Enable Javscript for better performance
deepalvi malar 2019 | இந்த தீபாவளிக்கு வெளிவந்துள்ள புத்தகங்கள்- Dinamani

சுடச்சுட

  

  இந்த தீபாவளிக்கு வெளிவந்துள்ள மலர்கள்

  By DIN  |   Published on : 30th October 2019 03:20 PM  |   அ+அ அ-   |    |  

  deepavali special magazines

  தீபாவளி மலர்

  கல்கி - பக்.240; ரூ.120.

  "ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்குப் பரோபகாரம் செய்து வந்தால் உலகத்தில்  துக்கமே இருக்காது' - ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகளின் அருளுரையுடன் மலர் தொடங்குகிறது. 

  "அனுபவ நாடகம் அல்லது தப்பிலி கப்' -அமரர் கல்கியின்  சிறுகதை,  குதிரைப் பந்தய மோகத்தை விட முடியாத குடும்பஸ்தனின் அவஸ்தையை விவரிக்கிறது.  குடை ஒன்றை அவசரத்துக்காக களவாடிவிட்டு சிங்கப்பூரில் ஓர் இளைஞன் படும் மன உளைச்சல்தான் மாலனின் " களவு'  சிறுகதை.  கே.பாரதி, நாராயணி கண்ணகி,  எஸ்.சங்கரநாராயணன், சீதா ரவி,  எல்.கைலாசம் ஆகியோரின் சிறுகதைகளும் மலரில் இடம்  பெற்றுள்ளன.  ஆண்டாள் பிரியதர்ஷினி,  ரமணன் உள்ளிட்டோர் வாசகர்களுக்குக் கவிதை விருந்து படைத்துள்ளனர். 

  மூத்த அரசியல்வாதி நல்லகண்ணு, எழுத்தாளர் பொன்னீலன் ஆகியோரின் நேர்காணல்கள் கச்சிதம். "இயந்திரத்தின் மனிதமுகம்' என்ற தலைப்பில் போலந்து நாட்டின் வார்ஸாவில் தான் இருந்தபோது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார் இந்திரா பார்த்தசாரதி. 

  தனது தாய்லாந்து பயணத்தை யோகாவின் வண்ணப் படங்களுடன் பதிவு செய்துள்ளார் நல்லி குப்புசாமி செட்டியார். 

  த.கி.நீலகண்டனின் சிறப்புக் கட்டுரை ஓவியர்  வேதாவின் கை வண்ணத்தில் மலருக்கு மகுடமாய் அமைந்துள்ளது.  


  கலைமகள்  - பக்.236; ரூ.150.

  வழக்கம்போல பல்சுவையுடன் கூடிய மலராக மலர்ந்திருக்கிறது. ஸ்ரீவிஜயேந்திரரின் பேட்டி அற்புதம். அவருக்குப் பிடித்த பாரதியார் பாடல், பிடித்த திருக்குறள், அக்குறளுக்கான பல்வேறு சான்றுகளுடன் கூடிய ஆழ்ந்த விளக்கம், செளந்தர்யல ஹரியின் மாண்பு, கோ பூஜையின் சிறப்பு முதலியவற்றை எடுத்துக்கூறி,  அறியாமை இருளில் இருந்து அனைவரையும் அறிவு வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறார்.

  முதுமொழிக் காஞ்சியிலிருந்து தேர்ந்தெடுந்தெடுக்கப்பட்ட முதுமொழிகள் எண்பதும் தத்துவ முத்துக்கள். இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான இரண்டு எது என்பது பற்றிய ம. மாணிக்கத்தின் பதிவை இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும். எந்த ஓவியக் கல்லூரிக்கும் சென்று ஓவியம் பயிலாத "பல்கலை வித்தகரான' ஓவியர் பாபுவின் வரலாற்றுப் பதிவு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. 

  விமலா ரமணியின் "ஒற்றையடிப் பாதை', தேவி பாலாவின் "அம்மா கணக்கு', டி.வி.ராதாகிருஷ்ணனின் "மெüனம்', காந்தலக்ஷ்மி சந்திரமெüலியின் "பாதுகா பட்டாபிஷேகம்', அகிலன் கண்ணனின் "மனசு' முதலிய கதைகள் சிறந்த வாசிப்புக்குஉரியவை. 

