நீங்க தீபாவளி கொண்டாட தயாராகிவிட்டீர்களா?

தீபாவளி என்றதும் பெரியவர்கள் ‘இந்தக் காலத்துல எல்லாம் என்ன தீபாவளி, நாங்க கொண்டாடினோமே
தீபாவளி கொண்டாட்டம்
தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி என்றதும் பெரியவர்கள் ‘இந்தக் காலத்துல எல்லாம் என்ன தீபாவளி, நாங்க கொண்டாடினோமே, அதான் அசல் தீபாவளி’ என்று ஆரம்பித்து, அவர்கள் தீபாவளிக்காக எப்படி காத்திருந்தார்கள், பட்டாசுகளை எப்படி வெடித்தார்கள், என்னென்ன இனிப்புகளை சாப்பிட்டார்கள், என்ன உடை உடுத்தினார்கள், உறவினர்களை எப்படி சந்தித்தார்கள் என நீளும் இந்தப் பட்டியலில் நிச்சயம் நிறைய சந்தோஷங்கள் நிறைந்திருந்ததை அவர்கள் கூறும் போதே உணரலாம்.

பெரிசுகளின் இந்த தீபாவளிக் குமுறல் எல்லா அண்டுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்த தீபாவளியில் என்னென்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாம்.

ஆடை, அணிமணிகள்

தீபாவளிக்கு ட்ரெஸ் எடுத்தாச்சா? இந்தக் கேள்வியைத்தான் பலரும் இந்த சீஸனில் நம்மிடம் கேட்பார்கள். எடுத்தாச்சு என்று சொல்பவர்கள் பாக்கியசாலிகள். எங்க டைம் இருக்கு என்று சொல்லும் நம்மில் பெரும்பான்மையினர் செலவுக்கு பயந்துதான் அதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். கடைசியில் எப்படியோ கூட்டத்தில் நீந்தி மனம்கவர் ஆடை அணிமணிகளை வாங்கிக் கொள்வோம். பெண்களைப் பொருத்தவரை சிறுவயதில் கொண்டாடிய தீபாவளி என்றென்றும் மறக்க முடியாது. பெற்றோர் அண்ணன் தம்பி என குடும்பமாக கொண்டாடி மகிழ்ந்த நினைவுகளை ப்ளாஷ்பேக்கில் அடிக்கடி நினைத்துக் கொள்வார்கள். திருமணத்துக்கு பின் ஒருசில ஆண்டுகள் சிறப்பான தீபாவளிதான் என்றாலும், சமையல், ஸ்வீட்ஸ், பர்சேஸ் இது போக ஆபிஸ் என பண்டிகை நாட்களில் கூடுதல் வேலைச் சுமையில் சிக்கித் தவிக்கும் பெண்கள் ஏராளம். ஆனாலும் தங்களுடைய பிரியமானவர்களின் மகிழ்ச்சிக்காக அவர்கள் பம்பரமாக சுழல்வதை குறை கூறமாட்டார்கள். 

சினிமா

தீபாவளிக்கு ரிலீஸாகும் படங்களைப் பார்க்கவென்றே ஒரு திரை ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். முதல் நாள் முதல் காட்சி (fdfs) என்று சமூக வலைத்தளங்களில் ஹாஷ் டேக் போட்டே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு உண்டு. மேலும் தங்கள் மனம் கவர் நாயகன் நடித்த படத்தை நல்ல நாளில் பார்த்து மகிழ்வது என்பது ஒரு வரப்பிரசாதம். இத்தகைய ரசிகர்களை நம்பிதான் தீபாவளி ரிலீஸ் படங்கள் தயாராகிகின்றன. ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் தீபாவளி அன்று வெளியாகிவிட்டால் அவர்கள் ரசிகர்களுக்கு அதுதான் பெஸ்ட் தீபாவளி.

