சாலையை கடக்கும்போது சாட்டிங் செய்வதுதான் அதிக ஆபத்து!
By DIN | Published On : 05th February 2020 01:25 PM | Last Updated : 05th February 2020 01:25 PM | அ+அ அ- |

சாலையைக் கடக்கும்போது மொபைல் போனில் மெசேஜ் அனுப்பிக்கொண்டே சென்றால் உயிர்போகும் நிலை கூட ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட் போனின் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் விலையும் மலிந்து வருவதால் வீட்டில் உள்ள அனைவருமே தனித்தனியே மொபைல் போன் வைத்திருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுபவை சமூக ஊடகங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என சமூக வலைத்தள போதைக்கு அடிமையாகியுள்ளனர். இரவு, பகல் பாராது பல மணி நேரங்கள் மொபைல் போனை பயன்படுத்தும் பழக்கம் பொதுவாகவே காணப்படுகிறது.
ஓய்வு நேரங்கள் மட்டுமின்றி, பொது இடங்களில், அதாவது பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போதும், சாலையைக் கடக்கும் போதும் கூட பலர் மொபைல் போனில் பேசிக்கொண்டே செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. ஏன், அந்தப் பட்டியலில் நாமும் ஒருவராகக்கூட இருக்கலாம். இந்நிலையில், அவர்களுக்கெல்லாம் ஆய்வாளர்கள் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றனர் சாலையைக் கடக்கும்போது முக்கியமாக மொபைல் போனில் மெசேஜ் அனுப்பிக்கொண்டே சென்றால் உயிர்போகும் நிலை கூட ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர்.
சாலையைக் கடக்கும் போது போனில் பேசிக் கொண்டே செல்வது, பாட்டு கேட்டுக் கொண்டு செல்வதுகூட பரவாயில்லை. மெசேஜ் அனுப்பிக்கொண்டே சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
போனில் பேசிக்கொண்டே, பாட்டு கேட்டுக்கொண்டே சென்றால் கூட நமது கவனம் கொஞ்சமாவது வெளியில் இருக்கிறது. அதாவது, சிறிதளவு கவனச்சிதறலே ஏற்படுகிறது. ஆனால், மெசேஜ் அனுப்பிக்கொண்டே சென்றால் நம்முடைய முழுக்கவனமும் போனில் இருப்பதால் அருகில் வரும் வாகனத்தின் ஒலி கூட சிலரது காதில் விழுவதில்லையாம். இவ்வாறான சூழ்நிலை தொடர்ந்தால், கண்டிப்பாக மொபைல் போன்களின் பயன்பாட்டினால் உயிரிழப்புகள் அதிகமாகும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பாட்டு கேட்டுக்கொன்டே செல்வதை விட, மெசேஜ் அனுப்பிக்கொண்டே செல்வது இரு மடங்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.
எனவே, பொது இடங்களில் செல்லும் போது, முக்கியமாக சாலையை கடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிருங்கள்..!
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...