எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பார்வையில் 2019-ஆம் ஆண்டின் சிறந்த புத்தகங்கள்!

பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் விகடனில் தொடராக வந்த போது வாசித்தேன்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பார்வையில் 2019-ஆம் ஆண்டின் சிறந்த புத்தகங்கள்!

1.நான்காம் சுவர் (பாக்கியம் சங்கர்)

பாக்கியம் சங்கரின் நான்காம் சுவர் விகடனில் தொடராக வந்த போது வாசித்தேன். பாக்கியம் சங்கரின் எழுத்து தனித்துவமானது. அவர் காட்டும் வட சென்னை உலகமும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களும் அசலானவை. காட்சிப்பூர்வமாக நிகழ்வுகளை விவரித்துச் செல்லும் பாக்கியம் சங்கர் துயரத்தின் சாறு தெறிக்கும் அனுபவங்களை விவரிக்கிறார். பிணவறைக் காப்பாளரின் உலகமும் அநாதைப் பிணங்களின் புறக்கணிக்கபட்ட நிலையும்,  காப்பாளரின் மனத்தவிப்பும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளன.

ஜம்பு என்ற `கவர்ச்சி வில்லன்’ கட்டுரையில் கலைஞர்களுக்கான நியாயத்தை, காலம் தரவே மாட்டேன் என்கிறது  எனச் சொல்கிறார் பாக்கியம் சங்கர். அது அறியப்படாத திறமைசாலிகளின் ஒட்டு மொத்தக் குரல் என்றே சொல்வேன் .

கண்பார்வை அற்ற தெருப் பாடகர்கள், துப்புரவுப் பணியாளர்கள், பாடிமேன், குடிக்கு அடிமையானவர்கள். நாடோடிகள், திரைத்துறை கலைஞர்கள், பிச்சைக்காரர்கள்  என்று பாக்கியம் சங்கர் காட்டும் மனிதர்கள் தங்கள் வேதனைக்களைத் தாண்டி பரிசுத்தமான அன்போடு வாழ முற்படுகிறார்கள்.

நான் வடசென்னைக்காரன் என்ற நூலின் வழியே சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட பாக்கியம் சங்கர் இந்த நூலின் வழியே நம்மைச் சுற்றிய எளிய மனிதர்களின் உலகை அன்போடும் அக்கறையோடும் நேர்மையாக எழுதியிருக்கிறார் .

வாழ்த்துகள் பாக்கியம் சங்கர்

2.அக்காளின் எலும்புகள் (வெய்யில்)

வெயிலின் கவிதைகள் நவீனத் தமிழ் கவிதையுலகின் புதுக்குரல் என்றே சொல்வேன்.

ஜென் கவிதைகளில் வெளிப்படும் ஓங்கி ஒலிக்காத குரலைக் கொண்டு சமகாலப் பிரச்சனைகளை எழுதுகிறார் வெய்யில். அது முற்றிலும் புதிய வெளிப்பாட்டு முறை.

கோபமும் ஆத்திரமும் இயலாமையும் வேதனையின் பெருமூச்சும் கொண்ட இக்கவிதைகள் தண்ணீரில் பிம்பமாகத் தெரியும் பெருமலையைப் போல எளிதாகத் தோற்றம் தருகின்றன.

சுயம்புலிங்கமும் ஆத்மாநாமும் ஒன்று சேர்ந்தது போன்ற கவிதைகளை வெய்யில் எழுதுகிறார். வெளிப்பாட்டு முறையில் சுயம்புலிங்கத்தையும் கருப்பொருளில் ஆத்மாநாமையும் அவர் பிரதிபலிக்கிறார் என்றே தோன்றுகிறது.

தனது அன்றாட உலகிற்குள் கரைந்துவிட மறுக்கும் ஒருவனின் போராட்டங்கள் அவன் நினைவுகளின் வழியே மீள் உருவாக்கம் கொள்கின்றன. எதிலும் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியாத தனிமையும் தவிப்பும் கொண்டவனின் குரலில் தான் இக்கவிதைகள் வெளிப்படுகின்றன.

குரூரம் அவரது கவிதைகளில் புதிய வெளிப்பாடு கொள்கிறது. காமத்தின் அலைக்கழிப்பு  கவிதைகளில் தீவிரமாக வெளிப்படுகிறது. அவர் உடலினை புனிதப்படுத்தவில்லை., மாறாக உடலென்பது காமத்தின் வானகம் என்றே அடையாளப்படுத்துகிறார்.