பட்சணங்கள்

ஸ்வீட் எடு கொண்டாடு என கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு உணவு வகிக்கும். அதிலும் இனிப்பு வகைகள் மற்றும் நொறுக்குத் தீனிகளை தீபாவளிக்கு தயாரிப்பது காலகாலமாக இருந்து வரும் பழக்கம். அதிரசம், மைசூர் பாகு, பால்கோவா, சோமாஸி, சுசியம், அல்வா, மாலாடு, மிக்ஸர், தட்டை, தேன்குழல், கை முறுக்கு,, வடை, பாயசத்துடன் சாப்பாடு என அவரவர் குடும்பங்களில் வழக்கமாக செய்யும் பண்டங்கள் தவிர்த்து கடைகளிலும் வாங்கி வைக்கும் ஸ்வீட்கள் தீபாவளிக்கு ஒரு கோட்டிங் சுவையை அதிகரிக்கச் செய்யும். இனிப்புகளை பிடித்தவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் போது கூடுதல் மகிழ்ச்சியைத் தரும்.

வெடி

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் தீபாவளியன்று வெடி வெடிப்பதில் மகிழ்ச்சி அடைவார்கள். தற்போது இரண்டு மணி நேரம் மட்டுமே வெடிக்கலாம் என்று சட்டம் போட்டபின் வேட்டுச் சத்தம் சற்று குறைந்துள்ளது எனலாம். இல்லையென்றால் தீபாவளி அன்று நாள் முழுவதும் வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.

சின்னத்திரை நிகழ்ச்சிகள்

தீபாவளி அன்று பல ஸ்பெஷல் நிகழ்ச்ச்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். விளம்பர இடைவெளிகளை பொறுத்துக் கொண்டு பார்ப்பவர்களுக்கு அது மகிழ்ச்சியான நிகழ்வுதான். அந்த ஆண்டு வெளியான படம் முதல், திரை நட்சத்திரங்களின் நேர்காணல் வரை பல நிகழ்ச்சிகள் அன்றைய தினத்தில் சிறப்பாக இருக்கும். 

சுற்றமும் நட்பும்

தீபாவளி அன்று உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும் பழக்கம் சிலருக்கு உண்டு. திருமணம் ஆன பெண்கள் கணவருடன் தாய் வீட்டுக்குச் செல்வது வழக்கம். சில குடும்பங்களில் அண்ணன் தம்பி, தங்கைகள் கூடிப் பேசி, மகிழ்ச்சியாக இருக்கும் தினமாக தீபாவளி இருக்கும். சிலர் தீபாவளி அன்று ஆதரவற்ற குழந்தைகளுடன் அந்த நாளை கொண்டாடுவார்கள். 

எல்லா நாளும் தீபாவளிதான் என்று சொல்லி தீபாவளியை அலட்சியப்படுத்தும் சிலரும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. புத்தாடை வாங்கித் தந்தால் மகிழ்ச்சி அடையும் காலம் போய், அடிக்கடி புத்தாடை, நினைத்தால் எது வேண்டுமானாலும் கிடைக்கக் கூடிய வாழ்க்கைச் சூழல் என்றிருக்கும் கால மாற்றத்தால் தீபாவளி என்பதில் பெரிய ஸ்பெஷல் எல்லாம் இல்லை. நம்மைப் போல் அலுவலகத்தில் வேலை செய்து வருடந்தோறும் வேலையில் உழன்று கொண்டிருப்போருக்கு ஹை தீபாவளி ஒரு நாள் லீவ் என்ற நிலைதான். அதுவும் இந்த ஆண்டு ஞாயிற்றுகிழமை அன்று வந்துவிட்ட தீபாவளியை சத்தம் போடுவோரும் நம்மில் அநேகம் பேர். அதனால் என்ன திங்கள் அன்று லீவ் எடுக்கலாம் என்று நினைத்து தம் மனதை சமாதானப்படுத்திக் கொள்வோரும் உண்டு.

தீபாவளியைப் பற்றி விமரிசனங்கள் பலருக்கு இருந்தாலும், காலத்துக்கு ஏற்றவகையில் மாறுவதுதானே மனித வாழ்க்கை என்ற அடிப்படை புரிதலுடன் இருந்தால் தீபாவளி மட்டுமல்ல எல்லா தினங்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

எனவே எது எப்படியோ ஆண்டுக்கு ஒரே தரம் வரும் தீபாவளியை சந்தோஷமாகக் கொண்டாடி மகிழலாம். கொண்டாட்டங்கள் என்பது மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தி, மனங்களில் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். மனம் நிறைவு என்பது அற்புதமான தருணம் அல்லவா. அதுவே தீபாவளி. அனைவருக்கும் Happy தீபாவளி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com