  மலரில் இடம்பெற்ற கவிதைகள் அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளன. பழந்தமிழர் கண்ட அறம், இசையும் இலக்கியமும்,  இயற்கையின் அற்புதங்கள்,  சிலப்பதிகாரத்தின் காப்பியக் கட்டமைப்பு,  வசனமழை பொழிந்த கண்ணதாசன், திருக்குறள் அறம் சார்ந்தது, உத்திரமேரூர், இறைவனின் முகநூல், அருணகிரிநாதரின் இராமாயணம், எட்டயபுரத்துக் கவிஞனுக்கு ஏகலைவன், திருமுறைத் தமிழிசையின் தொன்மை முதலிய கட்டுரைகள் ஒரு முறைக்கு இருமுறை படித்துப் பாதுகாக்கத்தக்கவை.

  விகடன்-பக்.400; ரூ.150.

  தீபாவளி பண்டிகை ஆன்மிகத்தோடு தொடர்பு கொண்டது.   "குருவே சரணம்'  என காஞ்சி மகா பெரியவர், ரமணர், ராகவேந்திரர், அன்னமாசார்யா,  வள்ளலார், சாயிபாபா, அரவிந்த அன்னை ஆகிய ஏழு ஞானியர்களைப் பற்றிய செய்திகளும், படங்களும்,  இந்திரா செüந்தர்ராஜனின் காஞ்சி அத்திவரதர் புராணச் சிறுகதையும், தென்காசி விசுவநாதர்,  வெள்ளிங்கிரி உள்ளிட்ட கட்டுரை
  களும் பயனுள்ளவை. 

  நூற்றாண்டு கண்ட ஓவிய மேதைகள் எஸ்.ராஜம், சில்பி மற்றும் நடிகர் எஸ்.வி.ரங்காராவ் ஆகியோருக்கு சிறந்த கெüரவம்  அளிக்கப்பட்டிருக்கிறது.  இருளர் சமூகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண் ரோஜா, மென்பொருள் துறையிலிருந்து பாரம்பரிய  நெசவுத் தொழிலுக்குப் திரும்பிய சிவகுருநாதன் மற்றும் சவாலான பணிகளைச் செய்யும் அரிய மனிதர்கள் மலருக்கு புதுவண்ணம் சேர்க்கிறார்கள்.

  50 ஆண்டுகள் எழுத்துலகில் சாதனை புரிந்த  எழுத்தாளர்கள் ராஜேஷ்குமார் மற்றும் வண்ணநிலவன்,  பாக்கியம் சங்கர்,  இரா.முருகவேள்  ஆகியோரின் பேட்டிகள் எழுத்துலகம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன. 
  பரிசல் கிருஷ்ணா, பிருந்தா சேது, ஜி.ஆர்.சுரேந்தர்நாத், நர்சிம்  சிறுகதைகள், துணுக்குகள், சினிமா  செய்திகள் மலருக்கு சிறப்பு.   


  அமுதசுரபி - பக்.298; ரூ.175.

  "உயர்ந்த ஆன்மிகவாதியின் மனத்தில் பிற மத விரோதம் கடுகளவும் இராது' என்ற ஆசிரியரின் அறிவுரையோடு தீபாவளி இதழ் தொடங்குகிறது. அரசியல்வாதியான மருத்துவர் ராமதாஸ், அமேசான் காடுகள் பற்றியும்  புவி வெப்பமயமாதலுக்கு முழு விளக்கத்தையும் சொல்லி சிந்திக்க வைத்துள்ளார்.  மலரின் பின்பகுதியில் இல.கணேசன்,  நேரம் தவறாமையை ஆன்மிகத்துடன் ஒப்பிட்டு விளக்கமளித்துள்ளார். 

  ஆன்மிக முன்னோடி கிருபானந்த வாரியார் பற்றிய கட்டுரையில் பக்தி மனம் கமழ்கிறது.   அ.பிச்சையின் வாழ்வியல் கட்டுரை அனைவரும் படிக்க வேண்டிய அரிய பொக்கிஷம்.  கா.செல்லப்பனின் "ஆங்கிலப் படைப்பாளிகள்'  மூன்று முத்தான கருத்துகளைப் பதிவு செய்துள்ளது. 