இந்த ஆண்டிற்கான ஆத்மாநாம் விருது பெற்ற வெய்யிலுக்கு என் வாழ்த்துகள்.

வெய்யிலின் அக்காளின் எலும்புகள் வாசிக்கவும் கொண்டாடவும் வேண்டிய கவிதைகளைக் கொண்டிருக்கின்றன.

3.என்றும் காந்தி (ஆசை)

இந்து தமிழ் நாளிதழில் ஆசை எழுதி வந்த காந்தி பற்றிய தொடர் கட்டுரைகள்  ‘என்றும் காந்தி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியுள்ளது.

அரிய புகைப்படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் காந்திய நூல் வரிசையில் முக்கியமானது.

ஆசை காந்தியை ஆழ்ந்து வாசித்திருக்கிறார். காந்தி குறித்து மிகச்சிறப்பான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பத்திரிக்கையாளரின் துல்லியமும் எழுத்தாளரின் கவித்துவமும் ஒன்று சேர்ந்த இக்கட்டுரைகள்  இன்றைய தலைமுறைக்கு காந்தியை மிகச்சரியாக அடையாளப்படுத்துகின்றன.

“காந்தியின் அகிம்சை, சத்தியாகிரகம், சத்தியம், நேர்மை, அன்பு இவை எதையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டவை. ஒருவர் முதலில் தனக்கு நேர்மையாக இருக்க வேண்டும். பிறகு, அடுத்தவர்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இதுதான் நேர்மையைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படும் இலக்கணம். காந்தி இதையெல்லாம் தாண்டி, எதிராளியிடமும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருப்பவர்.

நேர்மையாக இருப்பதற்குக் காந்தியிடம் எந்தவித ஜாக்கிரதையுணர்வும் கிடையாது. நேர்மை என்பது அவரது அடிப்படை இயல்பு. மேலும், பிறரின் நன்மதிப்பைப் பெறுவதற்காகவும் அவர் நேர்மையைக் கடைப்பிடிக்கவில்லை. தான் தவறிழைத்துவிட்டதாகக் கருதினாலோ, பிறர் தவறாகக் கருதும் விஷயங்களைச் செய்தாலோ அவற்றை வெளிப்படையாகக் காந்தியே ஒப்புக்கொண்டுவிடுவார். இன்று காந்தியைப் பற்றி ஏராளமான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன, ஏராளமான அவதூறுகள் வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை காந்தி நமக்குச் சொல்லியிருக்காவிட்டால் தெரிந்திருக்காது என்பதுதான் உண்மை.“ எனத் தனது கட்டுரையில் ஆசை காந்தி பற்றித் தெரிவிக்கிறார். இந்த நூலின் சாராம்சத்திற்கு இந்த இரண்டு பத்திகளே எடுத்துக்காட்டு

காந்தியை அறிந்து கொள்வதற்கான சிறந்த நூல்.

ஆசைக்கு என் அன்பும் வாழ்த்துகளும்.

4.கல் முதலை ஆமைகள் (ஷங்கர் ராமசுப்ரமணியன்)

ஷங்கர் ராமசுப்ரமணியனின் புதிய கவிதைத்தொகுப்பு கல் முதலை ஆமைகள் க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

சமகால உலகக் கவிதைகளின் வரிசையில் வைத்துக் கொண்டாட வேண்டிய தொகுப்பிது..

110 பக்கங்கள் கொண்ட சிறிய கவிதைநூல். ஷங்கர் ராம சுப்ரமணியனின் கவித்துவம் தமிழ் மரபிலிருந்து தனது கிளைகளை விரித்துக் கொண்டிருக்கிறது.

அசலான கவிமொழியும் பாடுபொருளும் கொண்ட இக்கவிதைகள் ஆழமும் செறிவும் கொண்டிருக்கின்றன. காலை வெளிச்சத்தைப் போலத் தூய்மையும் பேரழகும் கொண்டதாகயிருக்கின்றன

வாசிக்கும் போது மனதில் சலனத்தை ஏற்படுத்தும் இக்கவிதைகள் வாசித்து முடிந்தவுடன் வேறொரு அமைதியை அடைகின்றன என்று தனது முன்னுரையில் கவிஞர் ஆனந்த் குறிப்பிடுகிறார்.

அது முற்றிலும் உண்மை என்றே  உணர்ந்தேன்

5.கற்பனையான உயிரிகளின் புத்தகம் (கார்த்திகை பாண்டியன்)

The Book of Imaginary Beings என்ற போர்ஹெஸின் கற்பனை உயிரினங்களைப் பற்றிய கையேட்டினைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார் கார்த்திகை பாண்டியன்.

