'தினமும் வால்நட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது'

வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.
'தினமும் வால்நட் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது'

வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகளை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம் என்று ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது. 

தற்போதைய நவீன காலகட்டத்தில் உணவு முறைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனிதனுக்கு நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முறையான உணவுப் பழக்கவழக்கங்களில் சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலமாக நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்களும் பல்வேறு ஆய்வு முடிவுகளும் வலியுறுத்துகின்றன.

அந்த வகையில், அமெரிக்காவின் பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வால்நட் எனப்படும் அக்ரூட் பருப்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லதா என ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

அதன்படி, தினமும் வால்நட் எனும் அக்ரூட் பருப்புகளை சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான நோய்களின் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. மேலும், குடலில் உள்ள கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதோடு, நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும். இந்த பாக்டீரியாக்கள் குடல் மற்றும்  இதயத்தின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், 30 முதல் 65 வயதிற்குட்பட்ட உடல் பருமன் கொண்ட 42 பேர் பங்கேற்றனர். இவர்கள் 6 வாரங்கள் வீதம் மூன்று ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டனர். முதல் ஆய்வில் முழுமையாக அக்ரூட் பருப்புகளும், இரண்டாம் ஆய்வில் அக்ரூட் பருப்புகளில் உள்ள ஆல்பா-லினோலெனிக் அமிலம் கொண்டுள்ள இதர பொருட்கள், மூன்றாவது ஆய்வில் அக்ரூட் பருப்புகள் இல்லாத சராசரி உணவுகளும்  வழங்கப்பட்டன.

இறுதியில், உணவின் ஒரு பகுதியாக, நாள் ஒன்றுக்கு 50 - 80 கிராம் அக்ரூட் பருப்புகளை சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதற்கும் சிறந்த வழி என்று ஆராய்ச்சியாளர் கிறிஸ்டினா தெரிவித்தார். 

அதுமட்டுமின்றி, வால்நட்ஸில் உள்ள ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ரத்த அழுத்தம், பக்கவாதம், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்பது, கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து உடல் எடையை குறைத்தல் உள்ளிட்டவைகளுக்கு வழிவகுக்கிறது என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com