உங்கள் குழந்தைகளுக்கு பிரியமான பார்பி பொம்மையின் வயது 60! சுவாரஸ்யமான தகவல்கள்!

உலகப் புகழ் பெற்ற பார்பி பொம்மை அறிமுகப்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது.
உங்கள் குழந்தைகளுக்கு பிரியமான பார்பி பொம்மையின் வயது 60! சுவாரஸ்யமான தகவல்கள்!

அழகான குறும்புன்னகையுடன், நெடிய உருவத்துடன், வடிவான இடையுடன் ஜொலிக்கும் உடையுடன் மெழுகுச் சிலைபோல பளபளப்பான பார்பி பொம்மை அறிமுகப்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது.

பெண் குழந்தைகளின் மனம் கவர்ந்த அந்த பொம்மை உலகப் புகழ்ப்பெற்றது. ஒவ்வொரு நாடுகளுக்கும், காலத்துக்கும் ஏற்ற வகையில் கூந்தல் நிறங்களையும், உடல் அமைப்புகளையும், நிறத்தையும் மாற்றிக் கொண்டு விதம் விதமாக உருவாக்கப்படுகிறாள் பார்பி.

பார்பிக்கு போட்டியாக எல்சா, ஹில்டா, ஹெய்டி உள்ளிட்ட பல பொம்மைகள் இருந்தாலும் பார்பி நிகர் பார்பிதான். பொம்மை சந்தையில் மிகக் கடுமையான போட்டி நிலவி வரும் போதும், பார்பி பொம்மைகள் தொடர்ந்து வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது. சுமார் 150 நாடுகளில் ஆண்டுதோறும் 5.8 கோடி பார்பி பொம்மைகள் விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பார்பி பொம்மைக்கான உலகச் சந்தையிடல் பிரிவு இயக்குநர் நேதன் பேனர்ட் கூறியதாவது: பொதுவாக பொம்மை சந்தையில் 3 முதல் 5 ஆண்டுகள் நிலைத்திருந்தாலே அது சாதனையாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தச் சந்தையில் பார்பி பொம்மைகள் 60 ஆண்டுகளாக புகழ் பெற்று விளங்குவது மிகப் பெரிய சாதனையாகும்.

கோக்கோ கோலா, மெக்னர்டு போல பார்பி பொம்மைகளும் உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்குகின்றன. பார்பி பொம்மையை உருவாக்கிய ரூத் ஹேண்ட்லர், தனது மகள் பார்பராவின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்து அதனை வடிவமைத்தார். 

பார்பராவைப் பொருத்தவரை கனிவுடன் கவனித்துக் கொள்ளும் அன்னையாகவும், ஹேண்டலரின் மகன் விண்வெளி வீரன், விமானி, மருத்துவர் போன்ற பலவாகவும் உருவகப்படுத்தப்பட்டனர். அந்த வகையில் பார்பி பொம்மை பார்பராவின் சிறிதுபடுத்தப்பட்ட வடிவமாகும். பெண் குழந்தைகளுக்கு தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுப்பதற்கான உரிமை இருக்கிறது என்பதை பார்பி பொம்மைகள்தான் கற்றுத் தந்தன. அந்த பொம்மை அறிமுகப்படுத்தப்பட்ட 1959-ஆம் ஆண்டில் இந்தக் கருத்து ஒரு புரட்சியாகவே கருதப்பட்டது.

பார்பி அறிமுகமான முதல் ஆண்டில் மட்டும் 3 லட்சம் பொம்மைகள் விற்பனையாகின. அன்றிலிருந்து இன்றுவரை 10 கோடிக்கும் மேலான பார்பி பொம்மைகள் விற்பனையாகியுள்ளன என்றார் நேதன் பேனர்ட்.

பார்பி உருவாகி 60 ஆண்டுகள் ஆகியும் என்றென்றும் இளமையுடனும் பொலிவுடனும் இருக்கிறவள். குழந்தைகள் நேசிக்கும் ஒரு அழகான உலகத்தில் என்றென்றும் புன்னகை புரியும் அரசி அவள். குழந்தைகள் வளர்ந்துவிட்டாலும் பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுக்கும் போதெல்லாம் அவர்கள் விளையாடிய மரப்பாச்சி பொம்மைகள் அல்லது பார்பி போன்ற நவீன பொம்மைகள் அவர்கள் நினைவில் நீங்காதிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com