தனது சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளின் வழியே தமிழ் இலக்கிய உலகினை வளப்படுத்தி வரும் அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள், சீனாவின் புராணங்கள், இஸ்லாமிய மற்றும் பௌத்த சமயத்தில் இடம்பெற்றுள்ள கற்பனையான விலங்குகள் எனப் பல்வகையான கற்பனா ஜீவராசிகளைக் குறித்த ஒரு கையேட்டினை உருவாக்கியதன் மூலம் புனைவின் விசித்திரங்களை அடையாளப்படுத்துகிறார் போர்ஹெஸ்.

மொழிபெயர்ப்பதற்குப் பெரும் சவாலான இந்தப் புத்தகத்தை மிகுந்த கவனத்துடன், நுட்பத்துடன் கார்த்திகை பாண்டியன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

சிறப்பாக நூலை வெளியிட்டுள்ள எதிர் வெளியீட்டிற்கும் என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

6.ஓவியம் : தேடல், புரிதல்கள் (௧ணபதி சுப்பிரமணியம்)

நவீன ஓவியங்கள் குறித்த நூல்கள் தமிழில் குறைவு. அதிலும் மேற்கத்திய ஓவியங்களின் வகைமை மற்றும் சிறப்புகள் குறித்து எழுதப்பட்ட நூல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஓவியம் : தேடல்கள், புரிதல்கள் என்ற நூலை ஓவியர் கணபதி சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.

இதில் ஓவியங்கள் குறித்த நாற்பது கட்டுரைகள் உள்ளன. நூலை மிகச்சிறப்பாக வடிவமைத்துள்ளார்கள்.

ஓவியங்களின் அடிப்படைகள்,  ஓவியத்தினை ரசிக்கும் விதம். அழகியல், கோட்பாடுகள். உலகப்புகழ் பெற்ற ஓவியர்களின் ஆளுமைகள் என்று ஓவிய உலகின் முப்பரிமாணத்தையும் விவரிப்பதாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

“ஒரு உருவ ஓவியத்திலுள்ள கோடுகளின் தடிமன் அந்த உருவத்தின் வடிவத்திற்கு ஏற்ப மாறுகின்றபொழுது அது நம் கண்களின் கவனத்தை ஈர்க்கத்தொடங்குகிறது ஓவியத்தில் அமைந்துள்ள வடிவங்களும் (Shapes and Forms) அவை தொகுக்கப்பட்டிருக்கும் விதங்களுமே அதன் கட்டமைபிற்குப் பெரிதும் காரணமாகின்றன.

இரு வடிவங்கள் ஒரே நிறத்திலோ, ஒளித்திண்மயிலோ இருந்தால் அங்கே ஒரு தட்டைத்தன்மை உருவாகும். மாறாக இரு மாறுபட்ட நிறங்களோ, ஒளிதிண்மையோ இந்த இருவடிவங்களுக்கு இருக்கும் பொழுது அங்கே ஒரு விசை (Force) உருவாகி வலிமையினை (Strength) ஏற்படுத்துகின்றது. அதுபோலவே வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று இணையும்பொழுது ஒரு தெளிவான ஊடுருவல் (penetration or interlocking) ஏற்படும்பொழுது ஒரு ஸ்திரத்தன்மை அந்த கட்டமைப்பிற்கு ஏற்படுகின்றது“  என ஒரு கட்டுரையில் சுப்ரமணியம் கூறுகிறார்.

எவ்வளவு அழகாக, எளிமையாக, தமிழ்  கலைச்சொற்களைக் கொண்டு விளக்குகிறார் பாருங்கள். அது தான் நூலின் சிறப்பு.

சுயமாக ஓவியம் கற்றுக் கொண்டு நவீன ஓவியராகத் திகழும் கணபதி சுப்பிரமணியம் தனது தீவிர கலைஈடுபாட்டின் வெளிப்பாடாக இந்நூலைக் கொண்டு வந்திருக்கிறார்.

அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

கலை நேர்த்தியுடன் நூல்களை வெளியிட்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கு அன்பும் வாழ்த்துகளும்

7.தம்மம் தந்தவன் (காளிப்ஸ்ராத்)

விலாஸ் சாரங் எனக்குப் பிடித்த மராத்தி எழுத்தாளர். ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் எழுதியவர். மும்பையில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை செய்தவர்.

