத்தபடி இஸ்பஹானி செண்டரில் உள்ள காபி டேக்குச் சென்று சமோசாவும் எக்ஸ்பிரஸோவும் பருகினோம். அந்நாளின் நினைவாக ஒரு செல்பியையும் எடுத்துக் கொண்டு விடைபெற்றோம்.

அதன்பின் காபி டே என்ற வார்த்தையை இரண்டு நாட்களாக எல்லா ஊடகங்களிலும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய இனிமையான பொழுதுகள் பலவற்றுக்குக் காரணமாக இருந்தவர் அண்மையில் காணாமலாகி, பின் சடலமாக மீட்கப்பட்ட காபி டே உரிமையாளர் சித்தார்த்தா என்று அறிந்தபோது மனம் வருந்தினேன். ஏனிப்படி என்ற கேள்வி விடாமல் உறுத்திக் கொண்டிருந்தது. வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு நிறுவனம் இப்படி சீட்டுக் கட்டைப் போல சரிந்ததும், அதற்குக் ஆதாரமாக இருந்த நல்லெண்ணம் கொண்ட ஒருவர் தோல்வியடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் காலக் கொடுமை அன்றி வேறென்ன? அவர் நான் தோற்றுவிட்டேன் என்று எழுதியிருந்த கடிதம் அவரது நேர்மைக்குச் சான்றாக இருந்தாலும், அவரது முடிவு ஏற்புடையதல்ல. நிச்சயம் அவரால் புதிதாக யோசித்து நிலமையை சரி செய்திருக்க முடியும். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வாக இருக்க முடியாது என்பதை அறியாதவரா அவர். இதே போல் திரைப்படத் தயாரிப்பாளர் ஜீ.வி. தற்கொலை செய்து கொண்ட போதும், கடன் தொல்லை, மற்றவர்களின் நம்பிக்கையை பொய்த்துப் போக செய்துவிட்ட சுய இரக்கம் உள்ளிட்ட சில காரணங்கள்தான். நல்லவர்கள் சுடுசொற்கள் தாங்காதவர்கள், யாரையும் ஏமாற்றத் துணியாதவர்கள், ஆனால் இவையே இவர்களை சாவின் எல்லை வரை இட்டுச் சென்றுவிட்டது என்பதும் இவர்களின் விஷயத்தில் உண்மையாகிவிட்டது. சித்தார்தாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியபடி இக்கட்டுரையை எழுதுகிறேன். சென்று வாருங்கள் சித்தார்த்தா! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com