  இந்திரா பார்த்தசாரதி, தில்லி போன சம்பா அரிசியின் கதையைச் சொல்லி தித்திப்பூட்டியுள்ளார். இன்றைய தொழில்நுட்பம் செய்யும் பாடுகள் பற்றி சீதாரவியின் "எனக்கொரு வழி சொல்லுங்களேன்' கதை விவரிக்கிறது. பந்தலு, சி.பா. ஆதித்தனர், டி.கே.சி போன்ற பிரபலங்களை மீண்டும் நமது மனத்திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். மொத்தத்தில் அமுதசுரபி தீபாவளி மலர் புரட்ட புரட்ட பொக்கிஷமாக உள்ளது.  

  ஓம் சக்தி -  பக்.370; ரூ.100.

  ஆன்மிகம், இலக்கியம், வரலாறு என சிறந்த தொகுப்பாக மலர்ந்திருக்கிறது ஓம்சக்தி தீபாவளி மலர். 

  அப்பர் திருநாவுக்கரசரின் வரலாற்றை நிஜ நிகழ்வாக விவரிக்கிறது குடவாயில் பாலசுப்ரமணியனின் "யாதும் சுவடுபடாமல்...' என்னும் கட்டுரை. ஓர் ஆய்வுக் கட்டுரைக்கு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுடன் இதனைப் படைத்துள்ளார்.   
  ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பற்றிய கவியோகி சுத்தானந்த பாரதியாரின் எழுத்தோவியம் பற்றிய பெ.சு.மணியின் கட்டுரை எழுத்தில் வடித்த அஞ்சலியாகும்.   பங்கிம் சந்திரரின் "ஆநந்த மடம்' என்னும் தேசிய புதினம் பற்றிய கட்டுரை,   இந்தியப் பிரிவினை தொடர்பான வரலாற்றை  விவரிக்கும்  டி.எஸ்.தியாகராசனின் "கனவு நனவானது' கட்டுரை,  பாரத பாரம்பரியத்தையும் தேச பக்தியையும் ஊட்டும் கல்வித் திட்டத்தை வலியுறுத்தி டாக்டர் நா.மகாலிங்கம் எழுதியுள்ள கட்டுரை அனைத்தும்   கருத்துச் சுரங்கங்கள்.

  மகாகவி பாரதியின் தோற்றத்தை உருவை நமக்குக் காட்டும் புகைப்படங்கள் வெறும் ஏழு! அதில் கையில் தடியுடன் இருக்கையில் அமர்ந்தபடி உள்ள இரண்டு படங்கள் எப்படி எடுக்கப்பட்டன எனக் கூறும் கிருங்கை சேதுபதியின் கட்டுரை பாரதி அன்பர்களுக்கு இன்ப விருந்து. 

  இன்றைய இலக்கியச் சுவைக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் "வாழ்வின் தேவை' சிறுகதை நல்ல உதாரணமாகத் திகழ்கிறது.  


  கோபுர தரிசனம் - பக்.364; ரூ.150.

  அட்டைப்  படமே மிக அழகு! ராதையும் கண்ணனும் கோ பூஜை செய்யும் அற்புதக் காட்சியை  ஓவியர் ராஜா வண்ணத்தில் குழைத்துத் தந்திருக்கிறார்!  "வந்து சேர்ந்தார் விநாயகக் கடவுள்' என்ற கட்டுரை விநாயகரின் பெருமையையும், அவர் பரஞ்சோதி முனிவரின் பிரார்த்தனையாலும், நரசிம்மவர்ம பல்லவரால் தமிழகத்துக்கு வந்து சேர்ந்த வரலாறும் ரத்தினச் சுருக்கமாகவும், சுவைபடவும் தந்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர், பி. ராஜன். காஞ்சி மஹா ஸ்வாமிகள் பற்றிய கட்டுரை "குரு ஸாக்ஷாத் பரம் பிரஹ்ம' என்ற தலைப்பில் குருவின் சிறப்பை ஸ்வாமிகளே திருவாய் மலர்ந்தருளுகிறார். சுதா சேஷைய்யன் கட்டுரை,  இசைக்கவி ரமணன்,   கவிஞர் வாலி, கவிமாமணி தமிழ் மாறன்,  பா.விஜய் ஆகியோரின் கவிதைகள் படித்துச் சுவைக்கத் திகட்டாதவை. "பகவத் ராமானுஜர் நியமித்த 74 சிம்மாசனாதிபதிகள் வைபவம்' என்ற கட்டுரையில் வைணவப் பெரியார்களின் வைபவங்களை ரத்தினச் சுருக்கமாய், சுவையோடு தந்திருக்கிறார் திருமால் அடியார் எம்.என்.ஸ்ரீநிவாசன். கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவின் சுருக்கமான சரித்திரமும் இடம் பெற்றிருக்கிறது! ஓவியர் மணியம் செல்வன், வேதா, ஸ்யாம் போன்றோரின் அழகிய ஓவியங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.   ஏராளமான தகவல்கள் அடங்கிய பொக்கிஷமாக இருக்கிறது இந்த "கோபுர தரிசனம்' தீபாவளி மலர். 