இவரது சிறுகதைகள் The Women in Cages: Collected Stories  என்ற தொகுப்பாக வந்துள்ளது. அது குறித்து பத்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரை எழுதியிருக்கிறேன்.

விலாஸ் சாரங் எழுதிய The Dhamma Man என்ற நூலை தம்மம் தந்தவன் என்ற பெயரில் காளிப்ரஸாத் மொழியாக்கம் செய்திருக்கிறார்

நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது

புத்தரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்நூல்  ஒரு மகனாக, கணவனாக, தந்தையாகப் புத்தர் ஏற்படுத்திய விளைவுகளை முதன்மைப்படுத்துகிறது. புத்தர் எவ்வாறு. தம்ம நாயகனாக உருமாறுகிறார் என்பதை விவரிக்கிறது.

புத்தன் ஒரு அவதார புருஷர்  என்பதற்கு மாற்றாக, சுகதுக்கங்களை அறிந்த ஒரு மனிதன் எவ்வாறு ஞானியாகிறான் என்ற கோணத்தில் சாரங் விவரிப்பதே இதன் தனித்துவம்.

புத்தரின் வாழ்வை கவித்துவமான மொழியில்  சாரங் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறந்த மொழியாக்கம் நூலினை தமிழ்ப் படைப்பு போல வாசிக்கச் செய்கிறது.

காளி ப்ரஸாத்திற்கு மனம் நிரம்பிய பாராட்டுகள்.

8.வாரணாசி (பா. வெங்கடேசன்)

புனைவின் புதிய உச்சங்களை உருவாக்கும் தனித்துவமிக்கப் படைப்பாளி. பா.வெங்கடேசன். இவரது தாண்டவராயன் கதை, பாகீரதியின் மதியம் ஆகிய நாவல்கள் முற்றிலும் புதிய புனைவுவெளியைக் கொண்டவை.

வெங்கடேசனின் மூன்றாவது நாவலான ‘வாராணசி’காதலையும் காமத்தையும் கனவுகள் மற்றும் ரகசிய இச்சைகளின் வழியே ஆராய்கிறது. வாரணாசியை ஒரு குறியீடு போலவே வெங்கடேசன் முன்வைக்கிறார்

பவித்ரா தன் கணவனைப் பழிவாங்குவதற்காகத் தன் உடலின் நிர்வாணத்தைப் புகைப்படமாக்கி வெளியிடுகிறாள். உடலுறவு மறுக்கப்படுவதும் உடல் காட்சிப்படுத்தபடுவதும் பவித்ராவின் இரண்டு பக்கங்கள் போல முன்வைக்கப்படுகின்றன.

காமத்தின் கொந்தளிப்பை ஆராயும் இந்நாவல் இதிகாசம், புராணீகம் தொன்மம், வரலாறு எனப் பல்வேறு அடுக்குகளை நினைவின் வழியாகக் கலைத்துப் போடுகிறது.

காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. 

9.உலகின் மிக நீண்ட கழிவறை (அகர முதல்வன்)

கவிஞரும் சிறுகதையாசிரியருமான அகரமுதல்வன் ஈழப்போர் குறித்த காத்திரமான படைப்புகளை எழுதிவருபவர்.

உலகின் மிக நீண்ட கழிவறை அகரமுதல்வனின் குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு . இதனை நூல் வனம் வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்து குறுநாவல்களின் தொகுப்பு

‘அகல்’ குறுநாவல் தடுப்பு முகாமில் மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞனின் கடந்தகால நினைவுகளையும் நிகழ்கால சிக்கல்களையும் விரிகிறது. ஓரிடத்திலும் நிலை கொள்ள முடியாத அகதியின் பரிதவிப்பை, துயரத்தைப் பேசுகிறது ‘எனக்குச் சொந்தமில்லாத பூமியின் கடல். சந்தேகத்தின் கண்கள் தன்னை எப்போதும் ஊடுருவிக் கொண்டிருப்பதை அகதி முழுமையாக உணருகிறான். அகதிக்கு மீட்சி கிடையாது. அவன் அலையவிதிக்கபட்டவன் என்கிறார் அகரமுதல்வன்.

‘உலகின் மிக நீண்ட கழிவறை  முள்ளி வாய்க்காலின் முன்னும் பின்னுமான கால மாற்றங்களைப் பேசும் முக்கியமான கதை. குளத்தில் புதைக்கப்பட்ட உடல்களுடன் புதைக்கப்பட்ட உண்மைகளும் கலந்திருக்கின்றன என்கிறார்.

