யாழ் கொக்குவில் பிரம்படி படுகொலையின் நினைவேந்தல் 25 வருடங்களின் பின்

இலங்கையின் தமிழர் பகுதிகளில் அமைதிப்படையாக களமிறங்கிய இந்திய அமைதிப்படையினர் மேற்கொண்ட தமிழ்மக்கள்
யாழ் கொக்குவில் பிரம்படி படுகொலையின் நினைவேந்தல் 25 வருடங்களின் பின்

இலங்கையின் தமிழர் பகுதிகளில் அமைதிப்படையாக களமிறங்கிய இந்திய அமைதிப்படையினர் மேற்கொண்ட தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் வரிசையில் முதல் சம்பவமாகப் பதிவாகிய யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி கொடூரப் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை(12) முற்பகல் மேற்படி பகுதியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 

கொக்குவில் பிரம்படி படுகொலை ஞாபகார்த்த நினைவேந்தல் குழுவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகளும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நினைவேந்தல் நிகழ்வில் முற்பகல்-09.40 மணியளவில் கொக்குவில் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான நினைவுத் தூபியடியில் ஈகைச் சுடரேற்றி மலர்மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் த. தியாகமூர்த்தி ஆரம்ப நினைவுரையாற்றினார்.

தொடர்ந்து கொக்குவில் சனசமூக  நிலைய முன்றலில் மேற்படி சனசமூக நிலையத்தின் செயலாளர் மு. ஈழத்தமிழ்மணி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுச் சுடரேற்றப்பட்டு, நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படங்களைத் தாங்கிய பதாதைக்குப் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன், யாழ். மாநகரசபையின் பிரதி மேயர் து. ஈசன், நல்லூர் பிரதேச சபையின் உபதவிசாளர் இ. ஜெயகரன்,  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள், ரெலோ அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கண்ணீருடனும் கவலையுடனும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து நல்லூர் பிரதேச சபையின் உபதவிசாளர் இ. ஜெயகரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ். நிஷாந்தன்,நல்லூர் பிரதேச சபையின் உபதவிசாளர் இ. ஜெயகரன் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்தினர். 

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக நீண்ட காலமாக நடாத்தப்படாதிருந்த கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல் நிகழ்வு சுமார்- 25 வருடங்களின் பின்னர் நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் வருடாவருடம் குறித்த நினைவேந்தல் நிகழ்வு தொடர்ச்சியாக நடாத்தப்படுமென கொக்குவில் பிரம்படி படுகொலை ஞாபகார்த்த நினைவேந்தல் குழு தெரிவித்துள்ளது.  

இதேவேளை, கடந்த- 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் நடாத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 50 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபகரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்களும் உள்ளடங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

-தொகுப்பு மற்றும் படங்கள்:- செ. ரவிசாந், யாழ்ப்பாணம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com