  விஜயபாரதம்

  (இரண்டு புத்தகங்கள்) - பக்.376;  ரூ. 150.

  விஜயபாரதம் தீபாவளி மலரின்  இரண்டு புத்தகங்களும் தேர்ந்த உள்ளடக்கங்களுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. 

  முதல் மலரில், திருப்புகழ் மதிவண்ணன், குடவாயில் பாலசுப்பிரமணியன், கே.ஆர்.நரசய்யா, ராஜேஷ்குமார் உள்ளிட்டோரின் கட்டுரைகள், கடம் இசைக் கலைஞர் விநாயக்ராமின் நேர்காணல், படுதலம் சுகுமாறன், தேவிபாலா, விமலாரமணி, வாதூலன், கெüதம நீலாம்பரன், பட்டுக்கோட்டை பிரபாகர் உள்ளிட்டோரின் சிறுகதைகள், அழகுதாசன் உள்ளிட்டோரின் கவிதைகள் என 45 படைப்புகள் இடம்பெற்றுள்ளன. 

  மூத்த பத்திரிகையாளர் சுப்பு தயாரித்துள்ள இரண்டாவது மலரில், தேசத்தை வலுப்படுத்தும் தமிழர் வாழ்வியல், பண்பாட்டு அடையாளங்கள் குறித்த பிரபல எழுத்தாளர்களின் கட்டுரைகள் அழகுறத் தொகுக்கப்பட்டுள்ளன. ஆர்பிவிஎஸ்.மணியனின் "புறநானூற்றில் தேசிய சிந்தனை', இசைக்கவி ரமணனின் "எனது பாரதி', வவேசுவின் "இசையால் இணையும் இந்தியா', சுதாங்கனின் "தமிழ் சினிமாவும் தேசியமும்', இந்திரா செüந்தர்ராஜனின் "மதுரை' உள்பட 31 கட்டுரைகள் இம்மலரில் மணம் வீசுகின்றன. 

  தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த தீபாவளி மலரை வழங்கியுள்ளனர். பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.


  ஸ்ரீ சாயி மார்க்கம் - பக்.104; ரூ. 100.

  "காஞ்சி மஹாசுவாமிகளின் புனிதப் பாதுகை'  தொடக்கக் கட்டுரையோடு  ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி இதழ் தொடங்குகிறது. அனுமனே சாயிபாபாவாக அவதரித்தார் என்பதாக, சாயிபாபாவின் அவதார ரகசியத்தைச் சொல் கிறது ஒரு கட்டுரை. 

  சாயிபாபாவை வணங்கும் வழிகளை ஆச்சார்யா பரத்வாஜ் சுவாமிகள் சொல்ல, குருவே சரணம் என்கிறார் வசந்தா ரங்கபாஷ்யம். எஸ். லெக்ஷ்மிநரசிம்மனின் "பாபாவின் கோதுமை ரகசியம்' கட்டுரை,  அந்த ஊரில் அப்போது பரவிய காலரா தொற்றுநோயை விரட்ட பாபா கோதுமை மாவை  ஊரின் எல்லையில் நாலாபுறங்களிலும் கொட்டுவதைச் சொல்கிறது.

  வடநாட்டு எம்.எஸ். சுப்புலக்ஷ்மி பத்மபூஷன் ஹிராபாய் பற்றிய கட்டுரை, "கீதை எனும் பரம வேதம்', "ஆனந்தமே சாயி', சுவாமி சின்மயானந்தா அளித்திருக்கும் "பிரார்த்தனையின் பலன்கள்' மற்றும் "பாபாவின் உத்தரவும் அற்புதமும்', "நிலையற்ற வாழ்க்கையும் நிலையான சாந்தமும்', "மாயமாய் வந்த பாபா', ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் "பெண்களிடம் கடவுள் அருள்'  உள்ளிட்ட  பல அருள் கூட்டும் அற்புத கட்டுரைகள்!    பக்கத்திற்குப் பக்கம் ஆன்மிக அருளுரைகளால் மணம் கமழ்கிறது. இது ஓர் ஆன்மிக அறிவுக் களஞ்சியம்! 