போர்நிலத்தின் நினைவுகளுக்கும், புலம்பெயர்ந்த வாழ்க்கையின் நெருக்கடிகளுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அகரமுதல்வன் இந்தக் குறுநாவல்களின் வழியே நீதி கேட்கும் குரலை வலிமையாக ஒலிக்கிறார்.

அகரமுதல்வனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்

10.மதுரை அரசியல் வரலாறு 1868  (ச. சரவணன்)

Political History of the Madura Country J.H. Nelson மதுரையின் அரசியல் வரலாற்றை விவரிக்கும் முக்கியமான ஆவணம்.

இதனை  ச. சரவணன் மொழியாக்கம் செய்திருக்கிறார்

மதுரையின் அரசியல் வரலாறு 1868 என அந்த நூலை சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள்

மதுரையைப் பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் எனப் பலரும்  ஆட்சி செய்திருக்கிறார்கள். அந்த நாட்களில் நடந்த போர்கள். மற்றும் கிறிஸ்துவ மெஷினரிகளின் வருகை. சமய மாற்றம் சார்ந்த சண்டைகள். மதுரை நகரில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள்  இவற்றை நெல்சன் விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறார்.

வரலாற்றில் விருப்பமுள்ளவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

11.தீக்கொன்றை மலரும் பருவம் (லதா அருணாச்சலம்)

நைஜீரியா எழுத்தாளர் அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய Season of Crimson Blossoms நாவலின் தமிழாக்கமே தீக்கொன்றை மலரும் பருவம் நைஜீரியாவில் 2015ல் வெளியான இந்நாவலை லதா அருணாசலம் மொழியாக்கம் செய்திருக்கிறார். இவர் பல ஆண்டுகள் நைஜீரியாவில் வசித்தவர் என்பதால் நாவலின் நுட்பங்களை மிகச்சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது

Season of Crimson Blossoms 2016 ஆம் ஆண்டிற்கான நைஜீரியாவின் உயரிய இலக்கிய விருதினை வென்றிருக்கிறது.

நாவலின் கதை 2009 மற்றும் 2015க்கு இடையில் நடைபெறுகிறது. அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பிந்த்தா ஜுபைரு என்ற 55 வயதுப் பெண்ணை மையமாகக் கொண்ட கதை, ஹஸன் ’ரெஸா என்ற போதைப் பொருள் விற்பவனுடன் அவளுக்கு எதிர்பாராத உறவு ஏற்படுகிறது. இந்த உறவின் பின்புலத்தில் சமகால அரசியல் நிகழ்வுகள். போதை மருந்து கடத்தல் என நைஜீரியாவின் சமகால வாழ்வையும் விசித்திரமான காதலின் மூர்க்கத்தையும் இணைத்து விவரிக்கிறது இந்நாவல்.

12.ஒரு சிற்பியின் சுயசரிதை (கிருஷ்ண பிரபு)

ஓவியரும் சிற்பியுமான எஸ். தனபாலின் சுயசரிதை ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்றது. அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து எடிட் செய்து, தேவையான புகைப்படங்களைத் தேடிக்கண்டுபிடித்து  கிருஷ்ணபிரபு ‘ஒரு சிற்பியின் சுயசரிதை!’ எனத் தனி நூலாகக் கொண்டு வந்திருக்கிறார்.

இந்நூலை சிறுவாணி வாசகர் மையத்துடன் இணைந்து காலச்சுவடு பதிப்பகம்

தனபால் சென்னை ஒவியக்கல்லூரியில் பயில்வதற்குச் சென்ற நாட்கள். ராய் சௌத்ரியோடு அவருக்கு ஏற்பட்ட நட்பு. சிற்பத்துறையின் மீது கொண்ட ஈடுபாடு. அவரோடு படித்த ஒவியர்கள், கல்லூரி படிப்பு முடித்த பிறகு நடனக்கலைஞராக அவர் நிகழ்ச்சிகள் செய்தது. அவர் உருவாக்கிய முக்கியச் சிற்பங்கள் எனத் தனபாலின் கலை ஆளுமையைச் சிறப்பாக விளக்குகிறது இந்நூல்.

சிற்பி தனபால் குறித்த சிறந்த நூலின் பதிப்பாசிரியர் கிருஷ்ண பிரபுவிற்கு மனம் நிரம்பிய வாழ்த்துகள். 

நன்றி : சந்திரபிரபா ராமகிருஷ்ணன் முகநூல் பக்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com