  அம்மன் தரிசனம் -  பக்.246; ரூ.150. 

  தக்ஷிணாம்னாய ச்ருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு சங்கராசார்யாள் அருளாசியுடன் நம்மை தீபாவளி மலரின் பக்கங்கள் வரவேற்கின்றன. 

  மகாகவி காளிதாஸன் காளிதேவியின் அருள்பெற்றவனாக இருப்பினும் அவன் மிக உயர்ந்த சிவ பக்தன் என்பது குறித்து கட்டுரை,   சுகி. சிவத்தின் "மோட்சத்தின் திறவுகோல்' கட்டுரை,  இலங்கை ஜெயராஜ் எழுதிய "கணவனைப் பிரிந்த காரிகையர்' தலைப்பிலான கட்டுரை ஆகியவை அருமை. 
  ராமலிங்க வள்ளல் வரலாறு, "நமாமி கங்கே' என்ற தலைப்பில் கங்கை நதி பற்றி வேதங்களும், மகான்களும் அளித்துள்ள அழகிய வர்ணனைகள், சுந்தரமூர்த்தி நாயனாரின் திருத்தொண்டத் தொகையின் வரலாறு,  உ.வே.சா.வின் தமிழ்த் தொண்டு என பல்வேறு அம்சங்களை மலர் தாங்கி நிற்கிறது.

  சீடனுக்கு வேண்டிய தகுதிகள், ஹரிகேசநல்லூர் காயகசிகாமணி குறித்த தகவல்கள், ஆத்ம தரிசனமே பிறவிப்பயன், திருப்புகழ்ப் பாடல்களின் இசையமைதி, சங்ககாலத்தில் முருக வழிபாடு நடந்தமைக்கான வரலாற்று சான்றுகள் அடங்கிய கட்டுரை என 36 கட்டுரைகளும், 3 கவிதைகளும் அடங்கிய அழகிய தொகுப்பாக அம்மன் தரிசனம் தீபாவளி மலர் அருள்மணம் வீசுகிறது. அனைவரும் படித்து, பத்திரப்படுத்தி வைக்க வேண்டிய மலர். 


  லேடீஸ் ஸ்பெஷல் - பக். 256; ரூ.180.

  லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் சிறுகதை சிறப்பு இதழோ என எண்ணும் அளவிற்கு 24 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அத்தனையும் முத்தானவை. குறிப்பாக டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன், கிரிஜா ராகவன், காந்தலட்சுமி சந்திரமௌலி, பத்மினி பட்டாபிராமன், அழகிய சிங்கர், சுப்ர பாலன், திருப்பூர் கிருஷ்ணன், சாந்தா தத், லஷ்மி சுப்ரமணியம் எழுதிய கதைகள் நிகழ்கால சமூகத்தின் கண்ணாடி என்று சொல்லலாம். தெலுங்கு எழுத்தாளர் "ஓல்காவின் மூக்குத்தி' என்ற சிறுகதையை கௌரி கிருபானந்தம் அவர்களின் மொழியாக்கத்தில் தமிழில் வெளியிட்டதும் கூடுதல் சிறப்பு. 

  இந்த இதழ் நீர் மேலாண்மையை விளக்கும் கட்டுரைகள் நிறைந்ததாகவும் மலர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வசுமதி எழுதிய "நீரின் வடிவங்கள்', காந்தமணி நாராயணன் எழுதிய "நீரின் ஆதாரம்' மற்றும்  சி.வி.கீதா,  சி.ஆர்.மஞ்சுளா ஆகியோர் எழுதிய கட்டுரைகள் நுண்ணிய தகவல்களை உள்ளடக்கி பயனுள்ளதாக இருக்கின்றன.  குரு மனோகரவேல் எழுதியுள்ள "அகத்தியர் தந்த நதிகளும் நூல்களும்', நித்தியாவின் "முக்தி அளிக்கும் நீர்த்தலம்', ஆலப்புழை உமா ஹரிஹரன் எழுதிய ஆன்மிகக்  கட்டுரைகளும் பிரமிப்பை ஏற்படுத்தி பல புதிய தகவல்களுடன் அறிவுக்கு விருந்தளிக்கின்றன.

  டிஜிட்டல் -  பக். 480; ரூ.699.

  மூத்த எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய "மண் குதிரைகள்', ஜி.ஏ.பிரபா எழுதிய "தேடி வரும் என் மனமே', சுப்ரஜா எழுதிய "தொட்ட இடமெல்லாம்' ஆகிய மூன்று நாவல்கள் இடம்பெற்றுள்ளது இம்மலரின் சிறப்பம்சம். சுபஸ்ரீ ஸ்ரீராம் எழுதிய "துபாயில் ஒரு கைலாயம்', நாடோடி எழுதிய "நகைச்சுவைச் சித்தர் வடிவேலு', "இசைக் காளமேகம்' என்ற தலைப்பில் இளையராஜா குறித்து கமல்ஹாசன் எழுதியது ஆகிய கட்டுரைகளில் சுவாரஸ்யம் நிறைந்துள்ளது. "சினிமாவுக்கு விநியோகஸ்தர்கள் தேவையே இல்லை' என்கிற "புளூவேல்' திரைப்படத் தயாரிப்பாளரின் பேட்டி சிந்திக்க வைக்கிறது. உஷா சுப்ரமணியம் எழுதிய "விண்ணை முட்டும் வெற்றிச் சரிதம்' கட்டுரையில் அவர் கடந்து வந்த பாதையில் சந்தித்த பல்வேறு அனுபவங்களை அறிய முடிகிறது. பாரதிராஜாவைப் பற்றி ராஜா சந்திரசேகர் எழுதிய "நகரும் காட்சிகள்' கட்டுரை,   "பாலகுமாரன் இல்லாத வீடு' கட்டுரை மற்றும் அழகுக் குறிப்புகள், மருத்துவம், சமையல், நகைச்சுவைத் துணுக்கள் ஏராளம்.   பல்சுவை நிறைந்த மலராக விளங்குகிறது. 


  பேசும் புதிய சக்தி - பக்.156; ரூ.250.

  வழக்கமான தீபாவளி மலர்களிலிருந்து மிகவும் வேறுபட்ட மலர் இது. இலக்கியத் தரம் மிக்க சிறுகதைகள், கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. ரவி சுப்பிரமணியன்,  நா.வே.அருள்,  சமயவேல் உள்ளிட்ட  பலரின் கவிதைகள் தரும்  உணர்வுகள் அற்புதம். 

  சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்துவரும் இந்நாளில் நையாண்டி தொனியுடன் அவற்றைச் சுவையாக  விவரிக்கும் நாஞ்சில் நாடனின் "மற்றை நம் பாவங்கள் பாற்று' என்ற கட்டுரை, நகைச்சுவை நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனைப் பற்றிய  உஷா தீபனின் கட்டுரை,   இஸ்மது ஜுக்தாயி என்ற உருது எழுத்தாளரைப் பற்றிய கட்டுரை, தமிழர் பண்பாட்டில் சடங்கு நிலையில் அம்மி இப்போதும் பயன்படுகிறது என்பதைச் சொல்லும் பே.சக்திவேலின் "தமிழர் புழங்கு பொருள் பண்பாட்டில் அம்மியும் குழவியும்' கட்டுரை என   இதில் இடம்பெற்றுள்ள  கட்டுரைகள் காட்டும் உலகங்கள் வேறு வேறானவையாக இருக்கின்றன.  

  சு.வேணுகோபாலின் "பூமாரியின் இன்றைய பொழுது' குறுநாவல், சாதாரண மனிதர்களின் அவல வாழ்க்கையைச் சித்திரிக்கிறது. யுவன் சந்திரசேகர், சி.எம்.முத்து, கலைச்செல்வி, ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன், ஆத்மார்த்தி உள்ளிட்டவர்கள் எழுதிய சிறுகதைகள்,  அபிலாஷ் எழுதிய "முதலை பயம் ' மலையாளச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு என வித்தியாசமான முகங்களுடன் சிறப்பாக வெளிவந்திருக்கிறது.

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp